Wednesday, October 28, 2009

உடன் பிறப்புக்கு கருணாநிதி உருக்கமான கடிதம்


உடன்பிறப்பே,
நீண்ட நாட்களாக உனக்கு கடிதம் எழுதவில்லை. இத்தமிழ் கூறும் நல்லுலகை நான்தான் பாதுகாக்க வேண்டும் என்று உலகத்தமிழர்கள் தங்களது அவாவை அடக்காது வெளிப்படுத்தியதாலேதான், உனக்கு கடிதம் கூட எழுத நேரமில்லாமல் மக்கள் பணியை கவனித்து வந்தேன்.

நான் உனக்கு கடிதம் எழுதாமல் இருந்த இந்த குறுகிய காலத்திற்குள், வட்டமிடும் கழுகுகளும் வாய்பிளக்கும் ஓநாய்களும், காலைச்சுற்றி வரும் மலைப்பாம்புகளும் புல்லுறுவிகளாய் தமிழர் காதில் நஞ்சைக் கக்கி வருவதை நான் கவனித்துதான் வருகிறேன்.
தமிழே தமிழுக்கு மாநாடு நடத்த வேண்டும் என்று என்னைக் (தமிழ்) கற்ற அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததால்தானே உலகத் தமிழர் மாநாடு நடத்துகிறேன். எனக்கு என்ன அந்த அம்மையாரைப் போல விளம்பரப் பிரியமா ? யாராவது என்னைப் புகழ்ந்து பேசினால் என் காது கூசுகிறதே ! இதற்காகவே, என்னைப் பாராட்டி நடக்கும் விழாக்களில் நான் கலந்து கொள்வதை தவிர்க்க நினைத்தாலும், என்னைப் பாராட்டும் உள்ளங்கள் புண்படக் கூடாதே என்ற தமிழ்ப் பண்பாடுதானே என்னை இவ்விழாக்களில் கலந்து கொள்ள வைக்கிறது ? அதனால்தானே, நடக்க முடியவில்லை என்றாலும் கூட, தள்ளு வண்டியில் வந்து, நெருப்பின் மேல் நிற்பது போல், இப்பாராட்டு விழாக்களில் அமர்ந்து கேட்கிறேன். தற்போது நடந்து முடிந்த தீபாவளி விழாவில் கூட, என்னைப் பற்றி நடந்த பட்டிமன்றத்தை அப்படித்தான் கேட்டு ரசித்தேன். அதை நீ, என் அன்பு மகன் அழகிரி நடத்தும் கலைஞர் டிவியில் பார்த்து ரசித்திருப்பாய் என்பதை நான் அறிவேன். ஆனால் அந்த அம்மையாரும், இப்போது புதிதாக கிளம்பியிருக்கும் ஒரு கூத்தாடியும் நான் ஏதோ புகழ்ச்சிப் பிரியர் என்பது போல உன் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார்கள்.இது போக ஒரு வளைத்தளத்தில் நான் பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று அவதூறை வீசியிருக்கிறார்கள். தமிழுக்காகவே, உடலையும், மூச்சையும், ஆவியையும், அர்பணித்தவனைப் பற்றியா இந்த அவதூறு ? நான் உடல், மூச்சு, ஆவி அனைத்தையும் தமிழக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டு, வெறும் 5000 கோடி சொத்துக்களை மட்டும்தானே சேர்த்து வைத்திருக்கிறேன். இந்த தியாகத்தைப் பொருட்படுத்தாமல் என் மீது எவ்வளவு வசைகள் ? என்னை ஆளாக்கிய அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற வாக்குதான் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறது. இந்த வாக்கை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை என்றால், என்றோ இந்த அவச்சொற்களை கேட்டு என் உயிர் பிரிந்திருக்கும்.

நச்சு நாக்கினர் கூறும் அவதூறு சொற்களையும் வசைகளையும் கேட்டு நான் குமையும் போதெல்லாம் நான் மனச்சோர்வு அடையாமல் என்னைப் பாதுகாப்பதே என் அன்பு மகன் டிவி யில் வரும் “மாநாட மயிலாட” நிகழ்ச்சிதான் என்பதை நீ அறிவாயா உடன் பிறப்பே ? மக்கள் பணியில் ஈடுபட்டு மனச்சோர்வு அடையும் என்னை உற்சாகப் படுத்தி தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட வைக்கும் “மாநாட மயிலாட“ நிகழ்ச்சியின் நடுவர்கள் “நாட்டிய நங்கை“ கலாவும், “தென்னகத்து மர்லின் மன்றோ“ குஷ்பூவும், கொஞ்சு தமிழ் பேசி, தமிழுக்கு சிறப்பு சேர்க்கும், “மழலை மொழியாள்“ நமீதாவும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றும் சேவைக்கு, இப்பூவுலகே கடன் பட்டுள்ளது.அக்கடனுக்கு நன்றி கூறும் வகையில்தான், “மழலை மொழியாள்“ நமீதாவை, உலகத் தமிழ் மாநாட்டில் தலைமை உரை ஆற்ற அழைக்கத் திட்டமிட்டுள்ளேன். ஆனால், சீரிய செயல்கள் எதுவாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதை பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டு விடாமல், விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிற சிறுநரிக் கும்பலொன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும், இந்த செயலுக்கும் தடை கோரும் என்பதில் உனக்கு ஐயமேதும் உண்டோ ?
இத்துனை சிரமங்களுக்கு இடையில், இத்தமிழ் மொழியை வாழவைக்க நான் நடத்தும் இத் தமிழ் மாநாட்டுக்குத் தான் எத்தனை தடைகள், விமர்சனங்கள் ?

எத்தனை முறை, எத்தனைக் கூட்டங்களில் “இந்து“ நாளேடே பாராட்டியுள்ளது, “தினமணி“ நாளேடே பாராட்டியுள்ளது என்று புகழ்ந்து பேசினாலும், அரசு விளம்பரங்களை வாரி வழங்கினாலும், என்னை எதிர்த்து செய்தி வெளியிடும் நேரங்களில் மட்டும் பார்ப்பன ஏடாக மாறும் போக்கை இன்னும் இந்த ஏடுகள் மாற்றிக் கொள்ளாமல்தான், இத் தமிழ் மாநாடு வெற்றி பெறாது என்று விஷத்தைக் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
நான் என்னவோ ஈழத் தமிழர் விஷயத்தில் கோழையாக என் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்

லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது போலவும்,

மத்திய அரசுக்கு தந்தி அடித்தும்,

கடிதம் எழுதியும்,

எம்.பிக்கள் ராஜினாமா என்று நாடகம் நடத்தியும்,

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி என்று நடித்தும்,

4 மணி நேரம் உண்ணா விரதம் இருந்தும்,

பிரபாகரன் என் நண்பன் என்று சொல்லிவிட்டு மறுநாளே பல்டி அடித்தும்,

எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றுங்கள் தாயே என்று சோனியாவின் காலடியில் என் மானத்தை அடமானம் வைத்தும்,

எத்தனை தமிழர்கள் இறந்தாலும், என் மகனுக்கு மந்திரி பதவிதான் முக்கியம் என்று நடித்தது போலவும்,

இதைக் கண்டு கொதித்த உலகத் தமிழர்கள் காரித் துப்பி என்னை தமிழினத் துரோகி என்று சொன்னதால்

இதையெல்லாம் துடைத்தெரிய “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு“ நடத்துவது போலவும், திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது, ஆனால் உண்மை என்ன என்பதை நீ அறியாமலா போவாய் ?

இந்த விளக்கத்தை படிக்கும் விஷமிகள், வேண்டுமென்றே, அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா, இனியேனும் திருந்தப் போகிறார்களா, அல்லது, அடடா, பொய் கூறி அவமான பட்டு விட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா ? என்பதை, தமிழன்னையின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.


அன்புடன்
மு.க


6 comments:

 1. தங்கள் எழுத்து நடை மிக அருமை. Keep it up.

  ReplyDelete
 2. நமக்கு அடுத்தவர்களை குறை சொல்லித்தான் பழக்கம். நாம் அப்படியே வாழ்ந்து பழகிட்டோம். மீதி காலத்தையும் குறை சொல்லி ஓட்டிவிடுவோம். அடுத்தவர்களை குறை சொல்லி நாம் தப்பித்து கொள்ளலாம் உறவுகளே. ஒன்றும் கவலை படவேண்டாம்.

  ReplyDelete
 3. ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .


  http://no-bribe.blogspot.com

  ReplyDelete
 4. நான் இத்தாலி துணிகளை சலவை செய்யும் பாங்கு அளவிடற்கரியது:
  மனிமொழி பேசும் கனிமொழி நங்கையை அமைச்சர் ஆக்க நான் எடுக்கும் முயற்ச்சிக்கு....
  மானம் போனால் என்ன?மயிர் போனால் என்ன, பதவிதானே எனக்கு முக்கியம்?

  ReplyDelete
 5. Excellent article

  ReplyDelete