Wednesday, February 3, 2010

ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்

ஈழத்திலே சிங்களக் காடையர்கள் தந்த நெருக்கடிக்கும், குண்டு வீச்சுக்கும் அஞ்சி, தாய்த் தமிழகம் நம்மை வாரி அணைத்துக் கொள்ளும், வாஞ்சையோடு ஏந்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் எம் மண்ணில் கால் வைத்த ஈழத் தமிழர்களே ! இங்கேயும் ராஜபக்ஷே ஆட்சிதான் நடக்கிறதோ என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தியதற்காக வெட்கித் தலை குனிகிறோம்.

தமிழுக்கு விழா எடுத்து, தமிழனை காவல்துறையை விட்டு அடித்து நொறுக்கும் கயவனின் ஆட்சியல்லவா நடக்கிறது இங்கே ? எத்தனை அராஜகங்கள் ? எத்தனை அட்டூழியங்கள் ? எத்தனை பேருக்கு மண்டை உடைப்பு ?

காவல்துறை இருக்கும் தைரியத்தில் தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும், ஊரான் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்ற இறுமாப்போடு இருக்கும் நபர்கள் இருக்கும் வரையில் உங்களை வாருங்கள் என்று வரவேற்க வழியில்லாமல் இருக்கிறோம்.

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற ஒன்றை கட்டி, அதற்குள் கைதிகளை அடைப்பது போல அடைத்து வைத்து, 24 மணி நேரமும் காவல்துறையின் கடும் கண்காணிப்பில் இலங்கைத் தமிழரை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவு பெரிய தவறா ?

பெரிய தவறென்றே கருணாநிதி கருதுகிறார். அதனால்தான் காவல்துறையினரை விட்டு செங்கல்பட்டு முகாமுக்குள் இருந்த 38 அகதிகளின் மீது கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

இரவு 9 மணிக்குத் தொடங்கிய தாக்குதல் விடியற்காலை 2 மணி வரை தொடர்ந்துள்ளது. மனிதர்களின் மீதான தாக்குதலைத் தவிர்த்து முகாம்வாசிகள் வைத்திருந்த அரிசி பருப்பு, மளிகைப் பொருட்களையும் நாசம் செய்திருக்கின்றனர் காவல்துறையினர்.

கருணாநிதியின் காவல் துறையினர் ஆயிற்றே ?

அதை நிரூபிக்க வேண்டாம் ?

ஈழத் தமிழருக்காக போராடிய வழக்கறிஞர்களை தாக்கியதோடல்லாமல், அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய காவல்துறை அல்லவா இது ? இத்தாக்குதலை காஞ்சிபுரம் எஸ்பி ப்ரேம் ஆனந்த் சின்கா முன்னின்று நடத்தியுள்ளார்.


தாக்குதல் முடிந்ததும், அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றி செங்கல்பட்டிலிருந்து வேலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, அரசு ஊழியரை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியது போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முகாம் வாசிகள் வைத்திருந்த செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.


முகாம் வாசிகள் அனைவரும் உடல் முழுவதும் தடியடிக் காயங்களோடு இருக்கின்றனர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகமாம் இது. வெட்கம்.

தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி தமிழர்களை எப்படி நடத்துகிறார் பார்த்தீர்களா ?


புலம் பெயர்ந்த தமிழர்களே !

ஈழத் தமிழர்கள் அனைவரும் செத்து ஒழிய வேண்டும், தன் குடும்பம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார்.

கருணாநிதியின் துரோகத்தை அடையாளம் காட்டுங்கள். செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறைகூவல் விடுங்கள். கருணாநிதியின் காலை நக்கிப் பிழைக்கும் பிச்சைக் காரர்கள் மட்டும் மாநாட்டுக்கு வருகை தரட்டும். சுயமரியாதை உணர்வுள்ள அனைவரும் மாநாட்டை புறக்கணியுங்கள்.


நாளை (04.02.2010) மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே, செங்கல்பட்டு முகாம் அகதிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பத்திரிக்கையாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இச்செய்தியை சென்னையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்.

அனைவரையும் வரச் சொல்லுங்கள். நமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவிப்போம்.

சவுக்கு

1 comment:

  1. அய்யா பெரியவரே...( வயசுக்கு மரியாதை கொடுக்கிறேன்..)
    நடத்தைக்கு அல்ல..
    இருக்கப்போவது சில நாள்..

    போகும் போதாவது நல்லது செய்துவிட்டுப் போ தமிழக காவலனே...

    ReplyDelete