Friday, January 22, 2010

ஒரு துளி விஷம் கொடுங்களேன்... ... ...


உலகில் பாவப்பட்ட ஜென்மங்களான ஆதரவற்ற ஈழத் தமிழனாய்த் தான் நானும் பிறந்தேன். எனக்கு இரண்டு அக்கா மற்றும் ஒரு அண்ணன். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மக்கட்செல்வத்தில் எனக்கு குறையே இல்லாமல் ஏழு குழந்தைகள். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இரண்டு மகன்களுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம்.

சமாதான காலத்தில் ஈழம் போன்றதொரு மகிழ்ச்சியான இடத்தை நீங்கள் எங்கேயும் காண முடியாது. புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் அனைவரும் குறையின்றி மகிழ்ச்சியாகவே இருந்தோம். எங்கள் தேசியத் தலைவர் இருக்கையில் எங்களுக்கென்ன குறை ?

2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் எப்போதும் என்னை அழைப்பது போலவே சமையல் வேலைக்கு அழைத்தனர். இரணியத் தீவிலிருந்து, யாழ்ப்பாணம் வரை செல்ல வேண்டும், படகில் சமைக்க வேண்டும் என்று கூறினர். "அதுக்கென்ன, வாருங்கள் போவோம்" என்று சம்மதித்தேன்.

படகில் ஏறும்போது இரவு 9 மணி இருக்கும். படகில் ஏறியதும் எப்போதும் எங்களுடன் பயணிக்கும் மகிழ்ச்சியும் பயணிக்கத் தொடங்கியது. முதலில், ஈழத்தின் விளைந்த சிறப்பான தேயிலையில் அனைவருக்கும் தேநீர் தயாரித்துத் தந்தேன்.

"என்ன அண்ணே, இவ்வளவு சிறப்பாக தேநீர் போட எங்கே கற்றுக்கொண்டீர்கள் ? " என்றார் புருஷோத்தமன். "12 வயசுலேர்ந்து சமைத்துக் கொண்டுருக்கிறேன் அண்ணா" என்று கூறினேன். சகாயம் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் " என்று பாடத் தொடங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து கொண்டோம்.


திடீரென்று, எங்களை நோக்கி வந்த வெள்ளைப் படகு ஒன்று எங்கள் படகின் மீது வெளிச்சம் பாய்ததது. நாங்கள் படகை நிறுத்தினோம். "நீங்கள் இந்திய எல்லையில் இருக்கிறீர்கள்" என்று இரண்டு வெள்ளுடை தரித்த அதிகாரிகள் அதிகாரத் தொனியில் மிரட்டினர்.

"அய்யா இது சர்வதேச எல்லை, நாங்கள் இலங்கை எல்லைக்கு அருகில்தான் இருக்கிறோம்" என்று எங்களுடன் இருந்த புருஷோத்தமன் கூறினார். "உடனடியாக எங்கள் படகை பின் தொடருங்கள் " என்று கட்டளையிடப்பட்டது. அந்த அதிகாரிகளுள் ஒருவர் துப்பாக்கியை எடுத்து நீட்டினார்.

அமைதியாக இந்தியப் படகை பின்தொடர்ந்தோம்.


பிப்ரவரி 8ம் தேதி சென்னை வந்தடைந்தோம். சென்னை வந்தடைந்ததும் எங்களை சென்னை நகரில் உள்ள மிதக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கே ஒரு இருட்டறையில் அடைக்கப் பட்டோம்.


காவல் நிலையத்தில் அடைக்கப் பட்டாலும், தாய் தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற நிறைவு உணர்வே ஏற்பட்டது. இங்கே, தமிழனத் தலைவர் கலைஞர் இருக்கிறார். அய்யா நெடுமாறன் இருக்கிறார்.

ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க தமிழகமே இருக்கிறது, பிறகென்ன கவலை நமக்கு என்ற எண்ணமே ஏற்பட்டது.


சீருடை அணிந்தும், அணியாமலும் பல அதிகாரிகள் எங்களை விசாரித்தனர். விசாரித்தவர்கள் அதிகாரிகள் என்பது காவலர்கள் அவர்களிடத்தில் காட்டிய பணிவிலும், அதிகாரிகளின் அதிகாரத் தோரணையிலும் தெரிந்தது.

ஏறக்குறைய 5 நாட்கள் எங்களை வைத்து விசாரித்தனர். கடைசியாக எங்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப் போகிறார்கள் என்று தெரிய வந்தது. அப்போதுதான் எங்களுடன் இருந்த புருஷோத்தமன் அங்கே இருந்த உயர் அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டார்.

"சார், ஒரு நிமிஷம்." "என்னடா ?" என்ற அதிகாரக் குரல்தான் பதிலாக வந்தது. "சார், ஒரு விஷயம் சொல்லணும்" "என்ன புதுசா சொல்லி புடுங்கப் போற ?" "ஐபி, ரா" "வெல்லாம் விசாரிச்சுட்டு போயிட்டாங்க, இப்போ என்ன சொல்லப் போற ?" என்றார்.

"நாங்க வந்த போட்ல..... "

"நீங்க வந்த போட்ல .. ... ?" "அந்த அரிசி மூட்டை, வெல்லம், சர்க்கரை எல்லாத்தையும் கோர்ட்ல காட்ட மாட்டோம்" அதத்தானே சொல்ல வந்த " என்றார் அந்த அதிகாரி.

"இல்ல சார். நாங்க வந்த போட்ல வெடிப்பொருளும், ஆயுதங்களும் இருக்கு" என்று புருஷோத்தமன் கூறினார்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அவநம்பிக்கை தெரிந்தாலும், அச்சம் அதைவிட அதிகம் தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்திற்கு அறை வெறிச்சோடிக் கிடந்தது. அது வரை, நாங்கள் வந்த படகில் ஏறி பேசிக்கொண்டிருந்த காவலர்கள் அனைவரும், படகை விட்டு “அய்யோ அம்மா“ என்று அலறி ஓடினர் என்று கேள்விப்பட்டோம்.

உடனடியாக அந்த அதிகாரி யார் யாரிடமோ பதட்டத்துடன் போனில் பேசினார். 10 நிமிடத்துக்குள் ஒரு பெரிய அதிகாரிகளின் பட்டாளமே வந்தது. வந்த அதிகாரிகள் பதட்டத்துடன் புருஷோத்தமனை அணுகி விசாரித்தார். புருஷோத்தமனும் ஆமாம் என்று அவரிடம் கூறினார்.

உடனடியாக பரபரப்படைந்த அதிகாரிகள் கூட்டம் ராணுவத்துக்கு போன் போட்டது போல் தெரிந்தது.

ஏற்கனவே கோர்ட்டுக்கு தகவல் சென்று விட்டதால், வேறு வழியின்றி எங்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.

பிறகு 2 நாட்களுக்குப் பிறகு, அந்த வெடிப்பொருட்களையும், துப்பாக்கிகளையும், படகிலிருந்து அப்புறப்படுத்தினர் என்று கேள்விப்பட்டேன்.

புழல் சிறையில் அனைவரும் அடைக்கப் பட்டோம்.

புழல் சிறை புதிதாக கட்டப் பட்டதாம். அழகாகத்தான் இருந்தது. சிறை அதிகாரிகள் அதிக விரோதம் இல்லாமல் இருந்தனர். புழல் சிறைக்கு வந்த பிறகு தான் கைதிகளுக்குள் பாரபட்சம் என்பதை கண்டேன்.

சிறை விதிகளின்படி வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கு, வாரம் இரு முறை முட்டையும், பாலும், ப்ரெட்டும் வழங்கப் பட வேண்டும். போதைப் பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறைக்குள் இருந்த நைஜீரியா, சீனா, கென்யா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப் பட்டு வந்தது.

நாங்களும் வெளிநாட்டவர்கள் தான், எங்களுக்கும் இந்த சலுகைகளை வழங்குங்கள் என்று கேட்டபோது, நீதிமன்றத்தில் ஆணை பெறுங்கள் என்ற பதில்தான் வந்தது. ஆனால் கென்யா, நைஜீரியா நாட்டவர்களுக்கெல்லாம் நீதிமன்ற ஆணை இல்லாமலேயே இந்த சலுகை வழங்கப் பட்டது.


முதன் முறையாக தாய் தமிழகத்திலேயே அந்நியமாக உணர்தோம். சிறைக்குள் இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம். ஆனாலும் தமிழகத்தில் நமக்கு பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.


45 நாட்கள் கழிந்தது. “ஜெயிலர் கூப்டுறாரு“ என்று வார்டர் அழைத்தார். கைது செய்யப் பட்ட அனைவரையும் ஜெயிலர் ஏன் கூப்பிடுகிறார் என்ற சந்தேகத்தோடு சென்றோம்.
“இதில் கையெழுத்து போடுங்க“ என்று கூறினார் ஜெயிலர். “என்ன சார் இது“ என்று சகாயம் ஜெயிலரிடம் கேட்டார்.

“உங்களையெல்லாம் ஒரு வருஷம் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்ணியதுக்கான ஆணை இது, இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டோம்னுதான் இப்போ கையெழுத்து போட்றீங்க“ என்று ஜெயிலர் கூறியது எங்கள் மனதில் ஆயிரம் ஈட்டிகளை ஒரே நேரத்தில் இறக்கியது. என்ன இது ?

நம் தாய் தமிழகத்தில் நமக்கு இந்த நிலையா ? மவுனமாக யாருடனும் பேசிக்கொள்ளாமல் செல்லுக்கு திரும்பினோம்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து புகழேந்தி என்ற வழக்கறிஞர் பணம் ஏதும் பெறாமலேயே எங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தார்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு எனக்கு மட்டும் சிறையை விட்டு வெளியே வந்தேன். சென்னை என்னை வரவேற்க காத்திருக்கிறது என்றே நம்பி சிறையை விட்டு வெளியே வந்தேன்.


வெளியே வந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சிறைக்கு வெளியே இருந்த க்யூ பிரிவு போலீசார் உடனடியாக என்னை ஜீப்பில் ஏறச் சொன்னார்கள். “சார் எனக்கு பெயில் கிடைச்சுடுச்சு சார்“ “திருப்பி ஏன் சார் கைது பண்றீங்க ? “ என்று கேட்டதற்கு, “பேசாமல் வண்டியில உக்காரு“ என்ற பதில் வந்தது.


இலங்கையில், வெள்ளை வேனில் தமிழர்களை ஏற்றி நடக்கும் படுகொலைகளைப் பற்றி கேள்விப் பட்டிருந்த எனக்கு, மரண பயம் பிடித்து ஆட்டியது.


அமைதியாக அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய 2 மணிநேரம் கழித்து, செங்கல்பட்டு என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். அது இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்று சொன்னார்கள்.


“அப்பாடி, ஒரு வழியா முகாமுக்கு வந்தாச்சு“ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். சிறிது நேரத்தில் அது முகாம் இல்லை, இதுவும் ஒரு சிறைச்சாலை என்று கூறினார்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது.


இதற்குள், ஈழத்தில் போர் கடுமையாகி ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று தினந்தோறும் வரும் செய்திகள், என் குடும்பத்தைப் பற்றிய கவலையை அதிகரித்தது. ஊரில் உள்ள மனைவி மக்கள் என்ன கதிக்கு ஆளாகியிருப்பார்களோ என்ற கவலை தாங்க முடியவில்லை.


முகாமை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. உள்ளேயும் யாரையும் அனுமதிப்பதில்லை. மீண்டும் நம்மை ஏன் சிறை வைத்திருக்கிறார்கள் என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.


சில நாட்களில், முகாமில் இருந்த அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஏறக்குறைய 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் விடுவிக்கப் படப் போகிறோம் என்ற செய்தி வந்தது.

மகிழ்ச்சியோடு, இருந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி வந்தது. “உன் பேர் விடுவிக்கப் படப் போறவங்க லிஸ்டுல இல்லப்பா“ என்று க்யூ ப்ரான்ச் அதிகாரி கூறினார்.
“என்ன செய்வது என்றே புரியவில்லை. ஈழத்திலாவது சுதந்திரமாக இருந்தோம். தாய் தமிழகத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். “ “எதற்காக நமக்கு இந்த நிலை “ என்று புரியவேயில்லை.

திடீரென்று மூச்சு விட சிரமமாக இருந்தது. நெஞ்சில் வேறு வலி வந்து கொண்டே இருந்தது. “சார், மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது சார். மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க சார்“ என்று அதிகாரியிடம் கேட்டேன். “நாளைக்கு போகலாம்பா“ என்று கூறினார்.
சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

ரத்தம், எக்ஸ்ரே என்று ஏராளமான பரிசோதனை எடுத்தார்கள். எனக்கு இருமலும், நெஞ்செரிச்சலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


இரண்டு நாள் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் வந்து “ஆறுமுகம், உனக்கு, நுரையீரலில் புற்றுநோய் வந்திருக்குப்பா“ என்றார். தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது எனக்கு. நினைவு திரும்பியபோது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை மாற்றினார்கள்.
அங்கே, கைதிகள் வைக்கப் படும் ஒரு மோசமான பாழடைந்த வார்டில் என்னை அடைத்தார்கள். டாக்டர்களும் நர்சுகளும், அவ்வப்போது வந்து பார்த்தார்கள்.


மறுநாள் வந்த க்யூ ப்ரான்ச் அதிகாரி, “ஆறுமுகம், உன்னை முகாமிலிருந்து விடுவிச்சு அரசு உத்தரவு போட்டுடுச்சுப் பா“ இனிமே நீ முகாமுக்கு போக வேண்டியதில்லை“ என்று சொன்னார்.

“சார் எனக்கு யாருமே இல்லை சார்“ “நான் என்ன சார் பண்ணுவேன்“ என்றேன். “நாங்க என்னப்பா பண்றது“ “அரசாங்க உத்தரவு மதிச்சுத்தானே ஆகணும்“ “இப்போ பாரு, உனக்கு காவலுக்கு 5 பேரை ட்யூட்டி போட வேண்டியதா இருக்கு“ “முகாம விட்டு உன்னை வெளியே அனுப்பிட்டா நாங்க வரவேண்டியதில்லை பாரு“ “அதான் அரசாங்கம் இப்படி உத்தரவு போட்டிருக்கு “ என்றார்.


நுரையீரலில் புற்று நோய் என்பதால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் மரணம் அநாதை மரணம்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. பிறகு எதற்காக என்னை இன்னும் மருத்துவமனையில் வைத்து சித்திரவதை செய்கிறீர்கள். அதனால்தான் கேட்கிறேன்.


“எனக்கு ஒரு துளி விஷம் கொடுங்களேன்… … … “

இது கதை அல்ல. இப்போது போனாலும் இன்னும் ராயப்பேட்டை மருத்துவமனையில் இந்த ஆறுமுகத்தை பார்க்கலாம். ஈழத் தமிழருக்காக போராடும் தமிழினத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?

ஈழத் தமிழர்களுக்காக தமிழினத்தின் ஒரே தலைவன் எப்படி பாடுபடுகிறார் பார்த்தீர்களா ?


ஆறுமுகம் அனாதையாகத்தான் சாவார்.
அவர் பெயரென்ன

அழகிரியா ?

ஸ்டாலினா ?

செல்வியா ?

கனிமொழியா ?

தமிழரசா ?

செல்வந்தராய் வாழ ?




சவுக்கு

2 comments:

  1. சவுக்கு சார்..
    பங்களாதேஸ் பிரச்சனைக்கு இந்தியா உதவியது...ஏன்னா அவங்க தமிழனுக இல்லை..

    ஆஸ்திரேலியால இந்தியன் அடிவாங்கின போது , மத்திய அரசு துடித்தது..ஏன்னா அங்க அடி வாங்கினது சிங்-குக


    இங்கதான் மத்திய அரசுக்கு முன்னாடி . நாலு
    காலைத் தூக்கிட்டு பதவிக்கு அலைவதற்கே
    நேரம் பற்றவில்லை..இவங்க தமிழின காவலர்களாம்..பன்னாடைக...

    இதுக்கெல்லாம் எப்ப விடிவு காலம் வருமோ?..

    ReplyDelete
  2. good.Can i do anything for this?

    ReplyDelete