Wednesday, November 25, 2009

பாகம் 2. கிழியும் எம்.கே.நாராயணின் முகத்திரை

ஜனவரி 2005ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றதிலிருந்தே, இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான “ரா” RAW (Research and Analysis Wing) தன்னுடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார் எம்.கே.நாராயணன்.

“ரா“ விலேயே பணியாற்றிய அதிகாரிகளை தலைமை பதவிக்கு தேர்ந்தேடுக்காமல், வெளி ஆட்களை தேர்தெடுத்து நியமித்ததால், ரா அமைப்பு, மிக மோசமான சூழ்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.


இதில் முதல் அம்சம், ரா வில் இணைச் செயலர் அந்தஸ்தில் பதவி வகித்த ரபீந்தர் சிங் என்பவர், அந்நிய நாட்டு உளவாளியாக மாறியது பற்றியது. இந்த ரபீந்தர் சிங் இந்திய ரகசியங்களை, அமெரிக்காவிற்கு விற்றதாக குற்றம் சுமத்தப் பட்டது.

இந்த ரபீந்தர் சிங், தான் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்ததும், நேபாள் வழியாக அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். இந்த ரபீந்தர் விஷயம் வெளி வந்ததும், எம்.கே.நாராயணன், அப்போது “ரா“ வின் தலைவராக இருந்த எம்.கே.சகாய் என்பவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால், அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜே.என்.தீட்சித், ராஜீவ் படுகொலையின் போது “ஐபி“ யின் தலைவராக நீங்கள்தான் இருந்தீர்கள், ஆனால், ராஜீவ் மரணத்திற்குப் பின் நீங்கள் பதவி நீக்கம் செய்யப் படவில்லை அதனால் சகாய் பதவி நீக்கம் செய்யப் படவேண்டியதில்லை என்று கூறினார்.ஆனால் நாராயணன், கேரளாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஹோர்மீஸ் தராக்கன் என்பவரை, சகாய் இருக்கும் பொழுதே ரா வில் நியமித்து, தொடர்ந்து சகாயின் அதிகாரத்தை குறைத்து, சகாய் ஓய்வு பெற்றவுடன் தராக்கன் வசம் பொறுப்பு வரும் வகையில் நியமனம் செய்தார்.

தராக்கனுடன பணியாற்றியவர்கள், தராக்கன் சீனா பற்றியோ, பாகிஸ்தான் பற்றியோ பெரும் அறிவு இல்லாதவர் என்றும், தராக்கன் பெரும்பாலும் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு “ஆமாம் சாமி“ போட்டு காலத்தை தள்ளுபவர் என்று கூறுகிறார்கள்.

நாராயணன் முயற்சியால், ரபீந்தர் சிங், தடம் மாறிய விவகாரத்தில் தராக்கன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்டார். இன்னும் மோசமாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நல்ல பதவிகள் கிடைத்ததுதான் விசித்திரம்.


ரபீந்தர் சிங், அமெரிக்காவிற்கு தப்பிச் செல்லும் முன் அவரை கடைசியாக பார்த்த அதிகாரி சஷி பூஷன் தோமர். 19 ஏப்ரல் 2004 அன்று ரபீந்தரின் கார் சோதனையிடப்பட்ட அன்று தோமர் ரபீந்தருக்கு தகவல் சொல்லி ரபீந்தர் தப்பிச் செல்ல உதவி இருக்கக் கூடும் என்று கூறுகின்றனர். இப்படி சந்தேக வலையில் உள்ள தோமர் இப்போது எங்கே பணியாற்றுகிறார் தெரியுமா ? நியூயார்க்கில் பணிபுரிகிறார்.

அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றதாக சந்தேகத்தில் உள்ள ரபீந்தரும், தோமரும் சந்தித்து உரையாடி வரக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒருவர் மனவியாதியால் பாதிக்கப் பட்டவர், அவர் பேசுவது சுத்தமாக புரியாது எனும் ஒரு நபரை “ரா“ பிரிவு தலைவராக நியமிப்பீர்களா ? ஆனால் எம்.கே.நாராயணன் நியமித்தார். அஷோக் சதுர்வேதி என்ற அது போன்ற ஒரு நபரை, எம்.கே.நாராயணன், “ரா“ வின் தலைவராக 2005ம் ஆண்டு நியமித்தார்.


இந்த சதுர்வேதி அமைச்சரவைச் செயலர் பி.கே.சதுர்வேதியின் உறவினர் என்றும் கூறப் படுகிறது. வாயில் பான் மென்றுக் கொண்டிருந்தாலும் இல்லையென்றாலும், சதுர்வேதி பேசுவது பலருக்கும் புரியாது என்று கூறப் படுகிறது. தூதரகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழங்கப் படும் சிறப்பு பாஸ்போர்ட் (Diplomatic Passport) சதுர்வேதியின் மனைவிக்கும் வழங்கப்பட்டது.

இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, சதுர்வேதியின் மனைவி, உலகெங்கும் சுற்றுலா சென்றதாக கூறப் படுகிறது. இவை அத்தனையும், எம்.கே.நாராயணன் பின்புலத்தில் இருக்கும் துணிச்சல் மட்டுமே.


“ரா“ பிரிவு அதிகாரிகள், சீனா மற்றும் பாகிஸ்தானை மையமாக கொண்டு எடுக்க உத்தேசித்த அனைத்து திட்டங்களும், எம்.கே.நாராயணனால் தடுக்கப் பட்டு வந்தன என்றும் “ரா“ வில் பணியாற்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். சதுர்வேதி போன்ற திறமையற்ற அதிகாரிகள் எம்.கே.நாராயணனால், முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வரப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.ப.சிதம்பரம்
உளவுத் துறை வட்டாரங்களில் இருப்பவர்கள் தற்போது அதிகமாக பேசுவது, எம்.கே.நாராயணன், சிதம்பரத்தின் வளர்ச்சி பற்றி புலம்புவதாகத் தான். இதற்கு முன்னால் உளவுத் துறையில் இருந்த சிவராஜ் பாட்டீல் உளவுத் துறை கூட்டங்களில், சாய்பாபாவின் புகழை பாடிக் கொண்டிருப்பார் என்றும், தற்போது சிதம்பரம் பணியை சிரத்தையாகச் செய்வதாகவும் கூறப்படுகிறது.


மேலும், துணை அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் எம்.கே.நாராயணன், உள்துறை கூட்டங்களுக்கு முன் கூட்டியே வந்தால், காக்க வைக்கப் படுவதாகவும், இதனால் அவமானப்படுத்தப் பட்டதாக உணர்ந்து, “சிதம்பரம் அரசியலுக்கு வருகையில், அவர் பெயரை நான்தான் க்ளியர் செய்தேன்“ என்றும் எம்.கே.நாராயணன் புலம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வி.பி.சிங் பிரதமர் பொறுப்பேற்றதும், நாராயணனின் அதிகாரங்கள் பறிக்கப் பட்டு சற்றும் அதிகாரம் இல்லாத “கூட்டு உளவுக் குழு“ விற்கு நியமிக்கப் பட்டார் நாராயணன். வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்து சந்திரசேகர் பிரதமர் ஆனதும் ராஜீவ் காந்தி நெருக்கடியினால் மீண்டும் முக்கிய பொறுப்புக்கு வந்தார் நாராயணன்.


எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தொடர்ந்து நீடித்தால் “ரா“ என்ற உளவுப் பிரிவு கூடிய சீக்கிரத்தில் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் உளவுத் துறை வட்டாரங்கள் கூறுவதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளேடு தெரிவிக்கிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு


சவுக்கு


No comments:

Post a Comment