Tuesday, December 29, 2009

திவாரி லேகியம்.. … … … …. ?




நாராயண் தத் திவாரி என்ற ஆந்திர மாநில முன்னாள் கவர்னரைப் பற்றி சமீபத்தில் படித்திருப்பீர்கள். இவரின் ஆபாச வீடியோ தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் பட்டவுடன், அந்த வீடியோ பொய் என்று கூறியவர், காங்கிரஸ் மேலிடத்தின் நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்தார்.


தனது 17வது வயது முதல் தொடர்ந்து பொது வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ள திவாரி, தற்பொழுது கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டுள்ளதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும். அதைத் தவிர்க்க “சவுக்கு“ சார்பில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப் படுகிறது.


தமிழ்த் தொலைக்காட்சிகளில் இரவு நேரங்களில் “இனிய இல்லறம்“, “அந்தரங்க சந்தேகம்“ போன்ற பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மனவியல் மருத்துவர் விளக்கம் அளிக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் பல இளைஞர்கள் “ஆண்மைக் குறைவு உள்ளது, எனக்கு திருமணம் ஆகப் போகிறது, என்ன செய்வது டாக்டர் ? “ என்று அச்சத்தோடு கேட்கின்றனர்.

இந்நிலையில், திவாரி மூன்று பெண்களோடு சல்லாபத்தில் ஈடுபட்டார் என்ற தகவலைக் கேட்டு இளைஞர்களை ஆட்டிப் படைக்கும் கேள்வி “எப்படி ? “ என்பதுதான். அதனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் என்.டி.திவாரி பங்கேற்று நேரடி விளக்கம் அளித்தால் பல இளைஞர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும்.

திவாரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துவங்கினால், “சேலம் சித்த மருத்துவர் சிவராஜ்“ போன்ற பல மருத்துவர்கள், துண்டைக் காணோம், துணியைக் காணோம்“ என்று ஓடத் துவங்குவார்கள். உண்மையான மனவியல் மருத்துவர்களான டாக்டர்.நாராயண ரெட்டி, டாக்டர் ஷாலினி போன்றோருக்கு தொழில் படுத்து விடும்.


அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், வயாகரா போன்ற ஊக்க மருந்துகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தை பல மருந்துக் கம்பேனிகளை, இது போன்ற ஊக்க மருந்து தயாரிப்பில் இறங்கத் தூண்டியுள்ளது.

“திவாரி லேகியம்“ என்ற பெயரில், என்.டி.திவாரியே, லேகியம் தயாரித்து விற்கத் துவங்கினால், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் திவாரி இடம் பிடிக்க வாய்ப்பு உண்டு.

இந்த லேகியத்தை, சன் குழுமம், வினியோகஸ்த உரிமையை வாங்கி, அதற்கு, தனது சேனல்கள் அனைத்திலும், ப்ரைம் டைமில் விளம்பரங்கள் செய்யவும் வாய்ப்பு உண்டு.

அடுத்து, “என் வாழ்க்கையில்“ என்ற தலைப்பில் திவாரியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பு வெளியிட்டதும் இப்புத்தகம் மிகப் பெரிய வெற்றி வெளியீடாக இருக்கும் என்று, இந்தியாவின் அனைத்து பதிப்பகங்களும் போட்டி போட்டுக் கொண்டு இப்புத்தகத்தை வெளியிட முன் வரும்.

வெளிவந்த ஒரு வாரத்திலேயே இப்புத்தகம் டாப் 10 லிஸ்டில் முதலிடத்தை பெறும். பிறகு, இப்புத்தகத்தை திரைப்படமாக எடுக்க இந்தியாவின் பிரபல இயக்குநர்களான ராம் கோபால் வர்மா, சேகர் கபூர், தீபா மேத்தா, மணி ரத்னம் போன்ற இயக்குநர்கள் முன் வரக் கூடும். அத்திரைப்படம், மிகுந்த பொருட்செலவே இல்லாமல் 5 அல்லது 6 அறைக்குள்ளேயே எடுத்து முடித்து விடலாம். திவாரியின் அரசியல் செல்வாக்கை வைத்து, சென்சாரிலும், அதிக வெட்டு இல்லாமல், படத்தை வெளியிட வாய்ப்பு உண்டு.



திவாரி வேறு யாரோ என்று நினைத்து கட்டிப் பிடித்து விட்டாரோ ?


நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பதனால், திவாரிக்கு மற்ற அரசியல் தலைவர்களைப் பற்றி நன்கு தெரியும். அதனால், இப்போது இவர் மீது குற்றச் சாட்டு சுமத்தப் பட்டுள்ளதைத் தொடர்ந்து, நான் மட்டும் இப்படி இல்லை, இந்த தலைவர் இப்படி, அந்த தலைவர் அப்படி, என்று, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றி பல கிளுகிளுப்பான கதைகளை எடுத்து வெளிவிடலாம்.

பத்திரிக்கையாளர்கள் திவாரியை மொய்த்துக் கொள்வார்கள். இந்தியாவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போல, பத்திரிக்கைகள் இப்பிரச்சினைகளை முதல் பக்கத்திலும், ப்ரைம் டைமிலும் வெளியிட்டு முக்கியத்துவம் தரும்.


செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு என திவாரி பத்திரிக்கைகளில் தொடர் எழுதலாம் இவரின் “விளையாட்டுக்களை“ அறிந்த வாசகர்கள், இத்தொடருக்கு பெருமளவில் ஆதரவு தருவர். இளைஞர்கள், முதியவர்கள், என அனைத்து தரப்பிலிருந்தும் திவாரிக்கு ஆதரவு பெருகும்.

திவாரியின் லீலைகளைப் பற்றி செய்தி ஒளிபரப்பிய சிஎன்என்.ஐபிஎன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய், வாழ்க்கை 86 வயதில் தொடங்குகிறது என்று திவாரி நிரூபித்துவிட்டார் என்று கூறியதில் இருந்து திவாரிக்கு ஆதரவு எப்படி பெருகும் என்பதை விளக்கத் தேவையில்லை.


தமிழ்த் தொலைக்காட்சிகளில் சமீபத்தில் பிரபலமடைந்த நிகழ்ச்சிகளான “இப்படிக்கு ரோஸ்“, “கருத்து யுத்தம்“ “நீயா நானா ? “ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கலாம். அந்நிகழ்ச்சிகளில், அனைத்து தலைப்புகளும், பாலியல் தொடர்பானவைகளாகப் பார்த்துக் கொண்டால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வானத்தைப் பிய்த்துக் கொண்டு பறக்கும்.


இந்த ஆலோசனைகளை மேற்கொண்டால் திவாரிக்கு அளிக்கப் பட்டிருக்கும் கட்டாய ஓய்வு, அவருக்கு எந்த விதத்திலும் மன உளைச்சலை தராது.


சரி. தமாஷ் போதும். இப்போது சற்று சீரியசாக இந்த விஷயத்தைப் பார்ப்போம்.


இந்த விஷயத்தை ஒரு தனி நபரின் பாலியல் விவகாரங்களாக நாம் பார்க்க முடியாது. ஆந்திர மாநில ஆளுநராக இருந்த திவாரியை, விரும்பி பெண்கள் அவரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்றால் அதை ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயமாக பார்க்கலாம்.

ஆனால், திவாரி, தான் ஆளுனர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை பலவந்தமாக ஆளுனர் மாளிகைக்கு அழைத்து வந்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.


சரி. இவ்வாறு பெண்கள் உத்தராகாண்ட் மாநிலத்திலிருந்து ஆந்திராவுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு பணம் வழங்க வேண்டாமா ? கொடுத்திருப்பாரல்லவா திவாரி ? அவர்கள் 2ம் வகுப்பு ரயிலிலா வந்திருப்பார்கள் ? விமானத்திலல்லவா வந்திருப்பார்கள் ?

இந்த அத்தனை செலவுகளையும் திவாரிதானே ஏற்றிருக்க வேண்டும் ? இந்தச் செலவுகளை, திவாரி தனது சொந்தப் பணத்திலா செய்திருப்பார் ? கண்டிப்பாக, அரசாங்கத்தில் எப்போதும் இருக்கும் “இதரச் செலவுகள்“ (Miscellaneous Expenses) என்ற தலைப்பில் எப்படியாவது அரசுக் கணக்கில் எழுதியிருக்க மாட்டார்களா ?

அரசுக் கணக்கில் எழுதினால் அது மக்களின் வரிப்பணம் தானே ?

நமது பணம் தானே ?

இதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் ?


இந்த திவாரி எப்படிப்பட்ட மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 1975ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, சஞ்சய் காந்தி உத்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார். அப்போது உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி.

விமானத்திலிருந்து சஞ்சய் காந்தி இறங்கிய போது திடீரென்று ஓடிச் சென்ற திவாரி, சஞ்சய் காந்தியின் ஷு லேஸ் அவிழ்ந்திருந்ததால் உடனடியாக விமானப் படிக்கட்டிலேயே அந்த லேஸை கட்டி விட்டார். அதிமுக வினதின் காலில் விழும் கலாச்சாரத்திற்கெல்லாம் திவாரி முன்னோடி.


இந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் திவாரியோடு காட்சியளித்ததாகக் கூறப்படும் மூன்று இளம் பெண்களும், உத்தராகாண்ட் மாநிலத்திலிருந்து திவாரிக்காகவே வரவழைக்கப் பட்டுள்ளனர். உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆந்திர ஆளுனர் ஆவதற்கு முன்பே, திவாரிக்கு நெருக்கம் என்று கூறப்படுகிறது.


ஆளுநர் மாளிகையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் அரவிந்த் சர்மா என்ற அதிகாரி ராதிகா என்ற பெண்ணுடன் மிகுந்த நெருக்கம் என்று கூறப்படுகிறது. இந்த அரவிந்த் சர்மாதான் ராதிகா மூலமாக திவாரிக்கு பெண்களை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆனந்த் சர்மாவும் ராதிகா அனுப்பி வைத்த பெண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ராதிகா திவாரியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியதற்கான காரணம்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் இரும்புச் சுரங்கத்துக்கான லைசென்ஸை கேட்டிருக்கிறார் ராதிகா. திவாரி இக்கோரிக்கையை அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் தெரிவித்திருக்கிறார்.

திவாரி மீது எப்போதுமே மரியாதை இல்லாத ராஜசேகர ரெட்டி, திவாரியை சட்டையே செய்ய வில்லை. ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு ராதிகா மீண்டும் சுரங்க லைசென்ஸ் வேண்டி நெருக்கடி கொடுத்துள்ளார்.

சரி, ஒழுங்காக கேட்டால் இந்த ஆள் லைசென்ஸ் தரமாட்டான், இவனை கருப்பு அஞ்சல் செய்யலாம் (அதான் சார் ப்ளாக்மெயில்) என்று முடிவெடுத்த ராதிகா, திவாரியின் காதல் லீலைகளை வீடியோ படமெடுத்திருக்கிறோம், உடனடியாக கடப்பா மாவட்டத்தில் சுரங்கம் வெட்ட லைசென்ஸ் கொடுங்கள் என்று திவாரியின் சிறப்பு அதிகாரி அரவிந்த் சர்மாவுக்கு நெருக்கடி கொடுத்ததகாவும், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சர்மா, ராதிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.


அரவிந்த் சர்மாவின் இந்தக் கொலை மிரட்டலை கண்டு, ஏதும் விபரீதமாக நடக்கப் போகிறது என்று உஷாராகிய ராதிகா, உடனடியாக ஆந்திர மாநிலத்தின் ஆந்திர ஜோதி தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்று, இந்த வீடியோவை கொடுத்தவுடன் தான், பூகம்பம் கிளம்பியது.


இந்திய ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், வெளியில் சொல்லாத ஒரு ரகசிய ஒப்பந்தம் ஒன்று உண்டு. ‘என்னுடைய பொது வாழ்வை பற்றி நீ எழுதலாம், நான் என் படுக்கை அறையில் என்ன செய்கிறேன் என்று நீ எழுதக் கூடாது ‘ என்பது தான் அது.


86 வயதில் இந்த கொட்டும் அறுவைசிகிச்சை (ஸ்டிங் ஆபரேஷன் சார்)ல் சிக்கியிருக்கும் திவாரி, இந்த 86 வயதில் தான் இந்த லீலைகளை ஆரம்பித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?


உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று முறை
நிதி அமைச்சர்
பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
திட்டக் குழு துணைத் தலைவர்
ராஜ்ய சபை உறுப்பினர்
மத்திய தொழில் துறை அமைச்சர்
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்
வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தப் பதவிகளெல்லாம் வகித்த போது திவாரி என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள் ? இந்த லீலைகளை அப்போதெல்லாம் அரங்கேற்றாமலா இருந்திருப்பார் ?

அப்பொழுது இந்தப் பத்திரிக்கைகள் என்ன செய்து கொண்டிருந்தன ? இது போன்ற விஷயங்கள் பத்திரிக்கை உலகத்துக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது.

ஆனால், எந்தப் பத்திரிக்கையும் இதைப் பற்றி எழுத எவ்வித முயற்சியையும் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாறு எந்தப் பத்திரிக்கையாவது “திவாரியின் தீராத விளையாட்டுத்தனத்தைப் “ பற்றி எழுதியிருந்தால் 60 ஆண்டுகளாக திவாரி, அப்பழுக்கில்லாமல் பொது வாழ்வில் இருந்திருக்க முடியுமா ?


உலகில் நீலப்படங்கள் எடுப்பதில் முதன்மையான தேசம் அமெரிக்கா. அமெரிக்காவில் நீலப்பட சந்தையின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 4.3 பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் 2007 கோடி ரூபாய்கள்.

இப்படி நீலப்படமாக எடுத்துத் தள்ளும், அமெரிக்காவின் தலைவர்கள் யாராவது இப்படிப்பட்ட பாலியல் புகாரில் சிக்கினால் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். பில் கிளின்டன் மோனிகா லெவின்ஸ்கி கதை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏறக்குறைய பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு பில் கிளின்டன் நெருக்கடிக்கு தள்ளப் பட்டார். வெளிப்படையாக தொலைக்காட்சியில் தோன்றி, அமெரிக்க மக்களிடம் மன்னிப்பு கோரிய பிறகுதான் அமெரிக்க மக்களின் கோபம் சற்றே தணிந்தது.


அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, ஒரு சாமான்ய மனிதன் எப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபடலாம். பல முறை விவாகரத்து செய்யலாம். பல பெண்களுடன் / ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்களை ஆளும் தலைவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஒரு செனட்டர் (நம்ம ஊர் எம்.பிக்கு நிகர்) பாலியல் புகாரில் சிக்கினாலும், உடனடியாக அவரை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள்.


ஆனால், இந்தியாவில், தலைவர்கள் செய்யும் தவறுகளை, ஒழுக்கக் கேடுகளை, அயோக்கியத்தனத்தை, அக்கிரமங்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு சாமான்ய மனிதன், நமது அலுவலகத்திலோ, அல்லது வீட்டின் அருகிலோ திருமணத்தை தாண்டியோ, திருமணத்துக்கு முன்போ, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பாலியல் உறவில் ஈடுபட்டனர் என்று தெரிய வந்தால், அதைப் பற்றி உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசி, சம்பந்தப்பட்டவர்களை சந்தி சிரிக்க வைத்த பிறகுதான் ஓய்கிறோம்.

சாமான்ய மக்கள் இது போல் தவறுகளைச் செய்கையில் கோபப் படும் நமக்கு, நமது தலைவர்களின் ஒழுக்ககீனங்கள், அலட்சியமாக தோன்றுகின்றன.


திவாரியின் விஷயம் ராதிகா என்ற பெண்ணால் மீடியாவுக்கு கொடுக்கப் பட்டதால் வெளியே வந்தது. ஒரு வேளை ராதிகாவுக்கு கடப்பா மாவட்டத்தில் சுரங்க லைசென்ஸ் வழங்கப் பட்டிருந்தால், இந்த விஷயம் வெளியே வந்திருக்குமா ? நிச்சயம் வந்திருக்காது.


திவாரி மட்டும் தான் இவ்வாறு ஆளுனர் மாளிகையை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா ? வேறு யாருமே இவ்வாறு செய்யவில்லையா ? இந்தியாவில் ஆளுனர்கள் மட்டும் தான் இவ்வாறான பாலியல் ரீதியான அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகிறார்களா ?

பொது வாழ்வில் இருக்கும் யாரும் இத்தவறுகளை செய்வதில்லையா என்றால் செய்கிறார்கள். தொடர்ந்து, நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது பற்றிய செய்திகனை வெளியிட வேண்டிய ஊடகங்களின் கனத்த மவுனம்தான் வருத்தம் அளிக்கிறது.


தனிநபரின் ஒழுக்கத்தை விட, நம்மை ஆளும், நமது சட்டங்களை இயற்றும், நம் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் தலைவர்களும், அதிகாரிகளும் ஒழுக்கமாக இருப்பது அவசியமல்லவா ?

இன்று இச்செய்தி வெளியான பிறகும் கூட, சில ஊடகங்கள் இச்செய்தியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது தவறு என்று எழுதுகின்றனவே ? நேற்றைய “தினமணி“ நாளேட்டின் தலையங்கம்.

“ஆளுநர் தாய்லாந்து சென்று, ஒரு ஸ்பா-வில் ஓய்வெடுத்து, எப்படி இருந்திருந்தாலும் யாரும் குறைசொல்ல முடியாது. அந்த நாட்டுச் சட்டத்திற்கு அது ஏற்புடையது. ஆளுநர் மாளிகையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது முறையற்ற சட்டவிரோதச் செய்கைதான் இன்று பிரச்னையாகியிருக்கிறது. ஆனால், யாரோ ஒரு பெண்மணி கொண்டு வரும் ஒளிக்காட்சிகளை அப்படியே ஒளிபரப்பவும் அதை நியாயப்படுத்தவும் முடியுமென்றால், அத்தகைய ஊடகச் சுதந்திரம் சற்று மிகையாகத்தான் இருக்கிறது. “


இதுபோல, பாலியல் ரீதியாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒரு நபரைப் பற்றி ஒரு தொலைக்காட்சி ஒளிக்காட்சிகளை ஒளிபரப்பினால், அது மிகையான ஊடகச் சுதந்திரம் என்று தினமணி கூறுவது எப்படி சரியாகும் ?

இச்செய்தி பொய்யாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி மீதும், அந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் மீதும், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்பது, அத்தொலைக்காட்சிக்கு தெரியாதா ? தாங்கள் செய்தி வெளியிடுவது ஆளுனருக்கு எதிராக, இதன் விளைவுகள் என்ன என்பதை அத்தொலைக்காட்சி அறியாமலா வெளியிட்டது ?


தினமணியின் நிலைப்பாடு, மிகுந்த குழப்பத்தோடும், அரசியல்வாதிகளின் அநாகரீகங்களுக்கு ஒத்திசை பாடும் தொனியில் உள்ளது.


ஆயுத பேர ஊழலை அம்பலப்படுத்த முயன்ற டெகல்கா இதழும், ராணுவ அதிகாரிகளுக்கு, பாலியல் தொழில் செய்யும் பெண்களை அனுப்பித்தான் இறுதியாக பங்காரு லட்சுமணனை சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

டெகல்கா, ராணுவ அதிகாரிகளுக்கு பெண்களை அனுப்பியது பத்திரிக்கை தர்மம் அல்ல, இது தவறு என்று அப்போதும் சில ஊடகங்கள் எழுதின, பேசின. டெகல்கா பெண்களை அனுப்பியது தவறென்றால், ஆயுதம் வாங்க ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக எனக்கு பெண்களை அனுப்பு என்று சொன்ன ராணுவ அதிகாரியை என்ன சொல்வது ?

டெகல்கா அப்படி பெண்களை அனுப்பி இவர்களின் முகத்திரையை கிழிக்க வில்லை என்றால், இன்று வரை அந்த ராணுவ அதிகாரிகள் யோக்கிய வேஷம் தானே போட்டுக் கொண்டிருப்பார்கள் ?


ஊடகங்கள் இது போன்ற இரட்டை நிலைபாடு எடுத்தால் என்.டி.திவாரி போல, இந்தியா முழுவதும் பல திவாரிகள் உருவாகுவார்கள். இந்தியா முழுக்க பல திவாரிகள் உருவானால், அவர்களை குடியமர்த்த இன்னும் நிறைய ராஜ்பவன்கள் கட்ட வேண்டியது வரும். அதற்கும் மக்கள் வரிப்பணம் தான் செலவு செய்யப் படும்.

சவுக்கு



வாக்களியுங்கள் நண்பர்களே

2 comments: