Wednesday, January 27, 2010

சிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?
இப்போதைய திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சட்டமன்றத்தில் “சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?

ஜெயலலிதா கேட்டது எந்த தொனியில் என்றால் சிபிஐ வசம் ஒரு விசாரணையை ஒப்படைத்தால், அவர்கள் மட்டும் என்ன நேர்மையாகவா விசாரிக்கப் போகிறார்கள் என்ற தொனிதான் அது.

அந்தத் தொனி உண்மை என்பது இன்று தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆயிருக்கிறது.

2005ல் ஹரியானா மாநிலத்தில் கோஹானா என்ற தலித் குடியிருப்பு சக்தி வாய்ந்த ஜாட் வகுப்பு மக்களால் தீக்கிரையாக்கப் பட்டது. ஹரியானாவில் ஜாட் வகுப்பு மக்களுக்கும் தலித் மக்களான வால்மீகி இன மக்களுக்கும் நடந்த மோதலில் 60க்கும் மேற்பட்ட வால்மீகி இன மக்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. 1000 முதல் 1500க்கும் மேற்பட்ட ஜாட் இன மக்கள் கூட்டமாக வந்து பட்டப் பகலில் குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தியதை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பின. அதன் பிறகு அங்கு சென்ற எழுத்தாளர்கள், நடுநிலையாளர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழுவும், இத்தகவலை உறுதி செய்தது.

செப்டம்பர் 2009ல் இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ என்ன சொல்லியது தெரியுமா ?


நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தலித்துகளே தங்கள் குடிசைகளை கொளுத்திக் கொண்டார்களாம். எப்படி இருக்கிறது ?


இதுதான் சிபிஐன் லட்சணம்.


மதுரையில் தினகரன் அலுவலகத்தில் பங்காளிச் சண்டையில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் தங்கள் உயிரை விட்டதை அனைத்து ஊடகங்களுமே ஒளிபரப்பின. உடனடியாக கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார் என்றாலே சிபிஐ ன் லட்சணம் என்னவென்பது புரியும். சிபிஐ உண்மையை கண்டுபிடித்து விடும் என்பது தெரிந்தால் கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவாரா ? தன் மகன் அல்லவா சிறைக்குப் போக வேண்டியிருக்கும்.


கருணாநிதி நினைத்தது போலவே, இவ்வழக்கில் சிபிஐ சேர்த்த மொத்தம் உள்ள 88 சாட்சிகளில் 87 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறின. வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். யார் மீதும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை.


அப்போ தினகரன் அலுவலக ஊழியர்கள் தாங்களாகவே தீக்குளித்து இறந்தார்களா ?


போபர்ஸ் வழக்கை சிபிஐ கையாண்ட விதம் குறித்து நாடே அறியும்.


இப்போது, கடந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதல் தொடர்பாக சிபிஐ “புலனாய்வு“ நடத்தி தனது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தால் நீண்ட நாட்கள் விசாரணை செய்தபிறகு குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியம் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய நால்வர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 31 வழக்கறிஞர்கள் மேல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது சிபிஐ.


வக்கீல்கள் மட்டும் தவறு செய்யவில்லையா ? அவர்கள் மட்டும் என்ன யோக்கியமா ? என்று கேள்வி எழுப்புபவர்கள் சற்றே பொறுக்கவும்.


வக்கீல்கள் தவறு செய்திருக்கலாம். யாரும் மறுக்கவில்லை. அதற்காக அவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனால் வழக்கறிஞர்களை கண் மூடித்தனமாக வெறிப்பிடித்தது போலத் தாக்கியது யார் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு தான் தெளிவாக ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறதே ? பிறகு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?


4 உயர் அதிகாரிகள் மேல் இப்போது குற்றம் சுமத்தாமல், இந்த 4 அதிகாரிகளும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுமா சிபிஐ ?


இதில் மிகப்பெரிய கூத்து எதுவென்றால், வழக்கறிஞர்களோடு சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல் தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிக்கை தான். மூத்த வழக்கறிஞரான அவர், காவல்நிலையத்தை எரிக்க சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பதை விட ஒரு மிகப் பெரிய கட்டுக்கதையும், விஷமத் தனமும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சிபிஐ ன் குற்றப் பத்திரிக்கை பத்தி vii ல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர்இ 1545 மணிக்கு கைது செய்யப் பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு அழைத்துச் செல்லப் பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பத்தி ixல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர் மாலை 1714 மணி வரை காவல்துறையினர் மீது மற்ற வழக்கறிஞர்களோடு சேர்ந்து கல்லெறிந்தார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி viiசிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி ixஎப்படி இருக்கிறது சிபிஐ ன் திறமை ?


சங்கரசுப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றால், முதல் நாளே திட்டமிட்டு, ஏராளமான ஆயுதம் தாங்கிய காவலர்களை நீதிமன்ற வளாகத்திற்குள் கூட்டியதற்கு பெயர் என்ன ? வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் வளைத்து வளைத்து அடித்ததற்கு பெயர் என்ன ?


சிபிஐ சொல்லும் ஒரே ஒரு சாக்கு என்ன தெரியுமா ? உச்ச நீதிமன்றம், இந்த நான்கு அதிகாரிகள் மேல் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ளது என்பது தான்.


இது ஒரு அப்பட்டமான புளுகு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன தெரியுமா ?
In the meanwhile, operation of Clauses (b) and (c) of direction No. 3 under the heading 'Direction to the Government' shall remain stayed till further consideration. However, it is made clear that this order shall not prevent State Government from
taking appropriate action in accordance of law.

உச்சநீதிமன்றம் தடை விதித்த Clause (b) மற்றும் (c) என்ன தெரியுமா ?

(c) நீதிமன்றத்தால் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு என்று கண்டறியப்பட்ட நான்கு உயர் அதிகாரிகளின் மீதும் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(d) துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக நான்கு அதிகாரிகளும் பணி இடை நீக்கம் செய்யப் பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று எங்கே இருக்கிறது. மேலும், சட்டப் படி, இந்த நான்கு அதிகாரிகளின் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் Directions to CBI என்ற தலைப்பின் கீழ்,

In so far as, R.C.No.2(S)/2009/CBI/SCB /Chennai, registered against the Police, CBI is directed to proceed with the investigation in accordance with law

என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வில்லையே ?

எவன் அடி வாங்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயின்ட் கொடுக்க வருகிறானோ, அவன் மேலேயே கேஸ் போடும் தமிழ்நாட்டு போலீசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று சிபிஐ நிரூபித்து உள்ளது.

சிபிஐல் இப்போது இணை இயக்குநராக பணியாற்றி வரும், அசோக் குமாரும், வழக்கறிஞர் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையில் 3 வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதும், இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதும், தற்செயலாக நடந்த விஷயங்களாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே ?


சிபிஐ ல் வேலைப் பார்ப்பவர்களும் காவல்துறையினர் தானே ? மற்ற காவல்துறையினரிடம் உள்ள அதே கயமைத்தனம், அயோக்கியத்தனம், ஆளும் வர்க்கத்தை அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதம், உழைப்பாளி மக்களுக்கெதிரான துரோகம், பச்சோந்தித்தனம், சிபிஐ யிடம் மட்டும் இல்லாமல் போய் விடுமா என்ன ?

இனிமேல் சிபிஐ Central Bureau of Investigation இல்லை. அதற்கு பதிலாக

Consortium of Bloody Idiots

அல்லது

Confederation of Bureaucrats with Incompetence

என்று அழைக்கலாம் அல்லவா ?

வழக்கறிஞர்களே, உங்களையே தாக்கிவிட்டு, உங்கள் மீதே குற்றம் சுமத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையை கொளுத்துங்கள்.

சவுக்கு

1 comment:

 1. //அப்போ தாங்களாகவே தீக்குளித்து இறந்தார்களா ?//

  வருங்கால சரித்திரத்தில் இந்த சம்பவம் இப்படித்தான் இடம் பெறும் என் நினக்கிறேன்..

  சிபிஐ ஆளும் கட்சியின் அடியாளாகி விட்டது..

  ராஜீவின் மரணத்துக்காக , ஒரு இனத்தையே கொன்றவரகளுக்கு,
  " இறந்த தினகரன் அலுவலக ஊழியர்கள் உயிர்கள் " மனிதற்களின் உயிராகத் தெரியாது...

  ஏனென்றால் இவர்கள் பொது ஜனங்கள்..ஏழைகள்..

  இதற்கு என்னதான் முடிவு.. ஏழையாய் பிறந்தது அவர்களின் தவறா?

  ReplyDelete