Friday, February 5, 2010

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்




டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி 7 வருடம் முடித்தவர்களை விடுதலை செய்துள்ளதால், தன்னையும் முன் விடுதலைக்கு பரிசீலிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.




இம்மனுவை எதிர்த்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கெதிராக தானே நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று நளினி தாக்கல் செய்திருந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி நளினி முன் விடுதலை தொடர்பாக அமைக்கப் பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. அது வந்தாலும், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது, மத்திய அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

(2ம் தேதியே, வேலூரில் உள்ள ஆலோசனைக் குழு தன் முடிவை அரசிடம் அளித்து விட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.)




இதையடுத்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.

திடீரென்று கோபமடைந்த நீதிபதி எலிப்பி தர்மா ராவ், டாக்டர்.சுவாமி வழக்கறிஞரைப் பார்த்து "நீங்கள் சுப்ரமணிய சுவாமிக்காக ஆஜராகி வாதாடுகிறீர்கள், ஆனால், சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களில் வாதாடிக் கொண்டிருக்கிறாரே.. ! நீதிமன்ற விசாரணையில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கையில் இவ்வாறு ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது என்பது உங்கள் கட்சிக் காரருக்குத் தெரியாதா ?

நளினி நேரில் ஆஜராகக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்ல இவர் யார் ? இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் தெரியுமா ?

நாங்கள் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொள்கிறோம். சுப்ரமணியன் சுவாமி, சட்டம் படித்தவர், ஒரு முனைவர் பட்டம் பெற்றவர், ஒரு அரசியல் கட்சித் தலைவர். இதுதான் அவர் நீதிமன்றத்துக்கு காட்டும் மரியாதையா ?

இந்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவர் ஏற்கனவே, ஊடகங்களில் முடிவு செய்து விட்டது போலப் பேசியிருக்கிறாரே ?

இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா " என்று கேட்டனர். அதற்கு சுவாமி வழக்கறிஞர், பார்க்கவில்லை என்று கூறினார். " என்ன கவுன்செல், செய்தித்தாள் படிக்காமல் எப்படி தேநீர் அருந்துகிறீர்கள்" என்று கூறிய நீதிபதி, இது போன்ற நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து டாக்டர்.சுவாமியின் வழக்கறிஞர், சுவாமி சார்பில், தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், இது போன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் கூறினர்.

இதையடுத்து நீதிபதிகள், நளினி நேரில் ஆஜராகலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.


சவுக்கு

2 comments:

  1. சுவாமி போன்றவர்கள் மீது கண்டனத்தை தவிர வேறு ஒரு மயிரும் புடுங்க முடியாது நீதிமன்றங்களால். iniavan.

    ReplyDelete
  2. சாமி என்னவோ இந்திய அரசே தன் விரலசைவில் இயங்குவது போலவும், நீதிமன்றம் தன் கண்ணசைவில் இய்ங்குவது போலுமல்லவா நடந்து கொள்கிறார்?ராஜீவ் கொலையில் அவருக்கும் பங்கிருந்ததாக பேசிக் கொண்டார்களே?ஒரு வேளை அதனால் தான் நளினி விடுதலைக்கு அஞ்சுகிறாரோ?

    ReplyDelete