Friday, January 1, 2010

பூமியை காதலிக்கும் ஒரு கூட்டம்.



பொதுவாக வாழ்க்கையில் சமூகத்தை நேசிப்பவர்கள் குறைவு. நானும் சமூகத்தில் ஒரு அங்கம் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தாலும் தான் மற்றும் தனது குடும்பத்தை தாண்டி சிந்திப்பவர்கள் வெகு குறைவு.


எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமூகத்தை தீவிரமாக நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அரசுகள் தீவிரவாதிகள் என்று அழைக்கும் நக்சலைட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். திராவிடக் கட்சிகளின் வட்டச் செயலாளர்களுக்கு இருக்கும் வசதிகள் கூட நக்சலைட் இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இருப்பதில்லை.

பெரும்பான்மையான நேரங்களில் உண்ண உணவு கூட கிடைக்காமல் வெறும் டீ யை குடித்து பொழுதை போக்குவார்கள். எப்போதும் காவல்துறையின் கண்காணிப்புக்கு அஞ்சி, ஓடிக்கொண்டே இருப்பதுதான் இவர்களது வாழ்க்கை.

இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் இந்த சமூகத்தை நேசித்து, இச்சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற தீராத காதலால் இந்த இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றன.


இன்றைய உலகமயமான பொருளாதாரச் சூழலில் சுயநல எண்ணங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. பிரபல அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, மனித உரிமை, சுற்றுச் சூழல் போன்ற விஷயங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டால் அவர்களை “விநோதப் பிறவிகள்“ போலப் பார்க்கும் நிலைமைதான் இருக்கிறது.

பிழைக்கத் தெரியாத மனிதர்கள், பைத்தியக்காரர்கள், லூசுகள், மறை கழன்ற கேசுகள் என்ற பட்டம் வேறு. இது போன்ற சமூகத்தை நேசிக்கும் மனிதர்கள் குறைந்து, சுயநலமிகள் பெருகிப் போனதன் விளேவே இது.


மேலும், என்ஜிஓக்கள் என்று அழைக்கப் படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இன்று வெளிநாட்டு நிதி உதவியை வாங்கி லாபம் ஈட்டித் தரக்கூடிய ஒரு தொழிலாக அதை செய்து வருவதால், சமூக வேலை செய்யும் மனிதர்களும் “ஒரு வேளை பிழைப்புக்காக இதை செய்கிறானோ ? “ என்ற சந்தேகக் கண்ணோடு மற்றவர்கள் நோக்கும் சூழலும் இருக்கவே செய்கிறது.


ஆனாலும் இத்தனை நெருக்கடிகளையும் மீறி இச்சமூகத்தை நேசித்து, ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ஒரு கூட்டம் இங்கேயும் அங்கேயும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

மரபை மீறி, பொதுக் கருத்தை மீறி தான் நம்பும் கருத்தை வலியுறுத்தும், அதற்காக போராடும் கலகக் குரல்கள் வரலாறு நெடுக ஒலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அந்தக் குரல்கள் தான் மனிதத்தை இன்னும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.


இவ்வாறான பொதுத் தொண்டிலோ, சமூகத்துக்கான உழைப்பிலோ ஈடுபடும் நபர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.


பிழைப்புக்காகவும், வயிற்றுக்காகவும், அன்றாட வாழ்வுக்காகவும் ஏதாவதொரு தொழிலை செய்தே ஆக வேண்டும். இத்தொழில் பாதிக்கப் படாமல்தான் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.


பைத்தியக்காரன் என்ற பட்டத்தோடு, பிழைப்புக்காக செய்யும் தொழில் பாதிக்கப் படாமல் சமூகத்துக்காக உழைப்பதென்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.

ஒரு மனச்சோர்வான நேரத்தில், “நமக்கு மட்டும் எதற்கு இந்த தலைவிதி, எல்லோரையும் போல நாமும் இருந்து விட்டால் என்ன “ என்ற எண்ணம் தோன்றவே செய்யும். ஆனால் இவ்வெண்ணத்தையும் மீறி சமூகத்துக்காக உழைக்கும் அனைவரும் போற்றுதலுக் குரியவர்கள் மட்டுமல்ல, சமூகத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர்கள்.

சமூகத்துக்காக உழைக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கென, தங்களுக்கு உடன்பாடான, மனதுக்கு உகந்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் பணியாற்றுவார்கள்.

ஒரு சிலருக்கு மனித உரிமை, சிலருக்கு ஊழல் எதிர்ப்பு, சிலர் மாற்றுத் திறன் கொண்டவரோடு பணியாற்றுதல், சிலர் ஆதரவற்ற அனாதைகளோடு பணியாற்றுவர், சிலர் முதியோருக்காக பணியாற்றுவர். சிலர் சுற்றுச் சூழலுக்காக உழைப்பார்கள்.


அவ்வாறு சுற்றுச் சூழலுக்காக உழைக்கும் ஒரு தன்னார்வக் கூட்டம் தான் “பூவுலகு“. ஒரு ஆண்டாக இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருந்த இதழ், இம்மாதம் முதல் மாத இதழாக வெளிவர இருக்கிறது.

இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும், இந்த பூமியை வெறித்தனமாக காதலிக்கும் உணர்வு அப்பிக் கிடக்கிறது.


33வது சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகு குழுவினர் ஒரு அரங்கு அமைத்துள்ளனர். இவ்வரங்கின் பெயரே “பூவுலகின் நண்பர்கள்“ என்ற அழகான பெயரோடு அமைந்துள்ளது.



அரங்கின் நுழைவாயிலிலேயே, தூக்கணாங் குருவியின் கூட்டை தொங்கவிட்டு, தங்களின் கவித்துவமான ரசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.



இந்த அரங்கத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. பூவுலகு இதழ் நடத்துவதனால் பெரும் அளவில் வருமானம் ஒன்றும் கொட்டவில்லை என்றாலும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு ஒன்று அமைத்து சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற பிடிவாதத்தோடு, கடுமையாக உழைக்கும் இந்தக் கூட்டத்தினர் பாராட்டுக்கு உரியவர்களே. இவர்கள் பணி மெச்சத் தக்கது.

இந்த கண்காட்சியில் பூவுலகு இதழுக்கு சந்தா பெருகினால் இதழை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்தனர்.

சுற்றுச் சூழலில் ஆர்வம் இருக்கும் பதிவர்கள், புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள 233வது அரங்குக்குச் சென்று பூவுலகு இதழுக்கு சந்தா செலுத்தி, பூமியை நேசிக்கும் இந்தக் கூட்டத்திற்கு உற்சாக அளிக்குமாறு “சவுக்கு“ சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.

வாழ்க நண்பர்களே. தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்களுக்கு சவுக்கின் வாழ்த்துக்கள்.


சவுக்கு

1 comment:

  1. சென்னை புத்தக திருவிழாவில் புதிய முயற்சியாக இருந்த பூவுலகின் நண்பர்கள் அரங்கு குறித்து யாருமே எழுதாத நிலையில் தாங்கள் எழுதி உள்ளீர்கள். நன்றி.

    பூவுலகின் நண்பர்கள் அரங்கை வலை பதிவர்கள் புறக்கணித்தது, சுற்றுச்சூழல் மீது வலைபதிவர்களுக்கு போதிய அறிவோ ஆர்வமோ இல்லை என்பதையே காட்டுகிறது.

    ReplyDelete