Tuesday, December 15, 2009

திமுகவின் புதிய மாவட்ட செயலாளர் SS.கிருஷ்ணமூர்த்தி IPS


எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐபிஎஸ்




சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப் பட்ட, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஐபிஎஸ், திமுகவின் புதிய மாவட்ட செயலாளராக உருவெடுத்துள்ளார்.

திமுகவின் மாவட்ட செயலாளர்களை விட விசுவாசமாக, அழகிரிக்கும், கருணாநிதிக்கும் செயல்பட்டு வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக வின் மூத்த நிர்வாகிகள் கூட, திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத் தேர்தலில் காட்டாத அக்கறையை கிருஷ்ணமூர்த்தி காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்சியின் மூத்த நிர்வாகிகளை விட, அழகிரிக்கும் கருணாநிதிக்கும் விசுவாசமாக செயல்பட்ட காரணத்தினாலேயே கிருஷ்ணமூர்த்தியை அதிரடியாக தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


யார் இந்த கிருஷ்ணமூர்த்தி, இவரது பின்புலம் என்ன என்று சவுக்கு புலன் விசாரணையில் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால், க்ரூப் 1 சர்வீசில், டிஎஸ்பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டு, இன்று பதவி உயர்வில் ஐஜியாக பணி புரியும் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பணியில் சேர்ந்த நாள் முதலாக தனது அடாவடி (High handed) நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கீரனூரில் டிஎஸ்பி யாக பணி புரிந்த போது மூன்று பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக காட்டிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைபவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.


பிறகு சில நாள் சிபிஐல் பணியாற்றினார். சிபிஐல் பணியாற்றுகையில் ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கும் குழுவில் இருந்தார். இவரது கட்டுப்பாட்டில் இருந்துதான் கோடியக்கரை மிராசுதார் சண்முகம் தப்பிச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றதாக புகார் எழுந்தது. இவர் மீது எடுக்கப் பட்ட துறை நடவடிக்கை 2001ல் தனது அரசியல் செல்வாக்கால் முடிவுக்கு வந்தது.



பிறகு பதவி உயர்வில் எஸ்.பியாக ஆகி, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தென் மண்டல எஸ்.பியாக பதவி வகித்தார். பிறகு சில நாள் சிபி.சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் மத்திய சரக காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.


லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்.பியாக பணியாற்றிய காலத்தில் தான், அத்துறை, தமிழகமெங்கும் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் நுழைந்து அரிசியை கைப்பற்றி ஜெயலலிதா திமுக அரசு மீது சுமத்திய புழுத்துப் போன அரிசி என்ற குற்றச் சாட்டை மெய்ப்பிக்கப் பார்த்தது. இதன் பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு மேலதிகாரிகயாக பணியாற்றியவருக்கும், மோதல் வெடித்தது.


லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டு மருத்துவ விடுப்பில் இருந்த காலத்தில் தனக்கு அலுவலகப் பணிக்காக வழங்கப் பட்டிருந்த TN-01-G-2001 என்ற குளிர் வசதி செய்யப் பட்ட அம்பாசிடர் காரை தனது உறவினர்களுடன் திருப்பதி சென்று வர பயன்படுத்தினார் என்று அவரது மேலதிகாரி குற்றம் சாட்டினார்.


அலுவலக காரை துஷ்பிரயோகம் செய்வது அனைத்து காவல்துறை அதிகாரிகளும் செய்வதுதான் என்றாலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி இந்த வேலையைச் செய்ததுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, இதற்கு அடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தின் துணை ஆணையராக நியமிக்கப் பட்டார் கிருஷ்ணமூர்த்தி. இதன் பின் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலத்தில் அப்போது மாநகர காவல் ஆணையராக இருந்த விஜயக்குமாருடன் மிகுந்த நெருக்கமானார்.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்தில், பல ஊழியர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப் பட்டு, தங்கள் வீடுகளில் இருந்து நள்ளிரவில் கைது செய்யப் பட்டார்கள் நினைவிருக்கிறதா ? இந்தப் பணிகளையெல்லாம் திறம்பட செய்து முடித்தவர் இந்த கிருஷ்ணமூர்த்திதான்.


வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப் பட்டார் நினைவிருக்கிறதா ? அந்த வெங்கடேச பண்ணையாரை சுட்டுக் கொன்றவர் இந்த எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திதான். ஒரு உயிரைக் கொல்கிறோமே என்ற எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் பல கொலைகளைச் செய்தவர்தான் இந்த கிருஷ்ணமூர்த்தி.


லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாறுதல் ஆகிச் சென்றவுடன், இவரது ரகசிய ஆண்டறிக்கையில் 35 குற்றச் சாட்டுகள் இவரது மேலதிகாரிகளால் எழுப்பப் பட்டன. அத்தனை குற்றச் சாட்டுகளையும், தனது அரசியல் செல்வாக்கால் ரத்து செய்தார் கிருஷ்ணமூர்த்தி.




இதற்கு பிறகு, பதவி உயர்வில் டிஐஜியாக திண்டுக்கல் சரகத்தில் பணியாற்றிய காலத்தில்தான், திமுக முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமானார் கிருஷ்ணமூர்த்தி. பிறகு, ஐஜியாக பதவி உயர்வு பெற்று, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப் பட்டார்.


தென் மண்டல ஐஜியாக ஆனதும், மதுரை அதிகார வட்டத்திற்கு மிக நெருக்கமானார். அழகிரியின் அல்லக்கைகளுக்கு ஐஜி அலுவலகம் சத்திரம் போல் ஆனது. என்ன பிரச்சினை என்றாலும், “அண்ணன்“ பெயரைச் சொல்லி ஐஜியிடம் காரியம் சாதித்துக் கொள்ளத் துவங்கினார்கள் அழகிரியின் அல்லக்கைகள். பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்றவர்கள் எல்லாம் கிருஷ்ணமூர்த்திக்கு மிக நெருக்கமாக ஆனார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனவரி 2009ல் வந்தது திருமங்கலம் இடைத் தேர்தல். இத்தேர்தலில், தமிழகம் இது வரை சந்திக்காத அளவுக்கு பணப் பட்டுவாடா நடந்ததை தமிழகமே அதிசயித்துப் பார்த்தது. இந்தப் பணப் பட்டுவாடாவை முன்னின்று நடத்தத் தொடங்கினார் கிருஷ்ணமூர்த்தி. தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, நேரடியாக ஆய்வு செய்து, உடனடியாக கிருஷ்ணமூர்த்தியை மாறுதல் செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் தென் மண்டல ஐஜி பொறுப்பிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மாற்றப் பட்டார்.


தேர்தல் முடிந்ததும், “அண்ணனின்“ ஆணைப்படி, மீண்டும் தென் மண்டல ஐஜியாக பதவியேற்றார் கிருஷ்ணமூர்த்தி.


திருச்செந்தூர் இடைத் தேர்தல் வந்ததும், மீண்டும் தனது கரைவேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கினார் கிருஷ்ணமூர்த்தி. ஆளும் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று புகார் எழுந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் செங்கோட்டையன், ராஜ.கண்ணப்பன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த ஓட்டலில் சோதனை நடத்தினார் கிருஷ்ணமூர்த்தி.

இந்தச் சோதனைக்கு, மேலதிகாரிகளிடமோ, தேர்தல் பார்வையாளரிடமோ, மாவட்ட தேர்தல் அதிகாரியிடமோ எவ்வித முன் அனுமதியோ, தகவலே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், மதுரையில் தனது அலுவலகம் உள்ள நிலையில், திருச்செந்தூர் சென்று, தானே முன் நின்று இந்த சோதனையை கிருஷ்ணமூர்த்தி நடத்தியுள்ளார்.

இந்த சோதனை, “அண்ணனின்“ மனதை குளிர்விப்பதற்காகத் தான் என்று தகவல் வந்துள்ளது.


செங்கோட்டையன் உள்ளிட்டோர் அளித்த புகார்களை அடுத்து, தேர்தல் ஆணையம், கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக அருகாமையிலுள்ள ஐஜியிடம் பணியை ஒப்படைத்து விட்டு, பணியிலிருந்து விடுவித்துக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தது.



இடைத் தேர்தல் முடிந்ததும், மீண்டும் கிருஷ்ணமூர்த்தி, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப் படுவார் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

தேர்தல் ஆணையம், மாறுதல் உத்தரவோடு நின்று விடாமல், அனுமதி பெறாமல் சோதனை நடத்தியதற்காக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், எத்தனை ஒழுங்கு நடவடிக்கைகள் வந்தால் என்ன ? “அண்ணன் காட்டிய வழியம்மாஆஆஆஆ“ என்று நடப்பவருக்கு ஒழுங்காவது நடவடிக்கையாவது

இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையாகவும், பற்றுடனும், மனசாட்சியுடனும், நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுத்து விட்டு, அதிகார மையத்திடம் உண்மையாகவும், விசுவாசமாகவும், உளச்சான்றின்படியும் நடந்து கொள்ளும் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் வரை, அரசியல் அமைப்புச் சட்டம், புழுதியில் எறியப் பட்ட “நல்லதோர் வீணைதான். “



சவுக்கு

No comments:

Post a Comment