Saturday, October 31, 2009

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்





தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. தலைமைச் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன், ஸ்ரீபதி விழிப்புப் பணி ஆணையராக (Vigilance Commissioner) பதவி வகித்தார். அப்பதவியில் இருக்கையில், ஊழல் புகாரில் சிக்கிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணையை தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர், ஊழல் வழக்கில் சிக்கிய செல்வி.ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை, விசாரணை ஏதுமின்றி முடித்து விட்டு அதற்குப் பலனாக அண்ணா பல்கலைகழகத்தில், மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற தங்களது மகன் மற்றும் மகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர், இவர்கள் இருவர் மீதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பேராசிரியர்.பிரபா.கல்விமணி என்பவர், தலைமைச் செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் மனு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப் பட்டது.



இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் அப்போது விழிப்புப் பணி ஆணையராக இருந்த ஸ்ரீபதி உபாத்யாயிடம் தொலைபேசியில் “சிங் மற்றும் ராதாகிருஷ்ணன் மீது ஏதோ விசாரணை செய்கிறீர்களா ? உங்கள் துறையிலிருந்து முத்து என்ற ஆய்வாளர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏதோ கடிதம் வேறு கொடுத்திருக்கிறாராம். அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை செய்வது சரியில்லை. என்ன ? அது என்ன என்று விசாரியுங்கள். நாம் முதலில் இதைப் பற்றி விவாதிப்போம். பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்வோம். என்ன ? “ என்று பேசியதாக, “இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு“ செய்தி வெளியிட்டுள்ளது.



இவ்வாறு பேசியதற்காக, இவர் மீது துறை நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஏராளமானோர் இருக்க, இப்படிப்பட்ட ஒரு ஆளை தலைமைச் செயலாளராக நியமித்து வைத்திருக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்ல ?
ஒப்பாரி



Friday, October 30, 2009

அழிந்தது ஆணவம் !


சென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று வெளியிட்ட அதிரடித் தீர்ப்பால் ராதாகிருஷ்ணன் என்ற ஆணவம் பிடித்த போலீஸ் அதிகாரியின் கொட்டம் அடங்கத் தொடங்கியுள்ளது.




தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளிலேயே, ஆணவம் பிடித்த அதிகாரிகளின் பட்டியிலில் முதலிடம் பிடிப்பவர் ராதாகிருஷ்ணன்தான். லஞ்ச ஒழிப்புத் துறையில், ஐஜியாக பணியாற்றிய பொழுது, இவருக்கு இங்கிலாந்து நாட்டின் “ராணி விருது” வழங்கப் பட்டது. இந்த விருது வழங்கப் பட்டதையொட்டி, விஜய் டிவியில் இவரை பேட்டி கண்டனர். அப்போது, உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டதற்கு, மகாத்மா காந்தி (??????) என்று பதில் சொன்னவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.




காந்தியை ரோல் மாடலாக கொண்டவர் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த ராணி விருதுடன் ஏறக்குறைய 36 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது. இந்தத் தொகை இவருக்கு அல்ல. “சமுதாய காவல் பணி“ என்று இவர் செய்து வந்த ப்ராஜெக்ட்டுக்காக இத்தொகை வழங்கப் பட்டது. ஆனால் இந்தத் தொகையை, இந்தப் ப்ராஜெக்ட்டுக்காக இவர் கையொப்பமிட்டு இவர் பணம் எடுக்கலாம்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் இவர் பணியாற்றிய காலத்தில், முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் மீதான வழக்குகளை கவனித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக இருந்தார். இந்த பிரிவுக்கு இவர் மட்டுமே தலைவர் என்பதால், இப்பிரிவுக்கு தேவையான கணிணி உபகரணங்கள் மற்றும் எழுது பொருட்களை 2 மாதங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவ்வாறு, லஞ்ச ஒழிப்புத் துறையின் கணக்கில், 2 மாதங்களுக்கு ஒரு முறை 20 ஆயிரத்துக்கு, எழுது பொருள் வாங்கியதாக கணக்கு காண்பித்து விட்டு, இத்தொகையை ராணி விருதோடு வழங்கப் பட்ட 36 லட்சம் ரூபாயில் செலவு காண்பித்து விடுவார். இதுதான் இந்த மகாத்மா தொண்டரின் லட்சணம்.



18.02.2009 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் அலுவலகத்தில் நடந்து கூட்டத்தில், நடந்த கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகளிடம், “இந்த வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், அவர்கள் கைகளையும் கால்களையும் உடைக்க வேண்டும்“ என்று பேசியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த மறுநாள் அதாவது 20.02.2009 அன்று, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இத்தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், வேறு வழியின்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு சென்னை மாநகரம் வரை இருந்த அவரது அதிகாரத்தை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி யாக நியமித்ததன் மூலம், தமிழகம் முழுவதும் அவரது அதிகாரம் பரவும்படி செய்தார் இந்தக் கருணாநிதி.



இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த 45 நாட்களாக, இந்த ராதாகிருஷ்ணன் எந்த கோப்புகளையும் பார்க்க வில்லை. தினமும், காலையில், சென்னை “தி பார்க்“ ஹோட்டலில் தங்கியிருந்த, அரசு சார்பாக ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவானை பார்க்கச் சென்று, அவருக்கு ஐஸ் வைத்து, எப்படியாவது தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருக்கிறார் இந்த ராதாகிருஷ்ணன். இவர் வேண்டுகோளை ஏற்று, “ராதாகிருஷ்ணன் ஒரு மாணிக்கம்“ “அவரைப் போல உலகத்திலேயே யாரும் இல்லை“ என்று வாதம் செய்தார்.



இவரின் வாதத்தை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது போலத்தான் இருக்கிறது. அதனால்தான் தனது தீர்ப்பில், இவரைப் போல, மோசமான போலீஸ் அதிகாரியைப் பார்க்க முடியாது, இவரின் முட்டாள்த்தனமான நடவடிக்கைகளால்தான், இந்தக் கலவரமே நடந்தது என்று தீர்ப்பளித்துள்ளது.


இந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 4 போலீஸ் உயர் அதிகாரிகளின் மீது, ஒழுங்கு நடவடிக்கை, பணி இடை நீக்கம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததன் மூலம், ராதாகிருஷ்ணனின் ஆணவத்துக்கு சவுக்கடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.



இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், துணை நின்ற பத்திரிக்கைகளுக்கும், “சவுக்கு“ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஒப்பாரி

Thursday, October 29, 2009

போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி


19/2 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் மீதான கொடும் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது.


மனிதருள் மாணிக்கம் ராதாகிருஷ்ணன்



ராமசுப்ரமணியம்


அன்று உயர்நீதிமன்ற வளாகமே போர்க்களமாக காட்சியளித்தது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என ஒருவர் விடாமல் காவல்துறையினர் அடித்து நொறுக்கினர். வழக்கறிஞர்களின் வண்டிகள் கூட தப்பவில்லை.


ராமசுப்ரமணியம்

உச்சநீதிமன்றம் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அந்த ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையில், பிப்ரவரி 19 அன்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு மாலை 5.14 மணிக்குத் தான் வந்தார்.

ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், ப்ரேம் ஆனந்த் சின்ஹா


ஆகையால் நடந்த சம்பவத்துக்கு அவரை பொறுப்பாக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இதன் விசாரணை ஏறக்குறைய 2 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

ஏ.கே.விஸ்வநாதன்

வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

ப்ரேம் ஆனந்த் சின்ஹா


நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் "பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கமிஷனர் (ராதாகிருஷ்ணன்) தனது கடமை மற்றும் பொறுப்பிலிருந்து தவறி, ஒழுங்கற ஒரு சூழ்நிலையை உருவாக்கி, உயர்நீதிமன்ற வளாகத்தினுள் ஒரு மோசமான சம்பவம் நடைபெற்று, நீதித்துறையின் மீது தீராத கறை ஏற்பட காரணமாக இருந்திருக்கிறார்." இறுதியாக, உயர்நீதிமன்றம், ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியன், ப்ரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய நான்கு அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துறை நடவடிக்கை முறையாக நடக்க ஏதுவாக இந்த நான்கு அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் மேலும், ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடங்க 19/2 சம்பவம் காரணமாக இருந்ததால், இந்த நான்கு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்றும் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இத்தீர்ப்பை வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஆனால், போலீஸ் ராஜ்யம் நடத்தி வரும் இந்தக் கருணாநிதி, இந்த அதிகாரிகளை இடை நீக்கம் செய்வாரா என்பது சந்தேகமே !

Wednesday, October 28, 2009

உடன் பிறப்புக்கு கருணாநிதி உருக்கமான கடிதம்


உடன்பிறப்பே,




நீண்ட நாட்களாக உனக்கு கடிதம் எழுதவில்லை. இத்தமிழ் கூறும் நல்லுலகை நான்தான் பாதுகாக்க வேண்டும் என்று உலகத்தமிழர்கள் தங்களது அவாவை அடக்காது வெளிப்படுத்தியதாலேதான், உனக்கு கடிதம் கூட எழுத நேரமில்லாமல் மக்கள் பணியை கவனித்து வந்தேன்.

நான் உனக்கு கடிதம் எழுதாமல் இருந்த இந்த குறுகிய காலத்திற்குள், வட்டமிடும் கழுகுகளும் வாய்பிளக்கும் ஓநாய்களும், காலைச்சுற்றி வரும் மலைப்பாம்புகளும் புல்லுறுவிகளாய் தமிழர் காதில் நஞ்சைக் கக்கி வருவதை நான் கவனித்துதான் வருகிறேன்.




தமிழே தமிழுக்கு மாநாடு நடத்த வேண்டும் என்று என்னைக் (தமிழ்) கற்ற அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததால்தானே உலகத் தமிழர் மாநாடு நடத்துகிறேன். எனக்கு என்ன அந்த அம்மையாரைப் போல விளம்பரப் பிரியமா ? யாராவது என்னைப் புகழ்ந்து பேசினால் என் காது கூசுகிறதே ! இதற்காகவே, என்னைப் பாராட்டி நடக்கும் விழாக்களில் நான் கலந்து கொள்வதை தவிர்க்க நினைத்தாலும், என்னைப் பாராட்டும் உள்ளங்கள் புண்படக் கூடாதே என்ற தமிழ்ப் பண்பாடுதானே என்னை இவ்விழாக்களில் கலந்து கொள்ள வைக்கிறது ? அதனால்தானே, நடக்க முடியவில்லை என்றாலும் கூட, தள்ளு வண்டியில் வந்து, நெருப்பின் மேல் நிற்பது போல், இப்பாராட்டு விழாக்களில் அமர்ந்து கேட்கிறேன். தற்போது நடந்து முடிந்த தீபாவளி விழாவில் கூட, என்னைப் பற்றி நடந்த பட்டிமன்றத்தை அப்படித்தான் கேட்டு ரசித்தேன். அதை நீ, என் அன்பு மகன் அழகிரி நடத்தும் கலைஞர் டிவியில் பார்த்து ரசித்திருப்பாய் என்பதை நான் அறிவேன். ஆனால் அந்த அம்மையாரும், இப்போது புதிதாக கிளம்பியிருக்கும் ஒரு கூத்தாடியும் நான் ஏதோ புகழ்ச்சிப் பிரியர் என்பது போல உன் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார்கள்.



இது போக ஒரு வளைத்தளத்தில் நான் பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று அவதூறை வீசியிருக்கிறார்கள். தமிழுக்காகவே, உடலையும், மூச்சையும், ஆவியையும், அர்பணித்தவனைப் பற்றியா இந்த அவதூறு ? நான் உடல், மூச்சு, ஆவி அனைத்தையும் தமிழக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டு, வெறும் 5000 கோடி சொத்துக்களை மட்டும்தானே சேர்த்து வைத்திருக்கிறேன். இந்த தியாகத்தைப் பொருட்படுத்தாமல் என் மீது எவ்வளவு வசைகள் ? என்னை ஆளாக்கிய அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற வாக்குதான் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறது. இந்த வாக்கை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை என்றால், என்றோ இந்த அவச்சொற்களை கேட்டு என் உயிர் பிரிந்திருக்கும்.

நச்சு நாக்கினர் கூறும் அவதூறு சொற்களையும் வசைகளையும் கேட்டு நான் குமையும் போதெல்லாம் நான் மனச்சோர்வு அடையாமல் என்னைப் பாதுகாப்பதே என் அன்பு மகன் டிவி யில் வரும் “மாநாட மயிலாட” நிகழ்ச்சிதான் என்பதை நீ அறிவாயா உடன் பிறப்பே ? மக்கள் பணியில் ஈடுபட்டு மனச்சோர்வு அடையும் என்னை உற்சாகப் படுத்தி தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட வைக்கும் “மாநாட மயிலாட“ நிகழ்ச்சியின் நடுவர்கள் “நாட்டிய நங்கை“ கலாவும், “தென்னகத்து மர்லின் மன்றோ“ குஷ்பூவும், கொஞ்சு தமிழ் பேசி, தமிழுக்கு சிறப்பு சேர்க்கும், “மழலை மொழியாள்“ நமீதாவும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றும் சேவைக்கு, இப்பூவுலகே கடன் பட்டுள்ளது.



அக்கடனுக்கு நன்றி கூறும் வகையில்தான், “மழலை மொழியாள்“ நமீதாவை, உலகத் தமிழ் மாநாட்டில் தலைமை உரை ஆற்ற அழைக்கத் திட்டமிட்டுள்ளேன். ஆனால், சீரிய செயல்கள் எதுவாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதை பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டு விடாமல், விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிற சிறுநரிக் கும்பலொன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும், இந்த செயலுக்கும் தடை கோரும் என்பதில் உனக்கு ஐயமேதும் உண்டோ ?




இத்துனை சிரமங்களுக்கு இடையில், இத்தமிழ் மொழியை வாழவைக்க நான் நடத்தும் இத் தமிழ் மாநாட்டுக்குத் தான் எத்தனை தடைகள், விமர்சனங்கள் ?

எத்தனை முறை, எத்தனைக் கூட்டங்களில் “இந்து“ நாளேடே பாராட்டியுள்ளது, “தினமணி“ நாளேடே பாராட்டியுள்ளது என்று புகழ்ந்து பேசினாலும், அரசு விளம்பரங்களை வாரி வழங்கினாலும், என்னை எதிர்த்து செய்தி வெளியிடும் நேரங்களில் மட்டும் பார்ப்பன ஏடாக மாறும் போக்கை இன்னும் இந்த ஏடுகள் மாற்றிக் கொள்ளாமல்தான், இத் தமிழ் மாநாடு வெற்றி பெறாது என்று விஷத்தைக் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.




நான் என்னவோ ஈழத் தமிழர் விஷயத்தில் கோழையாக என் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்

லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது போலவும்,

மத்திய அரசுக்கு தந்தி அடித்தும்,

கடிதம் எழுதியும்,

எம்.பிக்கள் ராஜினாமா என்று நாடகம் நடத்தியும்,

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி என்று நடித்தும்,

4 மணி நேரம் உண்ணா விரதம் இருந்தும்,

பிரபாகரன் என் நண்பன் என்று சொல்லிவிட்டு மறுநாளே பல்டி அடித்தும்,

எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றுங்கள் தாயே என்று சோனியாவின் காலடியில் என் மானத்தை அடமானம் வைத்தும்,

எத்தனை தமிழர்கள் இறந்தாலும், என் மகனுக்கு மந்திரி பதவிதான் முக்கியம் என்று நடித்தது போலவும்,

இதைக் கண்டு கொதித்த உலகத் தமிழர்கள் காரித் துப்பி என்னை தமிழினத் துரோகி என்று சொன்னதால்

இதையெல்லாம் துடைத்தெரிய “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு“ நடத்துவது போலவும், திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது, ஆனால் உண்மை என்ன என்பதை நீ அறியாமலா போவாய் ?

இந்த விளக்கத்தை படிக்கும் விஷமிகள், வேண்டுமென்றே, அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா, இனியேனும் திருந்தப் போகிறார்களா, அல்லது, அடடா, பொய் கூறி அவமான பட்டு விட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா ? என்பதை, தமிழன்னையின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.


அன்புடன்
மு.க


Friday, October 23, 2009

ராசா ராசாஆஆஆ மானங்கெட்ட ராசாஆஆஆஆ





மீண்டும், ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம், ராசாவையும், திமுகவையும், பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது.



மத்திய புலனாய்வு நிறுவனம், சி.பி.ஐ, தொலைத்தொடர்பு அலுவலகத்தையும், இது தொடர்பாக மேலும் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தியிருக்கிறது. இச் சோதனைகள், ஆ.ராசா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சராக இருக்கையிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ ஆல் நடத்தப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.




ராசா சமுதாயத்தின் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கைகளாலும், டெல்லி வட்டாரங்களாலும் அவர் குறி வைத்து தாக்கப் படுகிறார் என்று கருணாநிதி தன் “நா”நயத்தால் உரைக்கக் கூடும்.



ஸ்பெக்ட்ரம் இந்தியா சந்தித்த மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தோராயமான கணக்கின்படி கூட, 60,000 கோடிக்கு குறையாமல், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.



இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்னதான் நடந்தது ? ஜனவரி 2008ல் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்சுகள் வழங்கப் பட்டன. ஒரு லைசென்சின் விலை 1651 கோடி. இதில் என்ன தவறு ?



இந்தத் தொகை எப்படி நிர்ணயிக்கப் பட்டது தெரியுமா ? ஜனவரி 2001ல் ஏலம் விடப்படுகையில் என்ன தொகைக்கு போனதோ, அதே தொகைக்கு 7 ஆண்டுகள் கழித்து நிர்ணயிக்கப் பட்டது. 2001ல் இருந்ததை விட 2008ல் ஆறு மடங்கு விலை கூடியிருந்தும், பழைய விலைக்கே ராசா ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வழங்கியுள்ளார்.

ஆறு மடங்கு விலை உயர்ந்து விட்டது என்று எப்படி கூறுகிறார்கள் ? எப்படியென்றால் ராசாவின் தாராள குணத்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய இரு நிறுவனங்களும், தாங்கள் பெற்ற ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒரு சில மாதங்களிலேயே ஆறு மடங்கு லாபம் வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன.



இதில் அடுத்த முறைகேடு என்னவென்றால், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப் பட்டது திறந்த ஏலம் அடிப்படையில் நடக்கவில்லை. “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற முறையில் நடந்தது. இந்த முறையிலும் கூட, ராசா விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றினார் என்றும் குற்றச் சாட்டு உள்ளது.



இந்த ஊழல் முதலில் வெளிவருகையில், கருணாநிதி குடும்பம் பிளவு பட்டிருந்தது. இதனால், தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறன் சன் டிவி மூலம், இந்த ஊழலை மிகப் பெரிதாக பிரச்சாரம் செய்தார். உடனே, ராசா, எனக்கு முன் இருந்த மந்திரி (தயாநிதி மாறன்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். உடனே, சன் டிவி, மாறன் இந்த கொள்கை முடிவை எடுக்கவேயில்லை, அவர் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு விடப்படவேயில்லை என்று மறுப்பு கூறியது.



உடனே ராசா, தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். ஆனால் ட்ராய், உடனடியாக மறுப்பு தெரிவித்தது.



டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் ஒன்று கூடியதும், கருணாநிதிக்கு “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது”. சன் டிவிக்கும், கருணாநிதிக்கும், ஸ்பெக்ட்ரம் ”ஊழல் முடிந்தது”.



பொதுத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முன்பை விட, அதிக இடங்கள் கிடைத்ததும், திமுகவின், பலம் சோனியா காந்தியிடம் குறைந்தது. 2004ல், தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட சோனியா, 2009ல் தன்னை தள்ளு வண்டியில் வந்து பார்க்க வைத்தார். கேட்ட இலாக்காக்கள் ஒதுக்கப் படாததால், கோபித்துக் கொண்டு, கருணாநிதி, தள்ளுவண்டியிலேயே திரும்பி வந்தார்.

ஆனால், தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கால், ராசாவுக்கு, மீண்டும் தொலைத் தொடர்புத் துறையை பெற்றுத் தந்தார்.



ஆனால், இம்முறை மீண்டும், தொலைத்தொடர்புத் துறையை பெற்ற ராசா, ‘பல் பிடுங்கிய பாம்பாக’ ஆக்கப் பட்டார். எந்த விஷயத்திலும், தனித்து முடிவெடுக்க முடியாமல், கண்காணிக்கப் பட்டார். இதெல்லாம், கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், ஒன்றும் செய்ய முடியாமல், பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்.



ராசா மீது, இந்தக் குற்றச் சாட்டு மட்டுமல்ல. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது 2ஜி மற்றும் 3ஜி வழங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனத்திலிருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டினை ‘தி பயனீர்‘ நாளிதழ் சுமத்தியிருக்கிறது. இந்த தடவை, BSNL நிறுவனம் வைமாக்ஸ் சர்வீஸ் (WiMax services) தொடர்பாக, அமைச்சரின் தொகுதியான பெரம்பலுரைச் சேர்ந்த அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய நண்பருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அது குற்றம் சாட்டியிருக்கிறது.



இந்தியாவில் BSNL நிறுவனத்தின் கீழ் 16 சர்க்கிள்கள் இருக்கின்றன. இவற்றில் வருவாய் அதிகம் வரக்கூடிய ஏழு சர்க்கிள்களுக்கு வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Wellcom Communication India Private Ltd) என்னும் நிறுவனம் உரிமங்கள் கோரி விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிறுவனம் உரிமங்களைப் பெற்றபின், முன் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்றது போல், தற்போது விற்றிடலாம் என்று நிறுவனத்தின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



BSNL நிறுவனமே நேரடியாக வைமாக்ஸ்சை அளித்திடக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றிருக்கூடிய சூழ்நிலையில் இதனை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கோருகின்றனர். வைமாக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக வருங்காலத்தில் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களுக்குக்கான ஒயர்லஸ் இண்டர்நெட் வசதி, வாயிஸ் மெயில் வசதிகளைப் பெற்றிடமுடியும். முதலாம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் வைமேக்ஸ் இணைப்புகளுக்கான சந்தாதாரர்கள் கிடைத்து விடுவார்கள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களாக உயர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.



2008 நவம்பரில் வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் உரிமங்களுக்கு விண்ணப்பித்தது. சென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறிய அளவிலான இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்த நிறுவனம் 2006 டிசம்பரில் வெறும் 10 லட்சம் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இது 2008 நவம்பரில் 10 கோடி ரூபாயாக உயந்துவிட்டது. வைமாக்ஸ்க்கான போட்டியில் ஈடுகொட்டுப்பத்தற்காகவே இவ்வாறு இன்நிருவனம் மூலதனம் உயர்த்தப்பட்டிருக்கிறது.



வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் கம்பெனியில் டி. சில்வா ராஜூ என்பவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. இவருக்கு இக்கம்பெனியில் 15 சதவிதப் பங்குகள் இருக்கின்றன. இக்கம்பெனியின் மற்ற இரு இயக்குநர்கள் டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு மற்றும் டி.குணசேகரன் தியாகராஜன் என்பவர்களாவார்கள். இருவரும் மலேசியப் பிரஜா உரிமை கொண்டுள்ள தமிழர்கள். டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு இதே பெயரில் மலேசியாவிலும் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார்.


டி சில்வா ராஜூ அமைச்சர் ராசாவின் பெரம்பலுர் தொகுதியைச் சேர்ந்தவர். அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் டாக்டர் சி. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். அமைச்சர் ராசா, அமைச்சராவதற்கு முன்பு இந்த சி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டத்தில்தான் தன் வழக்கறிஞ்ர் தொழிலை ஆரம்பித்தார். சில்வராஜூ தற்சமயம் மத்திய பொதுப் பணித்துறையின் (CPWD) கீழ் சப்-கான்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு, தற்சமயம் என்எச்45 -சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் நடந்துவரும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒரு குவாரியிலிருந்து ஜல்லி வழங்கிவருகிறார்.



இந்த கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் அண்ணன் மற்றும் அக்கா மகன்கள் மற்றும் மகள்களுடன் இணைந்து கோவை செல்டர்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை நடத்திவறுவதாக ‘தி பயனீர்‘ ஏற்கனவே கூறியிருந்தது. மேலும் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மற்றும் ஈக்வாஸ் எஸ்டேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஆகிய கம்பெனிகளும் ஆ. ராசா அமைச்சரான பின் உருவாயின. இந்த இரு நிறுவனங்களிலும் அமைச்சர் ராஜாவின் மனைவி பரமேசுவரி ஓர் இயக்குநராக உள்ளார் என்பது கொசுறு செய்தி.


BSNL இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே உரிமதாரர்களைக் கோரியிருந்த போதிலும், அதன்மீது இறுதிப்படுத்தும் முறையை, அமைச்சரின் வற்புருத்தலின் காரணமாக BSNL நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தது. அமைச்சர் ராஜாவின் நிர்ப்பந்ததின் காரணமாக நிறுவனத்தின் தலைவரும் மேலான் இயக்குநருமான குல்தீப் கொயல் உரிமங்கள் வழங்கும் பணியினை ஜனவரி மத்தியவாக்கில் தொடங்கினார்.



இந்த ஏலத்தில் 20 கம்பெனிகள் பங்கெடுத்திருந்தன. இவற்றில் பிஎஸ்என்எல், 5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. விசாரணையில், இவற்றில் 5 நிறுவனங்களின் முதலாளியும் ஒரே நபர் என்றும், அரசை ஏமாற்றும் நோக்கத்துடன் இவ்வாறு WiExpert Communications, SV Telecom Systems, Digitelco Communications, Spectrus Communications and Technotial Infoways என்ற ஐந்து கம்பெனிகள் பெயரில் டெண்டரில் பங்கேற்றார் என்ற விபரமும் வெளியானது.

இந்த ஐந்து நிறுவனங்களின் முதலாளி சஞ்சய் கபூர் என்பவராவார். இந்த சஞ்சய் கபூர், ராசாவுடன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இறுதியாக, புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், ராசா அமைச்சரான பிறகு, பிரதமர் மன்மோகன் சிங், WiMaxக்கான இந்த டெண்டரையே ரத்து செய்து, புதிய டெண்டர் வெளியிட ஆணையிட்டார்.

இது போகவும், ராசா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டினார் என்ற குற்றச் சாட்டும் சமீபத்தில் எழுந்து அடங்கியது.

நீதிபதி ரகுபதி

இதில், ராசாவுக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வக்காலத்து வாங்கியதால், ராசா தலை தப்பியது.

இது போல், பல்வேறு ‘சிறப்பு’ களுக்கு சொந்தக் காரரான ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது, ராசாவின் மகுடத்தில் சூட்டப்பட்ட, மேலும் ஒரு மாணிக்கம்.



இவ்வளவு நடந்த பிறகும், ராசாவை காப்பாற்றும் கருணாநிதியைப் பெற இந்நாடு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல், அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை பெற நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.


வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சிபிஐ, தன்னுடைய அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தியும், தனக்கு கீழ் பணியாற்றும், பணியாற்றிய அதிகாரிகள் மேல் வழக்கு பதிவு செய்தும், பதவி விலக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ராசாவை, இன்று முதல் “மானங்கெட்ட ராசா” என்று அழைத்தால் என்ன ?

ஒப்பாரி