Saturday, June 27, 2009

புதிய வடிவில் நெருக்கடி நிலை

. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்

சமீபத்தில், மனித உரிமைக் குழு ஒன்று ஈமெயில் ஒன்றை சுற்றுக்கு அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த பின்னால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லா குழுக்களும் அழிக்கப் படுவதே நோக்கம் என்று அறிவிக்கப் பட்டு விட்டது. உள்துறை அமைச்சர் முதல் 100 நாட்களுக்குள்ளே இந்த தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கான ஒரு திட்டம் தயாராகி விடும் என்று அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் இலங்கை மாடலை கடைபிடித்து மாவோயிஸ்ட் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களை அழிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தாக்குதலுக்கு உள்ளான வனவாசி சேத்னா ஆசிரமத்தை பார்வையிட வந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியல்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவிடம்தான் வெளியிடப்பட்டது.
இலங்கை மாடல் என்றவுடனே 1975ம் ஆண்டு ஜுன் 25-26 நள்ளிரவு அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்த “இந்திய அரசியலமைப்பு பிரிவு 352 (1)ல் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தியாவின் பாதுகாப்பு உள்நாட்டு குழப்பங்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான சூழலில், நெருக்கடி நிலையை அறிவிக்கிறேன்” என்று வெளியிட்ட அந்த அறிவிப்புதான் நிலைவுக்கு வருகிறது.
20 மாதகாலம் அமலில் இருந்த நெருக்கடி நிலை, போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் நெறிக்கப் பட்டது. பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அடங்கிப் போனார்கள்.
அரசு நிர்வாகம், வளையச் சொன்னால், தவழ்ந்து போனது. நீதித்துறையும் அடங்கிப் போய், நெருக்கடி நிலையில், குடிமக்களுக்கு “வாழும் உரிமை“ கூட இல்லை என்று தீர்ப்பளித்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், அதிகாரத்தின் அடிவருடிகளாய் மாறிப்போனது.
குடியரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும், அரசு நிர்வாகம் மற்றும் அதன் உறுப்புகள் எவ்வாறு கடுந்தாக்குதலுக்கு உள்ளாகின என்பது, நெருக்கடி நிலையின் நிகழ்வுகளை தொகுக்குத்துப் பார்க்கும் போது தெரிகிறது.
சில ஆயிரம் நபர்களுக்கு கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, கைது, சித்திரவதை என்பதையும் தாண்டி நெருக்கடி நிலை, மிகவும் மோசமானது. அது சுதந்திரம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மறுத்து. உரிமைகள் வழங்க ஒரு புதிய நியதியையும், ஒரு புதிய அதிகார மையத்தையும் உருவாக்கியது. அதிகாரத்தை செலுத்துவதற்கான தடையை நீக்கி, எல்லையில்லா அதிகாரத்தை வழங்கி, அதிகார துஷ்பிரயோகத்துக்கும், மக்களை மாக்களாக நடத்துவதற்கும் நெருக்கடி நிலை பயன்பட்டது.
மொத்தத்தில், நேர்த்தியாக வடித்தெடுக்கப் பட்டு கவனமாக வளர்த்தெடுக்கப் பட்ட, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை நெருக்கடி நிலை, அழித்து விட்டது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் குடியாட்சி சமூகத்தின் மீது ஒருங்கிணைந்த அதிகாரத்தை செலுத்தியதன் மூலமாக, நிர்வாகமே சீர்குலைந்தது.
கொடுமை என்னவென்றால், ஏறக்குறைய முப்பதாண்டுகள் கழிந்த பின்னும், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட, அழிவுகள் சரி செய்யப்படவில்லை. மாறாக, ஒருங்கிணைந்த எதெச்சதிகாரம் இன்னும் தொடர்கிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த கொடுமைகள் இன்றும் தொடரும் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறலுக்கான அளவுகோலாக மாறி விட்டது.
இதைவிட கொடுமையான விஷயங்களும் நடக்கின்றன. அரசியல் தலைவர்களின் கொடும்பாவியை எரித்ததற்காக இளைஞர்கள் மீதும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்கள் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஒரு வருடம் தொடர்ச்சியாக, விசாரணையின்றி சிறையில் வைக்க வழிவகை செய்வதுதான் “தேசிய பாதுகாப்புச் சட்டம்“‘. சிறிது காலம் முன்பு வரை பிரதமர் கனவில் இருந்த மாயாவதி, தனது மாநிலத்தில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளார். இதே மாநிலத்தில், ஒரு எட்டு வயது சிறுவன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளான்.
துணை ராணுவமும், கமாண்டோ வீரர்களும் எப்படி லால்கரை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கதையில் இன்று தேசம் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், சிபிஎம் ஆளும் இம்மாநிலத்தில், இந்தக் கதையின் பின்னால் உள்ள உண்மைக் கதை சொல்லப் படுவதில்லை. தான்தான் சிறந்த கட்சி என்று எப்போதும் மார்தட்டிக் கொள்வதற்கு 32 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளதை சிபிஎம் பயன் படுத்திக் கொண்டு வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக, ஒரு எதெச்செதிகார மையம் உருவாகி விட்டது. பஞ்சாயத்து, எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும், சிபிஎம் கட்சியினர் அனைத்தும், ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஊழலை எதிர்த்தோ, நிர்வாகக் குறைகளைப் பற்றியோ மேல் முறையீடு செய்வதள்கு எந்த வழியும் இல்லை. அடிப்படை நிர்வாகமே முடங்கிப் போய், அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு மோசமான சூழ்நிலை இது.
தேசிய அளவிலும், நிர்வாகம் பாரபட்சமாகவும், தான்தோன்றித் தனமாகவும்தான் இருக்கிறது. நெருக்கடி நிலையின் போது இருந்த அதே துதிபாடல்களும், வழிபடல்களும் இன்னும் காங்கிரசில் தொடர்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்திரா காந்தி, இன்று சோனியா காந்தி. தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகள், செல்வந்தர்கள் மற்றும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப் பட்டு, ஏழைகளுக்கு வறுமையை ஒழிப்போம் போன்ற வெற்று கோஷங்கள் மட்டும் வழங்கப் படுகிறது. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டு, பணக்காரர்கள் விருந்து வைத்து கொண்டாடுகையில், அதில் விழும் எச்சில் இலைகளை வைத்து உயிர் வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுதான், நெருக்கடி நிலையின் தாக்கம். இதுதான், இந்திய அரசு நிர்வாகத்தின் இன்றைய சோக நிலை.
மோசமான நிர்வாகத்திற்கும், அநீதிகளுக்கும், தியான்மென் சதுக்கம் மற்றும் இலங்கையில் நடந்தது போன்ற கடும் ஒடுக்குமுறைகள் பதிலாக அளிக்கப் படுகின்றன.
“வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறுபவர்கள், மீண்டும் அத்தவறைச் செய்வார்கள்” என்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறினார். நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், இந்திய பாடப்புத்தகங்களிலும், பத்திரிக்கைகளிலும், அரசு ஆவணங்களிலும், ஆய்வறிக்கைகளிலும், வசதியாக மறைக்கப் பட்டுவிட்டதால், மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நோக்கி இந்திய ஆட்சியாளர்கள் வெகு வேகமாக சென்று வருகிறார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து கடுமையாக தாக்குதலுக்குள்ளான இந்தியாவின் நிர்வாகத்தையும், அதன் உறுப்புகளையும் பலப்படுத்த தவறி தவறான பாடங்களையே கற்றுக் கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சி தேசத்தின் ஆபத்திலேயே…

எம்.ஜி.தேவசகாயம்.

நன்றி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2 comments:

  1. தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது ஆட்சியாளர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை ஒடுக்குவதற்கு மட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட மாதிரி தெரிகிறது. இதில் சட்டப்படி என்பது போய் தங்கள் விருப்பப்படி என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

    ReplyDelete
  2. புதிய நெருக்கடி நிலை என்று ஒன்று வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் அரசு பயனகரவாததிர்க்கு சரியான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகவே உள்ளனர்.லால் கர் போன்றவை சாம்பிள்தான்.நெருக்கடி நிலை என்பது முழு இந்தியாவையே லால் கர் ஆக்கி விடும்.அதற்க்கு அரசும் அரசியல்வாதிகளும் தயார் இல்லை என்றே தெரிகிறது.

    ... மாயாவி

    ReplyDelete