Monday, May 31, 2010

திமுக: துரோகங்களின் காலம் ?திராவிட இயக்க வரலாற்றின் மிக முக்கியமான விழுதாக இருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில், இது துரோகங்களின் காலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜ்ய சபைக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு, ஏராளமான பேர், திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே தகுதி உடையவர்களாக இருக்கும் சூழலில், தற்போது, திமுக உயர்நிலைக் குழு அறிவித்திருக்கும் வேட்பாளர்கள், திமுகவில் விசுவாசத்துக்கு இடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது, திமுகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருப்பவர்கள் யார் ?
முதலில் கே.பி.இராமலிங்கம்.

யார் இந்த கே.பி.இராமலிங்கம் ?சேலம் ராசிபுரம் தொகுதியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற வேட்பாளராக நின்று, 1980ம் ஆண்டு வெற்றி பெற்று, அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

1984 நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே ராசிபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.

1987ல் எம்ஜி.ராமச்சந்திரன் திடீரென்று இறந்ததும், அவரின் இறுதி ஊர்வலம் பெரும் கலவரத்திற்கிடையில் நடந்தது. அப்போ, ராணுவ வாகனத்தில், எம்ஜிஆரின் உடல் ஏற்றி வைக்கப் பட்டிருந்த பொழுது, அந்த ராணுவ வாகனத்தில் ஏற, பலர் முண்டியடித்துக் கொண்டு முயற்சி செய்தனர்.

செல்வி.ஜெயலலிதா, எம்ஜிஆர், ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிசிச்சை பெற்ற காலத்திலேயே இன்று கருணாநிதியின் அன்பு உடன் பிறப்பாக உருவெடுத்துள்ள, ஆர்.எம்.வீரப்பனால், ஓரங்கட்டப் பட்டு ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவரது உடலைப் பார்க்க வந்த ஜெயலலிதா, பின்னாளில் ஒரு நாள் நாம், அதிமுகவின் தலைவராக ஆவோம், பிறகு முதலமைச்சராக ஆவோம், அதனால், இப்போது, எம்ஜிஆரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த ராணுவ வண்டியில் ஏறி செல்லலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டார் என்று கருத முடியாது.


எத்தனையோ அரசியல் தலைவர்கள் அதிமுகவில் இருந்த போதும், ஜெயலலிதாவுக்குத் தான், எம்ஜிஆர் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார். ஜெயலலிதாவைத் தான் ராஜ்ய சபை உறுப்பினராக்கி, டெல்லிக்கு அனுப்பினார். அதனால், எம்ஜிஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், எம்ஜிஆர் உடல் வைக்கப் பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிச் செல்வதற்கும், செல்வி.ஜெயலலிதாவுக்கு, தகுதி உண்டா என்றால், கண்டிப்பாக உண்டு.


அந்தத் தகுதியின் அடிப்படையில், ஜெயலலிதா, ராணுவ வண்டியில் ஏறிய பொழுது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த ஜெயலலிதாவை வண்டியில் இருந்து, அன்றைய தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த போதே, பிடித்துத் தள்ளிவயவர்தான் இந்த கே.பி.ராமலிங்கம். இப்படிப்பட்ட கே.பி.ராமலிங்கம், மற்றவர்கள் எல்லாரையும் போலவே, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெறுவார் என்பதை எதிர்ப்பார்க்க வில்லை. நீதிபதியின் மருமகனெல்லாம் கஞ்சா வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற காலம் அது.

அப்போது அமலில் இருந்த தடா சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவுக்கு, யார் யாரையெல்லாம் பிடிக்காதோ, அவர்கள் அனைவரையும் கைது செய்து கொண்டிருந்தார். இதற்குப் பயந்துதான், இன்று, கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும், கி.வீரமணி, அன்று, ஜெயலலிதாவுக்கு, தஞ்சையில், “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டம் கொடுத்து, வீர வாள் பரிசளித்தார்.

இன்றும் பெரியார் திடலில் நடக்கக் கூடிய கூட்டங்களில் “பாம்பையும் பார்பனரையும் கண்டால், பாம்பை விட்டு விட்டு, பார்ப்பனரை அடி“ என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்று, கி.வீரமணிக்கு, ஜெயலலிதா பார்ப்பனராக தோன்றவில்லை.
அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் தான், கே.பி.ராமலிங்கம், திமுகவுக்கு தாவுகிறார்.

தாவிய உடனேயே, அவருக்கு அடித்தது யோகம். உடனடியாக மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பாக சீட் வழங்கப் பட்டு, ஜெயித்தும் விட்டார். இதுதான் கே.பி.ராமலிங்கத்தின் வரலாறு.

அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்வது தங்கவேலு.
தங்கவேலு தங்கவேலு ஒரு தலித். தலித் எனறால் தலித் சமுகத்துக்காக இவர் உழைத்வர் என்றால் இல்லை. சரி யாருக்காக உழைத்திருக்கிறார் ? அவர் தனக்காக உழைத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட தலித் போராளிதான் இந்த தங்கவேல்.

இந்த தங்கவேலுவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. இந்த தங்கவேலு வைகோ திமுகவை விட்டு பிரிந்து மதிமுகவை ஆரம்பித்த பொழுது, இவர் தன்னை மதிமுகவின் ஒரு முக்கியமான தொண்டராக நினைத்து திமுகவை விட்டு விலகி, மதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


இணைத்துக் கொண்டவர், மதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தாரென்றால் அதுவும் இல்லை. இந்த தங்கவேல், தன்னைத் தவிர யாருக்குமே விசுவாசமாக இல்லை.


சரி, இப்படிப்பட, விசுவாசமற்ற துரோகிக்கு, திமுகவில், எப்படி ராஜ்ய சபா சீட் கிடைத்தது என்றால் அது ஒரு சுவையான மற்றொரு கதை.

தமிழ்நாட்டில்,”பள்ளர்” என்றொரு சமூகம் இருக்கிறது. இந்தச் சமூகம் ஒரு பலம் வாய்ந்த சமூகம். ஆனால், இந்தச் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பது இந்தச் சமூகத்தவரின் குமுறல்.

இந்தச் சமூகம் பெரும்பான்மையாக உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டு, இந்தச் சமூகத்தவரின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று, திமுக அல்லது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பல முறை தடுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ”பள்ளர்” சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இந்த தங்கவேல். எதற்காக தங்கவேலுக்கு ராஜ்ய சபா பதவி ? எதற்காக என்றால், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, இதுவரை திமுக அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதுதான்.

பள்ளர் சமூகம், தங்களை ஒரு பெரிய பலம் பொருந்திய ஒரு அரசியல் சக்தியாக கருதி வந்தாலும், அவர்கள் ஒரு வெறும் ”கருவேப்பிலை கொத்தாகவே” பயன் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது, பள்ளர் சமூகத்தினரின் கருத்து. இதனால், தாங்கள் புறக்கணிக்கப் பட்டே இது வரை வந்ததாகவும், இனிமேல் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காத,திமுகவை கடுமையாக எதிர்ப்பதாகவும் திமுக தலைமைக்கு தகவல் வந்தது இதையடுத்தே, பள்ளர் சமூகத்தை சமாதனப்படுத்தவும், அவர்களை குளிர்விக்கவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக திமுக தலைமை அறிவித்திருப்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளர் சமூகத்தினரிடம் பேசிய போது, திமுக, மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே, தங்களை பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் பயன் படுத்திக் கொள்வதாகவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக நியமித்திருப்பதால், எந்த ஒரு பயனும் ஏற்படாது என்றும், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கே வாக்களிக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்ததனர்.


செல்வகணபதி பற்றிய விரிவான செய்திகள் நாளை தொடரும்.
சவுக்கு

No comments:

Post a Comment