Friday, January 1, 2010

மத்தியில் தமிழ் ஆட்சிமொழி. சாத்தான் ஓதும் வேதம்.

<

வழக்கமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, அனைத்து அரசியல்வாதிகளும் கையாளும் தந்திரம், தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை, தங்களுக்கு ஏதுவான, தங்களது “அடிவருடி பத்திரிக்கையாளர்களை“ விட்டு ஏதுவான ஒரு கேள்வியை கேட்க வைப்பார்கள்.

இந்த தந்திரத்தில் கருணாநிதியை விஞ்ச யாரும் கிடையாது. இவ்வாறு கருணாநிதிக்கு ஏதுவான கேள்விகளை கேட்கும் பத்திரிக்கையாளர்களுக்கு, “அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில்“, சோழிங்கநல்லூரிலோ, திருவான்மியூரிலோ வீட்டு மனை காத்திக்கும்.


அதே போல, நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருணாநிதியிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வி : “உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கு மைல் கல் போல ஒரு சாதனை செய்ய திட்டம் இருக்கிறதா ? மாநாடு நடந்து முடிந்தது என்று இல்லாமல் வரலாற்றில் இடம் பெறக்கூடிய அளவிற்கு ஏதாவது செய்யப் படுமா ? “ என்பதுதான் அந்தக் கேள்வி.


இந்தக் கேள்விக்கு கருணாநிதி அளித்துள்ள பதில் “இது கூடிக் கலையும் மாநாடு அல்ல – இந்த மாநாட்டின் வெற்றியின் மூலம் மாநாட்டிற்குப் பிறகும் தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்தியப் பேரரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் அமைய வேண்டும், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழம் ஆக வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
வெற்றி பெறும் வரை வலியுறுத்துவோம். “ என்று பதில் அளித்துள்ளார் கருணாநிதி.

தமிழில் அழகான ஒரு பழமொழி உண்டு. “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்; வானம் ஏறி வைகுந்தம் போனானாம்“ என்று ஒரு பழமொழி உண்டு. கருணாநிதிக்கு இது மிகவும் பொருந்தும்.

முதலில் ஒரு சிறு செய்தியை பார்ப்போம். சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக, கருணாநிதி கலைஞர் தொலைக்காட்சி என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி, அது, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள் என்று நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதை அறிவீர்கள்.

இத்தொலைக்காட்சி குறித்து வந்த ஒரு செய்தி, இந்த கலைஞர் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் கருணாநிதி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதும், இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் பெயர்களை கருணாநிதியே தேர்ந்தெடுத்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் உண்டு.

இந்த கலைஞர் தொலைக்காட்சி தன்னுடைய சட்டச் சிக்கலை தீர்த்துக் கொள்வதற்காக நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்களிடம் ஒரு படிவத்தை வழங்கி, அதை நிரப்பச் சொல்லி கட்டளையிடுவார்கள். அந்தப் படிவம் கூட தமிழில் இல்லை என்பது தெரியுமா ? கலைஞர் தொலைக்காட்சியின் லோகோ கூட ஆங்கிலத்தில் தான் உள்ளது.




கலைஞர் டிவி படிவங்கள்



தன்னுடைய, தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் கூட தமிழை செயற்படுத்த கருணாநிதியால் முடியவில்லை.

எதற்கெடுத்தாலும் கருணாநிதியை திட்டுகிறீர்களே. ஜெயலலிதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு.

ஜெயலலிதாவிடம் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியின் போது, கருணாநிதியிடம் தங்களுக்கு பிடித்தது எது என்ற கேள்விக்கு, ஜெயலலிதா அளித்த பதில் “அவரது தமிழ்“. ஜெயலலிதா என்றுமே தன்னை தமிழுக்கு தாய் என்றோ, தான்தான் தமிழ் என்றோ, தமிழினத்தின் ஒரே தலைவர் என்றோ, தமிழாய்ந்த அறிஞர் என்றோ கூறிக் கொண்டதில்லை.

ஜெயலலிதா தன்னுடைய ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்திக் கொள்வதில்தான் மிகுந்த பெருமை அடைவார்.

ஆனால் கருணாநிதிதான் தன்னை தமிழினத்தின் ஒரே தலைவர் என்று கூறிக் கொள்கிறார். தமிழாய்ந்த அறிஞர் என்று அழைத்துக் கொள்கிறார். அதனால்தான் கருணாநிதியிடம் தமிழினம் அதிகம் எதிர்ப்பார்க்கிறது.


மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கூறும் கருணாநிதி, அவரது ஆளுகையின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழுக்காக என்ன செய்தார் ?

ஐந்து முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அழகு பார்த்த கருணாநிதி, தமிழை ஆட்சி நிர்வாகத்தில் அமர்த்தி விட்டாரா ?

1971ல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அப்போது, தலைமைச் செயலக கோப்புகளில் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது உங்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இன்றும் இந்தக் கோப்புகள் தலைமைச் செயலகத்தின் ஆவணங்களில் இன்னும் இருக்கிறது. இதுதான் கருணாநிதியின் தமிழ்ப்பற்று.


தமிழக அரசின் துறைகளுள் தமிழ் வளர்ச்சித் துறை. இத்துறையின் வேலை என்ன தெரியுமா ? தமிழ் நாடு அரசு நிர்வாகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை கண்காணிப்பதுதான். தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் இருந்த பொழுது இத்துறையின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன. ஆனால் அதற்குப் பிறகு, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.


தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956ம் ஆண்டு இயற்றப் பட்டது. இச்சட்டத்தை கொண்டு வந்தவர், தன்னை தமிழினத் தலைவர் என்றோ அறிஞர் என்றோ கூறிக் கொள்ளாத காமாராஜர். இச்சட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்தப் பட்டு, தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திலும், தமிழ் 100 சதவிகிதம் அமல்படுத்தப் பட வேண்டும் என்று பல அரசாணைகள் வெளியிடப் பட்டன. கீழ்கண்ட இனங்களைத் தவிர மற்றவை அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ள இனங்கள்.

1) மாநில கணக்காய்வுத் தலைவருக்கு (மத்திய அரசு அலுவலகம்) எழுதப் படும் கடிதங்கள்

2) மைய அரசு அலுவலகங்கள், பிற மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு எழுதப்படும் கடிதங்கள்

3) மேல்முறையீட்டுக்கு உட்பட்ட சட்டத் தொடர்புடைய ஆணைகள்.

4) வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள் மற்றும் ஆங்கிலத்திலேயே செய்தித் தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கொள்ளும் தொடர்பு.

இவை தவிர மற்ற அனைத்து கடிதங்கள், குறிப்பாணைகள், அரசாணைகள், பட்டியல்கள் (Bills) என அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அரசாணைகள் கூறுகின்றன.
நடைமுறையில் எப்படி இருக்கிறது தெரியுமா ?






தமிழ் ஆட்சி மொழிக்கான அரசாணை


தமிழக அரசின் துறைகளின் பெரும்பாலான இணையத் தளங்கள், தலைப்பில் மட்டும் துறையின் பெயரை தமிழில் போட்டு விட்டு, மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் தான் வைத்துள்ளன. இதில் தமிழ்நாடு காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் சுத்தம்.

மருந்துக்குக் கூட இத்தளங்களில் தமிழ் இல்லை. துறையின் பெயர் கூட ஆங்கிலத்தில் தான் உள்ளது.

வட மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இருப்பதால் தமிழில் கோப்புகளை பேணுவது கடினம் என்ற சால்ஜாப்பும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் பணியில் சேரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள், 2 ஆண்டுகளுக்குள், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். மேலும், வட மாநில அதிகாரிகளுக்கு வைக்கப் படும் கோப்புகளில், தமிழில் எழுதப்பட்டுள்ள குறிப்புகளுக்கு சுருக்கமாக, ஆங்கிலத்தில் ஒரு குறிப்பு இணைக்கலாம் என்றும், தமிழ் வளர்ச்சித் துறை ஆணையிட்டுள்ளது.

ஆகையால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
கருணாநிதிக்கு மனமில்லை. கருணாநிதியின் மனம், தற்புகழ்ச்சியில் மட்டுமே.
தமிழ் வளர்ச்சித் துறை ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும், தமிழ் ஆட்சிமொழியாக செயல்படுத்தப் படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்பொழுது நடைபெறும் ஆய்வுகள், தமிழ்த்துறையின் ஆய்வு அதிகாரிகள் ஆய்வு நடத்தும் துறையில், லஞ்சப் பணம் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இத்துறை ஆய்வு நடத்தும் அலுவலகங்களில், பதிவேடுகளில் “எண்ணுக தமிழில், எழுதுக தமிழில்“ என்ற முத்திரையையும், சுவரொட்டியையும் ஒட்டி விட்டு சென்று விடுவதாகவும் அரசு ஊழியர்கள் கூறுகிறார்கள்.


மேலும் அரசு அலுவலகங்களில், வருகைப் பதிவேட்டைத் தவிர எங்குமே தமிழ் இல்லை என்பதுதான் உண்மை நிலை. அரசு ஆணைகள் அனைத்துமே ஆங்கிலத்திலேயே வெளி வருவதும், அனைத்து கடிதப் போக்குவரத்துக்களும் ஆங்கிலத்திலேயே கையாளப்படுவதாகவும் அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும், அரசு அலுவலகங்களில், ஆங்கிலத்தில் நன்கு எழுதத் தெரிந்தவர்கள் தான் மரியாதையோடு நடத்தப் படுவதாகவும், ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிவுக் குறைந்தவர்கள் என்ற தன்மையில் அதிகாரிகளால் நடத்தப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் ஆட்சி மொழியாக தமிழ் வருவது இருக்கட்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர முடிகிறதா கருணாநிதியால் ? பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தைத் தவிர, அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழி உயர்நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலத்தோடு சேர்ந்து இருக்கிறது.

இவ்வாறு தமிழ் உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக ஆக்கப் படுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.


இவ்வாறு, சென்னை உயர்நீதிமன்றத்திலும், ஆங்கிலத்தோடு இணைந்து தமிழும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று 06.12.2006 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப் பட்டது மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டது.

27.02.2007 அன்று, மத்திய அரசு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாய்வு செய்ததில் இப்போதைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக செயற்படுத்த இயலாது என்று கருத்து தெரிவித்ததால், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.


வந்ததே கோபம் கருணாநிதிக்கு. என்ன செய்தார் தெரியுமா ? மன்மோகன் சிங்குக்கு 11.03.2007 அன்று கடிதம் எழுதினார். கடிதம் எழுதி எத்தனை நாட்கள் ஆகின்றன.
மகனுக்கும், மகளுக்கும், பேரன்களுக்கும் மந்திரி பதவி வேண்டும் என்று டெல்லியில் கூடாரமடித்து கூழைக் கும்பிடு போட்டு மண்ணைக் கவ்வி, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், கோபித்துக் கொண்டு சென்னை திரும்பிய கருணாநிதிக்கு, “எனது மாநிலத்தில், எனது தமிழகத்தில் இருக்கும் உயர்நீதிமன்றம், என் தாய் தமிழை ஏற்றுக் கொள்ளாதா ? பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தானுக்கு ஒரு நியாயம், தமிழகத்துக்கு அநியாயமா ? “ என்று கொதித்து எழுந்திருக்க வேண்டாமா ?

எழ மாட்டார் கருணாநிதி. தமிழ் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன. பாரசீக மொழி ஆட்சி மொழியாக இருந்தால் என்ன ? நானும் என் குடும்பமும் சுபிட்சமாக இருந்தால் போதும். தமிழ், மொழி, இலக்கியம் எல்லாம் என்னை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள்களுக்குத் தானே ? என்றுதானே கருணாநிதி இறுமாந்திருப்பார்.


தமிழ் வழிக் கல்வியில் படித்து விட்டு இன்று நுனி நாக்கு ஆங்கிலம் பேசத் தெரியாமல் கஷ்டப் படும் இளைஞர்களின் துயரைத் துடைக்க என்ன செய்து விட்டார் கருணாநிதி ?
மிகக் குறைந்த பட்சம், தமிழ் வழிக் கல்வியில் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு, க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 தேர்வுகளில் முன்னுரிமை, அல்லது 15 சதவிகித இட ஒதுக்கீடு என்று ஒரு ஆணை வெளியிட எவ்வளவு நேரம் ஆகும் ?

தமிழ்வழியில் படித்த இளைஞன் நேர்முகத் தேர்வில் மெத்தப் படித்த தேர்வாணையக் குழு உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விக்கு ஆங்கிலத்தில் விடையளிக்க இயலாத என் கிராமப்புற தமிழ் இளைஞனுக்கு என்ன செய்து விட்டார் கருணாநிதி ?


தமிழை மொழியாகக் கூட படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஃப்ரென்ச்சு மொழியையும், ஹிந்தியையும், இதர மொழிகளையும் ஆரம்பக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை படித்து விட்டு, தமிழையே அறியாத ஒருவன் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி, என் தாய் தமிழ்நாட்டில் அதிகாரியாக வந்து உட்கார முடியும் என்றால் இதை விட அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும் ?

இந்த அநியாயத்தை களையாமல் கருணாநிதி “செம்மொழி மாநாடு“ நடத்தி, தன்னை செம்மைப் படுத்திக் கொள்வதை விட இம்மொழிக்காக வேறு என்ன செய்து விடப் போகிறார் ?


தமிழ்வழிக் கல்வியில் முதுகலை பட்டம் வரை படித்த இளைஞர்களுக்கு பிழைக்க என்ன வழி இருக்கிறது இத்தமிழ்நாட்டில் ?

தமிழையே பிரதான பாடமாக எடுத்துப் படித்த இளைஞர்களுக்கு வாத்தியார் உத்தியோகத்தைத் தவிர என்ன எதிர்காலம் இருக்கிறது இத்தமிழ்நாட்டில் ?


தமிழ்வழியிலும், தமிழிலும் படித்த இளைஞர்களுக்கு வழி செய்து கொடுக்காமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வராமல், தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் தமிழை செயற்படுத்தாமல்
“இந்தியப் பேரரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் அமைய வேண்டும், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் ஆக வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். வெற்றி பெறும் வரை வலியுறுத்துவோம்.“ என்று கூறுவது

“வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…
கத்தாழ முள்ளு கோத்தோட வந்துச்சாம். “


என்ற பழமொழியை நினைவு படுத்த வில்லை ?

வெற்று கோஷமிட்டு, தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியின் போலித்தனத்தை கருணாநிதியாலேயே நம்ப முடியவில்லை.

அதனால்தான், மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, தினமும், செம்மொழி மாநாடு பற்றி அறிக்கைகள் வெளியிட்டு, தன்னையே சமாதானப் படுத்திக் கொள்கிறார்.

ஆனாலும், கருணாநிதியின் அறிக்கைகள் பல்லிளித்து தனது பொய் முகத்தை காட்டவே செய்கின்றன.

கருணாநிதியிடம் நேர்மையை எதிர்ப்பார்ப்பது என்பது காளை மாட்டிடம் பால் கறப்பதற்கு ஒப்பானது.

தமிழக அரசின் முதலமைச்சராக இருந்து கொண்டு, பஞ்சைப் பராரிகளுக்கான அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் கருணாநிதியிடம் எதிர்ப்பார்க்க முடியுமா நேர்மையை ?


உணவுதரு விடுதிதனைக் "கிளப்"பென வேண்டும்போலும்
உயர்ந்த பட்டுத்துணிக் கடைக்கு "சில்க் ஷாப்" எனும்
பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவரும் தென்றலில் குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின்
தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை!


பாரதிதாசன்

சவுக்கு

No comments:

Post a Comment