Saturday, October 31, 2009

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்





தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. தலைமைச் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன், ஸ்ரீபதி விழிப்புப் பணி ஆணையராக (Vigilance Commissioner) பதவி வகித்தார். அப்பதவியில் இருக்கையில், ஊழல் புகாரில் சிக்கிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணையை தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர், ஊழல் வழக்கில் சிக்கிய செல்வி.ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை, விசாரணை ஏதுமின்றி முடித்து விட்டு அதற்குப் பலனாக அண்ணா பல்கலைகழகத்தில், மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற தங்களது மகன் மற்றும் மகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர், இவர்கள் இருவர் மீதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பேராசிரியர்.பிரபா.கல்விமணி என்பவர், தலைமைச் செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் மனு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப் பட்டது.



இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் அப்போது விழிப்புப் பணி ஆணையராக இருந்த ஸ்ரீபதி உபாத்யாயிடம் தொலைபேசியில் “சிங் மற்றும் ராதாகிருஷ்ணன் மீது ஏதோ விசாரணை செய்கிறீர்களா ? உங்கள் துறையிலிருந்து முத்து என்ற ஆய்வாளர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏதோ கடிதம் வேறு கொடுத்திருக்கிறாராம். அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை செய்வது சரியில்லை. என்ன ? அது என்ன என்று விசாரியுங்கள். நாம் முதலில் இதைப் பற்றி விவாதிப்போம். பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்வோம். என்ன ? “ என்று பேசியதாக, “இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு“ செய்தி வெளியிட்டுள்ளது.



இவ்வாறு பேசியதற்காக, இவர் மீது துறை நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஏராளமானோர் இருக்க, இப்படிப்பட்ட ஒரு ஆளை தலைமைச் செயலாளராக நியமித்து வைத்திருக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்ல ?
ஒப்பாரி



No comments:

Post a Comment