Sunday, May 2, 2010

நாடாளுமன்றத்தில் நடந்த சூப்பர் விவாதம்...

2006-2007 அன்றைய கணக்குப்படி மக்கள் பிரச்னைகள் பற்றி பேசி, விவாதம் நடத்தி மக்களுக்கு ’நல்லதை’ மட்டுமே செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ரூபாய் 22,089. இதே 2007-2008-ல் ரூபாய் 26,000.

நடப்பு ஆண்டுக்கு நிமிடத்துக்கு ரூபாய் 34,000 என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி, ஒரு எம்.பி-க்கு மாதச் சம்பளம், 16,000. மாதாந்திர ஓய்வூதியம் 8000. தொகுதிப் படியாக மாதம் 20,000.

நாடாளுமன்றம் நடக்கும் நாட்களில் தினப்படியாக ஒரு நாளைக்கு 1000 ரூபாய். பயணப்படி ஒரு கிலோமீட்டருக்கு 8 ரூபாய்.

இது தவிர ஒரு மாதத்துக்கு, எழுது பொருட்கள் வாங்க மற்றும், கடிதங்கள் அனுப்புவதற்காக ரூ.14,000.

ஒவ்வொரு எம்.பி-யும், மனைவி அல்லது, இன்னொரு உதவியாளருடன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய முடியும்.


ஆண்டுக்கு 40 முறை, மனைவி அல்லது உதவியாளருடன், விமானத்தில் முதல் வகுப்பில் இலவசமாக செல்லலாம். டெல்லியில் வி.ஐ.பி-க்கள் குடியிருக்கும் பகுதியில், பெரிய பங்களா ஒதுக்கப்படும். அதற்கான மாத வாடகை ரூபாய் 2000.

ஆண்டுக்கு, 50,000 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம்.

தண்ணீர் இலவசம்.

ஒவ்வொரு பங்களாவிலும், குளிர்சாதனப் பெட்டிகள், ஃப்ரிட்ஜுகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக ஒவ்வொரு எம்.பி-க்கும் வழங்கப்படுகிறது. இதற்கான பராமரிப்பு இலவசம்.

சோபா மற்றும் படுக்கை விரிப்புகளை துவைப்பது உட்பட அரசால் இலவசமாக செய்து தரப்படுகிறது.

இதற்காக ஒரு எம்.பி-க்கு சராசரியாக ஆகும் செலவு ஆண்டுக்கு ரூ.1,40,000.
ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று தொலைபேசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


ஆண்டுதோறும் 1,70,000 இலவச அழைப்புகள் உண்டு. உபயோகப்படுத்தப்படாத இலவச அழைப்புகளை மொபைல் போனுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.


ஒவ்வொரு எம்பியும் அலுவல் ரீதியாக வெளிநாடு பயணம் செல்கையில், முதல் வகுப்பு விமான டிக்கெட் இலவசம். இதுபோக, தங்கும் நாட்டைப் பொறுத்து, தினப்படி உண்டு.
அனைத்து எம்.பி-க்களுக்கும், இலவச மருத்துவ சிகிச்சை வசதிகள்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தவிர, மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடப்பு நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களாக இருப்பவர்களைத் தவிர, ஏற்கெனவே எம்.பி-க்களாக இருந்து சேவையாற்றியவர்கள் என்று கணக்கிட்டால் ஆயிரக்கணக்கில் எம்.பி-க்கள் பட்டியல் வரும்.

அவர்கள் அவ்வளவு பேருக்கும் அரசு சார்பில் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைத் தொடும். இத்தனை தூரம் கோடிகளாக மக்கள் வரிப்பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்லும் அவர்களெல்லாம் முறையாக மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்களா? என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு கடந் த 29-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த ஒரு விவாதமே நல்ல சாட்சி...

உதாரணம். அந்த விவாதம் இதுதான் -

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’மாநில அரசு சட்டவிரோத ஒட்டுக் கேட்பை செய்யாது என்று நம்புகிறேன். 2008-ல் ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவிக்கு சொந்தமான டி3டி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் சட்ட விரோத ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): ’’எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?’’

அவைத் துணைத் தலைவர்: ’’நீங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’ஆதாரங்களை வைத்துத்தான் சொல்கிறேன்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் உட்காருங்கள். அவர்(மைத்ரேயன்) எல்லை மீறினால் நான் பார்த்துக் கொள்கிறேன்.’’திருச்சி சிவா, திமுக எம்.பி

திருச்சி சிவா(தி.மு.க): ’’எப்படி அவர் அவ்வாறு சொல்லலாம்?’’

அவைத் துணைத் தலைவர்: ’’முதலில் நீங்கள் உட்காருங்கள். டாக்டர் மைத்ரேயன், உங்கள் கட்சிக்காரர்களை அமரச் சொல்லுங்கள். சிவா, உங்களுக்கு என்ன எதிர்ப்பு?’’

திருச்சி சிவா: ’’எப்படி அவர் சட்ட விரோட ஒட்டுக் கேட்பு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்று சொல்லலாம். அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அது அவர் கருத்து. நீங்கள் வேண்டுமானால் அதை மறுக்கலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது.

திருச்சி சிவா:: அதற்காக இப்படியான புகார்களை சொல்லக்கூடாது.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அது அவர்கள் கருத்து. எந்த ஒரு தனி நபரைப் பற்றியும் புகார் கூறவில்லை. பல மாநில அரசுகளைப் பற்றி புகார் வந்துள்ளன. இந்த அவைக்கு வந்து, தன்னை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு இல்லாதவரைப் பற்றி புகார் கூறுவது பற்றி விதிகள் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அமருங்கள்.’’

திருச்சி சிவா: ’’சார்(அவைத் துணைத் தலைவரைப் பார்த்து), நாங்கள் உங்களிடம் தான் பேசுகிறோம். நீங்கள்தான் எங்களை உட்காரச் சொல்லலாம். அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் இந்தப் பக்கம் திரும்பி கமென்ட் அடிக்கிறார்கள். கமென்ட் அடிக்கக் கூடாது என்று சொல்லுங்கள்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’டாக்டர் மைத்ரேயன், நீங்கள் என்னிடம் தான் பேச வேண்டும். உங்கள் கட்சிக்காரர்களை மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள்.’’

வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): ’’இவர் எப்போது பார்த்தாலும் தமிழ்நாட்டைப் பற்றியே பேசுகிறார்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’நான் தமிழ்நாட்டை பிரதிநிதித் துவப்படுத்துகிறேன்.ஆனால், அவர் தமிழ்நாட்டை பிரதிநிதித் துவப்படுத்துவதில்லை.’’வசந்தி ஸ்டான்லி, திமுக எம்.பிவசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): ’’இது என்ன விவாதம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’மைத்ரேயன் சீக்கிரம் விவாதப் பொருளுக்கு வாருங்கள்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’(மீண்டும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பற்றி பேசுகிறார்) மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் போன்கள் கூட ஒட்டுக் கேட்கப்படுகிறது.’’

திருச்சி சிவா: ’’சார், இதற்கு இவர் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’நான் ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன் என்று கூறி தொடர்ந்து பேசுகிறார்.’’

வசந்தி ஸ்டான்லி எம்.பி(தி.மு.க): சார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் அமருங்கள். எல்லோரும் பேசினால் கேட்காது. கனிமொழி, உங்களில் ஒருவருக்கு வாய்ப்பு தருகிறேன்.’’

திருச்சி சிவா: ’’சார், நீங்கள்தான் என்னை உட்காரச் சொல்ல வேண்டும். இவர்(மைத்ரேயன்) சொல்லக் கூடாது. இன்னொரு உறுப்பினரைப் பார்த்து. அதுவும் ஒரு பெண் உறுப்பினரைப் பார்த்து...’’

அவைத் துணைத் தலைவர்: ’’என்ன விஷயம் என்று கூறுங்கள்.’’

திருச்சி சிவா: ’’சார், கனிமொழியை(தி.மு.க.)ப் பார்த்து உட்காரச் சொல்கிறார்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’சார், இது போன்று குறுக்கீடு செய்யக்கூடாது. சபை மரபுகளை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார்கள்.’’

திருச்சி சிவா:: ’’சார், பெண் உறுப்பினரைப் பார்த்து உட்கார் என்று சொல்வது, தவறான வார்த்தைப் பிரயோகம்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’டாக்டர் மைத்ரேயன், நீங்கள் என்னைப் பார்த்து பேசுங்கள்.’’

திருச்சி சிவா: ’’சார், இது மீண்டும் மீண்டும் நடக்கிறது.’’

அவைத் துணைத் தலைவர்: ‘’அனைவரும் உட்காருங்கள். கனிமொழி, உங்களுக்கு என்ன வேண்டும்?’’
கனிமொழி(தி.மு.க): ’’சார், உறுப்பினர் இளவரசன்(அ.தி.மு.க) அவையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’மன்னிப்பு கேட்க முடியாது. எதற்காக கேட்க வேண்டும். கேட்கவே முடியாது.’’

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் அமருங்கள். நான் ஆவணங்களை பார்க்கிறேன். ஏதாவது ஆட்சேபகரமாக இருந்தால், அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறேன்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’சார், விஷயத்தை திசைத் திருப்ப விரும்புகிறார்கள். அதனால்தான் பேச விட மாட்டேன்கிறார்கள்.’’

அவைத் துணைத் தலைவர்: ’’யாராவது ஒருவர் பேசுங்கள். அனைவரும் ஒரே நேரத்தில் பேசாதீர்கள்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.’’

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரித்திவிராஜ் சவுகான்: ’’ஏதோ தமிழில் ஆட்சேபகரமான வார்த்தையை சொல்லியிருக் கிறார்கள். தமிழ் என்பதால் என்ன என்று தெரியவில்லை.’’

அவைத் துணைத் தலைவர்: ’’கனிமொழி, நீங்கள் பேசுங்கள்.’’

கனிமொழி: ’’சார், இளவரசன், வசந்தி ஸ்டான்லி பக்கம் திரும்பி, ஆட்சேபகரமான வகையில் உட்காரச் சொன்னார்.’’

டாக்டர் மைத்ரேயன் எம்.பி.(அ.தி.மு.க): ’’உட்காரத்தானே சொன்னார்? அதில் என்ன ஆட்சேபத்துக்குரியதை கண்டுபிடித்தீருக்கிறீர்கள்?’’

அவைத் துணைத் தலைவர்: ’’அனைவரும் அமருங்கள்.’’

கனிமொழி: ’’சார், இளவரசன் உங்களைப் பார்த்து பேசாமல், வசந்தி ஸ்டான்லியைப் பார்த்து, தமிழில் “உட்காரு“ என்று சொன்னார். அது ஆட்சேபகரமானது.’’

அவைத் துணைத் தலைவர்: ’’சரி, நான் ஆவணங்களைப் பரிசீலிக்கிறேன். அனைவரும் அமருங்கள்.’’

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், உக்காரு என்பது தொடர்பாக விவாதம் நடந்தது.

நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்திற்கு 34,000 ரூபாய் செலவாகிறது என்பதை மேலே சொன்ன விவரங்களையெல்லாம் இந் த விவாதத்தோடு நினைத்துப் பாருங்கள்.
’வயிறு எரிகிறது...’ என்றுதானே சொல்கிறீர்கள். பின்னே?


நன்றி. நம் தினமதி நாளிதழ்

சவுக்கு

3 comments:

  1. ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதிலேயே நேரம் கழிகிறது ..
    எப்பவுமே இப்படிதானோ ??

    ReplyDelete
  2. எனக்கும் ஆற்றாமை தான். நேற்று, இரண்டு முக்கியமான சட்டங்கள் 3 நிமிடங்களில் விவாதம் ஏதுமின்றி ஒப்புதல் வழங்கப் பட்டன தெரியுமா ?

    ReplyDelete