Friday, October 23, 2009

ராசா ராசாஆஆஆ மானங்கெட்ட ராசாஆஆஆஆ





மீண்டும், ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம், ராசாவையும், திமுகவையும், பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது.



மத்திய புலனாய்வு நிறுவனம், சி.பி.ஐ, தொலைத்தொடர்பு அலுவலகத்தையும், இது தொடர்பாக மேலும் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தியிருக்கிறது. இச் சோதனைகள், ஆ.ராசா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சராக இருக்கையிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ ஆல் நடத்தப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.




ராசா சமுதாயத்தின் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கைகளாலும், டெல்லி வட்டாரங்களாலும் அவர் குறி வைத்து தாக்கப் படுகிறார் என்று கருணாநிதி தன் “நா”நயத்தால் உரைக்கக் கூடும்.



ஸ்பெக்ட்ரம் இந்தியா சந்தித்த மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தோராயமான கணக்கின்படி கூட, 60,000 கோடிக்கு குறையாமல், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.



இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்னதான் நடந்தது ? ஜனவரி 2008ல் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்சுகள் வழங்கப் பட்டன. ஒரு லைசென்சின் விலை 1651 கோடி. இதில் என்ன தவறு ?



இந்தத் தொகை எப்படி நிர்ணயிக்கப் பட்டது தெரியுமா ? ஜனவரி 2001ல் ஏலம் விடப்படுகையில் என்ன தொகைக்கு போனதோ, அதே தொகைக்கு 7 ஆண்டுகள் கழித்து நிர்ணயிக்கப் பட்டது. 2001ல் இருந்ததை விட 2008ல் ஆறு மடங்கு விலை கூடியிருந்தும், பழைய விலைக்கே ராசா ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வழங்கியுள்ளார்.

ஆறு மடங்கு விலை உயர்ந்து விட்டது என்று எப்படி கூறுகிறார்கள் ? எப்படியென்றால் ராசாவின் தாராள குணத்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய இரு நிறுவனங்களும், தாங்கள் பெற்ற ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒரு சில மாதங்களிலேயே ஆறு மடங்கு லாபம் வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன.



இதில் அடுத்த முறைகேடு என்னவென்றால், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப் பட்டது திறந்த ஏலம் அடிப்படையில் நடக்கவில்லை. “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற முறையில் நடந்தது. இந்த முறையிலும் கூட, ராசா விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றினார் என்றும் குற்றச் சாட்டு உள்ளது.



இந்த ஊழல் முதலில் வெளிவருகையில், கருணாநிதி குடும்பம் பிளவு பட்டிருந்தது. இதனால், தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறன் சன் டிவி மூலம், இந்த ஊழலை மிகப் பெரிதாக பிரச்சாரம் செய்தார். உடனே, ராசா, எனக்கு முன் இருந்த மந்திரி (தயாநிதி மாறன்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். உடனே, சன் டிவி, மாறன் இந்த கொள்கை முடிவை எடுக்கவேயில்லை, அவர் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு விடப்படவேயில்லை என்று மறுப்பு கூறியது.



உடனே ராசா, தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். ஆனால் ட்ராய், உடனடியாக மறுப்பு தெரிவித்தது.



டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் ஒன்று கூடியதும், கருணாநிதிக்கு “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது”. சன் டிவிக்கும், கருணாநிதிக்கும், ஸ்பெக்ட்ரம் ”ஊழல் முடிந்தது”.



பொதுத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முன்பை விட, அதிக இடங்கள் கிடைத்ததும், திமுகவின், பலம் சோனியா காந்தியிடம் குறைந்தது. 2004ல், தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட சோனியா, 2009ல் தன்னை தள்ளு வண்டியில் வந்து பார்க்க வைத்தார். கேட்ட இலாக்காக்கள் ஒதுக்கப் படாததால், கோபித்துக் கொண்டு, கருணாநிதி, தள்ளுவண்டியிலேயே திரும்பி வந்தார்.

ஆனால், தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கால், ராசாவுக்கு, மீண்டும் தொலைத் தொடர்புத் துறையை பெற்றுத் தந்தார்.



ஆனால், இம்முறை மீண்டும், தொலைத்தொடர்புத் துறையை பெற்ற ராசா, ‘பல் பிடுங்கிய பாம்பாக’ ஆக்கப் பட்டார். எந்த விஷயத்திலும், தனித்து முடிவெடுக்க முடியாமல், கண்காணிக்கப் பட்டார். இதெல்லாம், கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், ஒன்றும் செய்ய முடியாமல், பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்.



ராசா மீது, இந்தக் குற்றச் சாட்டு மட்டுமல்ல. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது 2ஜி மற்றும் 3ஜி வழங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனத்திலிருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டினை ‘தி பயனீர்‘ நாளிதழ் சுமத்தியிருக்கிறது. இந்த தடவை, BSNL நிறுவனம் வைமாக்ஸ் சர்வீஸ் (WiMax services) தொடர்பாக, அமைச்சரின் தொகுதியான பெரம்பலுரைச் சேர்ந்த அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய நண்பருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அது குற்றம் சாட்டியிருக்கிறது.



இந்தியாவில் BSNL நிறுவனத்தின் கீழ் 16 சர்க்கிள்கள் இருக்கின்றன. இவற்றில் வருவாய் அதிகம் வரக்கூடிய ஏழு சர்க்கிள்களுக்கு வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Wellcom Communication India Private Ltd) என்னும் நிறுவனம் உரிமங்கள் கோரி விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிறுவனம் உரிமங்களைப் பெற்றபின், முன் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்றது போல், தற்போது விற்றிடலாம் என்று நிறுவனத்தின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



BSNL நிறுவனமே நேரடியாக வைமாக்ஸ்சை அளித்திடக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றிருக்கூடிய சூழ்நிலையில் இதனை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கோருகின்றனர். வைமாக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக வருங்காலத்தில் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களுக்குக்கான ஒயர்லஸ் இண்டர்நெட் வசதி, வாயிஸ் மெயில் வசதிகளைப் பெற்றிடமுடியும். முதலாம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் வைமேக்ஸ் இணைப்புகளுக்கான சந்தாதாரர்கள் கிடைத்து விடுவார்கள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களாக உயர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.



2008 நவம்பரில் வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் உரிமங்களுக்கு விண்ணப்பித்தது. சென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறிய அளவிலான இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்த நிறுவனம் 2006 டிசம்பரில் வெறும் 10 லட்சம் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இது 2008 நவம்பரில் 10 கோடி ரூபாயாக உயந்துவிட்டது. வைமாக்ஸ்க்கான போட்டியில் ஈடுகொட்டுப்பத்தற்காகவே இவ்வாறு இன்நிருவனம் மூலதனம் உயர்த்தப்பட்டிருக்கிறது.



வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் கம்பெனியில் டி. சில்வா ராஜூ என்பவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. இவருக்கு இக்கம்பெனியில் 15 சதவிதப் பங்குகள் இருக்கின்றன. இக்கம்பெனியின் மற்ற இரு இயக்குநர்கள் டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு மற்றும் டி.குணசேகரன் தியாகராஜன் என்பவர்களாவார்கள். இருவரும் மலேசியப் பிரஜா உரிமை கொண்டுள்ள தமிழர்கள். டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு இதே பெயரில் மலேசியாவிலும் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார்.


டி சில்வா ராஜூ அமைச்சர் ராசாவின் பெரம்பலுர் தொகுதியைச் சேர்ந்தவர். அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் டாக்டர் சி. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். அமைச்சர் ராசா, அமைச்சராவதற்கு முன்பு இந்த சி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டத்தில்தான் தன் வழக்கறிஞ்ர் தொழிலை ஆரம்பித்தார். சில்வராஜூ தற்சமயம் மத்திய பொதுப் பணித்துறையின் (CPWD) கீழ் சப்-கான்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு, தற்சமயம் என்எச்45 -சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் நடந்துவரும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒரு குவாரியிலிருந்து ஜல்லி வழங்கிவருகிறார்.



இந்த கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் அண்ணன் மற்றும் அக்கா மகன்கள் மற்றும் மகள்களுடன் இணைந்து கோவை செல்டர்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை நடத்திவறுவதாக ‘தி பயனீர்‘ ஏற்கனவே கூறியிருந்தது. மேலும் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மற்றும் ஈக்வாஸ் எஸ்டேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஆகிய கம்பெனிகளும் ஆ. ராசா அமைச்சரான பின் உருவாயின. இந்த இரு நிறுவனங்களிலும் அமைச்சர் ராஜாவின் மனைவி பரமேசுவரி ஓர் இயக்குநராக உள்ளார் என்பது கொசுறு செய்தி.


BSNL இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே உரிமதாரர்களைக் கோரியிருந்த போதிலும், அதன்மீது இறுதிப்படுத்தும் முறையை, அமைச்சரின் வற்புருத்தலின் காரணமாக BSNL நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தது. அமைச்சர் ராஜாவின் நிர்ப்பந்ததின் காரணமாக நிறுவனத்தின் தலைவரும் மேலான் இயக்குநருமான குல்தீப் கொயல் உரிமங்கள் வழங்கும் பணியினை ஜனவரி மத்தியவாக்கில் தொடங்கினார்.



இந்த ஏலத்தில் 20 கம்பெனிகள் பங்கெடுத்திருந்தன. இவற்றில் பிஎஸ்என்எல், 5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. விசாரணையில், இவற்றில் 5 நிறுவனங்களின் முதலாளியும் ஒரே நபர் என்றும், அரசை ஏமாற்றும் நோக்கத்துடன் இவ்வாறு WiExpert Communications, SV Telecom Systems, Digitelco Communications, Spectrus Communications and Technotial Infoways என்ற ஐந்து கம்பெனிகள் பெயரில் டெண்டரில் பங்கேற்றார் என்ற விபரமும் வெளியானது.

இந்த ஐந்து நிறுவனங்களின் முதலாளி சஞ்சய் கபூர் என்பவராவார். இந்த சஞ்சய் கபூர், ராசாவுடன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இறுதியாக, புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், ராசா அமைச்சரான பிறகு, பிரதமர் மன்மோகன் சிங், WiMaxக்கான இந்த டெண்டரையே ரத்து செய்து, புதிய டெண்டர் வெளியிட ஆணையிட்டார்.

இது போகவும், ராசா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டினார் என்ற குற்றச் சாட்டும் சமீபத்தில் எழுந்து அடங்கியது.

நீதிபதி ரகுபதி

இதில், ராசாவுக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வக்காலத்து வாங்கியதால், ராசா தலை தப்பியது.

இது போல், பல்வேறு ‘சிறப்பு’ களுக்கு சொந்தக் காரரான ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது, ராசாவின் மகுடத்தில் சூட்டப்பட்ட, மேலும் ஒரு மாணிக்கம்.



இவ்வளவு நடந்த பிறகும், ராசாவை காப்பாற்றும் கருணாநிதியைப் பெற இந்நாடு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல், அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை பெற நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.


வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சிபிஐ, தன்னுடைய அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தியும், தனக்கு கீழ் பணியாற்றும், பணியாற்றிய அதிகாரிகள் மேல் வழக்கு பதிவு செய்தும், பதவி விலக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ராசாவை, இன்று முதல் “மானங்கெட்ட ராசா” என்று அழைத்தால் என்ன ?

ஒப்பாரி


2 comments:

  1. மதி கெட்ட மக்களிருக்கும்போது மானங்கெட்ட ராசாகளுக்கு பஞ்சமேது ?

    ReplyDelete
  2. arasiyalla ithellaam sagajamappaa. illayinaa eppati oru vottai 5ooo rooba kotuththu vaangamutiyum..?

    ReplyDelete