Friday, November 27, 2009

மாவீரர் நாளில் சபதம் ஏற்போம் !மாவீரர் நாள் உரையாற்ற பிரபாகரன் வருவாரா, வரமாட்டாரா என்பது பற்றியெல்லாம் பல பதிவுகள் உலா வரும் நிலையில், “சவுக்கு“ அதற்குள் செல்ல விரும்பவில்லை.மாறாக, இம்மாவீரர் நாளில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பது பயன் தரும் என்று கருதுகிறேன். இன்று, ஈழப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு பிரதான காரணம் என்னவென்று சிந்தித்தல் சரியாயிருக்கும்.

ராஜபக்ஷேவா ? பொன்சேகாவா ? சோனியாவா ? பிரணாப் முகர்ஜியா ? மன்மோகன் சிங்கா ? என்ற பட்டியல் பெரிதாய் நீளும். ஆனால், இப்பட்டியலில் பிரதானமாக நிற்பது “மஞ்சள் துண்டு மடாதிபதி“ கருணாநிதியே.


ஈழத் தமிழ் மக்கள் அனாதைகளாய் முள்வேளிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள், இவர்களை காப்பாற்ற இன்று புலிகள் இல்லையே என உலகத் தமிழினமே, வேதனையில் இருக்கையில், “மாவீரன் மாத்தையா“ என்று உடன்பிறப்புக்கு கடிதம் எழுதும் கருணாநிதியின் தைரியம், புலிகள் அழிந்து விட்டார்கள் என்பது தானே ?2009 ஏப்ரல் 27ல் ஐந்து மணி நேரம் உண்ணா விரதம் இருந்த கருணாநிதி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு ஆற்றிய உரை இந்நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில், 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் முத்துவேலர் என்ற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்ற அன்னைக்கும் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பினேன்.

அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருள்களைக் களவாடிய போது, அவர்களில் யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால், அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தமிழ் என்ற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்காது.


தமிழை உச்சரிப்பதற்கு, உயர்த்துவதற்கு, உலக மொழிகளில், செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு, நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும். அதனால் தான் ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து 13ம் வயதிலேயே தமிழ் எழுதவும், கட்டுரைகள் தீட்டவும், கதைகள் புனையவும், கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ம் ஆண்டில் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை மற்றும் தமிழ்ப் புலவர் பெருமக்கள், தமிழ் காக்கும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன்.


‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக் காக்கவும், என் தமிழர் எங்கெல்லாம் அல்லல்படுகின்றனரோ அவர்களைக் காக்கவும், பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன், உயிர் இருந்து தான் என்ன பயன்?


‘உடலில் முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்காக இப்படி ஓர் உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும், உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும்’ என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன்பிறப்புகள் முழக்கமிடுகின்றனர்.


ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும்; எனக்கு அவர்கள் வேண்டும். என் தமிழ் வேண்டும். என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. அதனால் தான், இலங்கையிலே மடிந்து கொண்டிருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன்.


நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ என்று தான் உறுதியளித்தனர்.


ஆனால், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல், ‘அறிவாலயம் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, அண்ணாதுரை இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து, உண்ணா நோன்பை துவங்கினேன்.


இதன் விளைவாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது”

2009 ஏப்ரல் 27 அன்று போர் நின்று விட்டதாம். இலங்கை ராணுவம் நிவாரணப் பணிகளின் ஈடுபடுத்தப் படும்மாம். அதற்குப் பிறகு முள்ளிவாய்க்காலில் எத்தனை தமிழ் உயிர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகின என்பது நினை விருக்கிறதா ?

இன்னும் குண்டுகள் வீசப் படுகிறது என்ற செய்தியாளர்கள் கேள்விக்குத் தான், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பதில்.


இப்படி போலியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பதற்காக மட்டும், கருணாநிதி ஈழப் போராட்டத்தின் முதல் எதிரி ஆகிவிடவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழகத்தில் போராட்டம் பெரும் எழுச்சியை பெரும்போதெல்லாம், அவ்வெழுச்சியை, நீர்த்துப் போகச் செய்வதில், மத்திய அரசின் உளவுத் துறையையும் விஞ்சி விட்டார் கருணாநிதி.


தமிழகத்தில் 2008 அக்டோபர் 2ம் தேதி, சிபிஐ கட்சி, சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாவிரதம், ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தின் எழுந்த பெரும் எழுச்சிக்கு முன்னோடியாக அமைந்தது. இந்த உண்ணாவிரதத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல அமைப்புகள், மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், தொடர் முழக்க போராட்டம் என்று ஈழத்தில் போரை நிறுத்து என்று உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கினர்.


அக்டோபர் 2க்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்தவுடன், கருணாநிதிக்கு ஈழத் தமிழர் மேல் “திடீர்“ அக்கறை வந்து அக்டோபர் 14 அன்று ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்தார்.


அந்தக் கூட்டத்தில் இந்திய அரசு தலையிட்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி - பேச்சு வார்த்தை மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயல வேண்டும்,


பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச செஞ் சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலமாக உணவு - மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்திட வேண்டும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.

இது தவிர, மத்திய அரசுக்கு இரண்டு வார காலம் கெடு விதிக்கப் பட்டது. இரண்டு வாரத்திற்குள், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டார் கருணாநிதி.

அக்டோபர் 23 அன்று மனிதச் சங்கிலி நடத்தப் பட்டது. கொட்டும் மழையில் நடந்த மனிதச் சங்கிலியில் பல்லாயிரக்கணக்கோனோர் கலந்து கொண்டனர்.

சோனியாவின் தூதராக சென்னை வந்து பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்ததும், இலங்கையில் போர் நிறுத்தப் பட்டது போல, உடனடியாக எம்.பிக்கள் ராஜினாவை கைவிட்டார் கருணாநிதி.

ஆனால், ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது துளியும் நிறுத்தப் படவில்லை. இதனால், நவம்பர் 25 அன்று மீண்டும் ஒரு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார் கருணாநிதி. இந்தக் கூட்டத்தில் ஈழப் பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்த,முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு டிசம்பர் 4-ம் தேதி தில்லி செல்ல உள்ளனர். அதற்கு முன், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிகள் நவம்பர் 28ம் தேதி பிரதமரைச் சந்திக்கச் செல்கின்றனர் என்றும் முடிவெடுக்கப் பட்டது.


இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் டெல்லி சென்று அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்று வெளிஉறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


ஆனால் பிரணாப் இலங்கை போவதாய் இல்லை. அடுத்த கட்டமாக கருணாநிதி சட்டசபையில் “இறுதி வேண்டுகோள்“ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றினார்.
டிசம்பர் 4ம் தேதி பிரணாப் இலங்கை செல்வார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2009 ஜனவரி இறுதியில்தான் பிரணாப் இலங்கை சென்றார்.


ஜனவரி 29 அன்று முத்துக்குமாரின் மரணம், தமிழகத்தை புரட்டிப் போட்டது. தமிழகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டத்தில் குதித்தனர்.


ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிப்ரவரி 4 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் கருணாநிதி முழு அடைப்பு சட்ட விரோதம் என்று அறிவித்தார்.


இந்நிலையில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இப்போராட்டங்களை முடக்கும் வகையில், கருணாநிதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். இதனால் மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டது.


கருணாநிதி, காவல்துறையை வைத்து, தமிழகம் முழுவதும் அடக்குமுறையை ஏவி விட்டார். “மீனுக்கு தலையையும் பாம்புக்கு தலையையும்“ பாட்டும் நயவஞ்சக நாடகத்தில் கருணாநிதிக்கு இணை யார் ? தமிழகத்தில், சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டனர்.


தமிழகத்தில் அனைத்துப் பிரிவினரையும் போராட்டம் நடத்த விடாமல் ஒடுக்கினாலும், கருணாநிதியால் வழக்கறிஞர்களை ஒடுக்க முடியவில்லை.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாக்காளர் அடையாள அட்டை எரிப்பு, சாலை மறியல், ரயில் மறியல், நீதிமன்ற புறக்கணிப்பு, சோனியா-கருணாநிதி படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இத்தனை போராட்டங்களை நடத்திய வழக்கறிஞர்களை மட்டும் ஒடுக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணாநிதி பிப்ரவரி 19 அன்று காவல்துறையை விட்டு கொடூரமாக தாக்கினார்.

அதற்குப் பின், வழக்கறிஞர்களின் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம், தமிழக காவல்துறைக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பியது.

சமுதாயத்தில் அனைத்து பிரிவினரின் போராட்டத்தையும் ஒடுக்கிய கருணாநிதி மகிழ்ச்சியாக காங்கிரஸ் தலைமையை திருப்தி படுத்திய சந்தோஷத்தில் இருந்தார்.
ஒரு வழியாக தேர்தல் முடிந்ததும், ஈழத்தில் போரும் முடிந்தது.


எம்.பி.கள் ராஜினாமா என்று அறிவித்த கருணாநிதி, தனது முடிவில் உறுதியாக இருந்திருப்பாரேயானால், மத்திய அரசு கவிழ்ந்திருக்கும், சிங்களனும், சோனியா இருக்கும் தைரியத்தில் இப்படி கொக்கரித்திருக்க மாட்டான்.

தமிழகத்தில் எழுச்சியோடு நடந்த அத்தனை போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்வதில் கருணாநிதி திட்டமிட்டு பெரும் பங்கு வகித்தார். போராட்டங்கள் தீவிரமடைந்தால், "தியாகத் திருவிளக்கு" சோனியா மனம் வருத்தமடையும், "எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே" என்று சோனியாவிடம் சொன்னால், அதற்குப் பொருள், ஈழத் தமிழர்கள் அழிந்தாலும் எனது ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் என்பதை புரிந்து, எப்பாடு பட்டாவது எனது ஆட்சியைக் காப்பாற்றி, எனது குடும்பத்தையும், பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கும் ஆபத்து வராமல் காப்பாற்றுவார், அதற்காக, ஈழத் தமிழர்களின் உயிரை, கொத்துக் குண்டுகளுக்கு இரையாக்கினால் பரவாயில்லை என்று திட்டமிட்டே செயல்பட்டார் கருணாநிதி.


இப்போது கூறுங்கள், ஈழத் தமிழரின் முழுமுதல் எதிரி யார் ?

திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.


பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதைப் பனையளவாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர் என்கிறான் வள்ளுவன்.

கருணாநிதி பழி நாணுபவரா என்ன ?

பாரதியின் இந்தப் பாடல், கருணாநிதிக்காகவே எழுதப் பட்டது போலில்லை ?


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.


மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!


தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!


அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!


ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?


மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?


நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!


சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!


பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!


ஆகையால் இந்த மாவீரர் நாளில், கருணாநிதியின் கோரப் பிடியிலிருந்து, தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று சபதம் ஏற்போம். இதுவே நாம் அந்த மாவீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலி.

சவுக்கு

No comments:

Post a Comment