Sunday, July 5, 2009

நீதி எனும் மாயை !


நீதிபதி ரகுபதி


திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிருபா ஸ்ரீதர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதில் கண் மருத்துவம் தொடர்பான ஒரு பாடத்தில் இரண்டு முறை பெயிலான கிருபா, மூன்றாவது முறையும் பெயில் மார்க்கையே வாங்கி-யிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மூன்று முறை முயன்றும் பாஸ் ஆகா-விட்டால் எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்தே மொத்தமாக அவரை நீக்க மருத்துவத் துறை-யில் விதி இருக்கிறது

அதனால் உஷாரான கிருபா தரப்பு, பிடிக்க வேண்டிவர்-களைப் பிடித்து பாஸ் மார்க் போட வைத்த-தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் இது சி.பி.ஐ.யின் கவனத்திற்குப் போக, அவர்கள் விசாரணை வளையத்தைச் சுருக்கி டாக்டர் கிருஷ்ண-மூர்த்தி-யையும் அவரது மகன் கிருபாவையும் கைது செய்யும் ஸ்டேஜுக்கு வந்து-விட்டார்கள். இதனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்கள் இருவரும்.

முதல் முறை இவர்களது மனு தள்ளுபடி ஆனது. இரண்டாவது முறை ஜூன் 29 அன்று வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக ஒரு வக்கீலின் மொபைலில் பேசிய மத்திய அமைச்சர் ஒருவர், அன்றைய நிலையில் வழக்கின் தன்மையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படியே இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ரகுபதியிடமும் பேசி, இந்த வழக்கில் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கும்படி மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.

நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கையிலேயே, இவ்வாறு நீதிபதி தனக்கு தொலைபேசியில் முன் ஜாமீன் வழங்குமாறு ப்ரெஷ்ஷர் வந்தது என்று சொல்லியிருப்பது இந்தியாவெங்கும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதித் துறையில் அரசியல் தலையீடு ஒன்றும் புதிதல்ல. நீதிபதியாக இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபையெல்லாம் நீதிபதிகள் காற்றில் பறக்கவிட்டு பல நாட்கள் ஆகின்றன. நீதிபதி ரகுபதி வெளிப்படையாக இவ்விஷயத்தை சொன்னதால் இது பரபரப்பு ஆகியிருக்கிறது. இது போன்ற தலையீட்டை சொல்லாமல் மறைத்த நீதிபதிகள் எத்தனையோ ? அரசியல் தலையீட்டால் வந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த நீதிபதிகள் எத்தனையோ ? அவைகள் என்றும் வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை.

அரசியல் ஆதரவு இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திலோ, அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நீதிபதியாக நியமிக்கப் படுவது கனவிலும் நடக்காது என்று நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை உடைய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெரியும்.


சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்ற 11 நீதிபதிகளில் திரு.எஸ்.கே.கிருஷ்ணன், திரு.சி.டி.செல்வம் மற்றும், திரு.ராஜா சங்கர் ஆகிய நீதியரசர்கள், நியமன ஆணை வந்த மறுநாள், கருணாநிதியை சந்தித்து தங்கள் நன்றி விசுவாசத்தை தெரிவித்தார்கள்.
இவ்வாறு இவர்கள் சந்தித்ததை தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டு பறைசாற்றிக் கொண்டது.


உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப் பட்டவர்கள் இப்படி வெளிப்படையாக கருணாநிதியை சந்தித்து தங்கள் அரசியல் சார்பை வெளிப்படுத்தினால் சாமான்ய மக்கள், இந்த நீதிபதிகள் தங்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எப்படி நம்புவார்கள் ? இந்த நீதிபதிகள் அரசுக்கு எதிரான வழக்கை விசாரிக்கையில், அரசியல் தலையீடு வந்தால் மறுக்கப் போகிறார்களா அல்லது நீதிபதி ரகுபதி போல் இதை வெளியில் சொல்வார்களா ? இந்த ரகுபதி நீதிபதியே, தனக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வரும் வாய்ப்பு இருந்திருந்தால் இதை வெளியே சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே !


திமுக வினர் இதுபோல் நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் தலையிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, வழக்கில் சிக்கிய தன் உறவினரை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாவிடம் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் வெளியே வந்து அதனால் அவர் அமைச்சர் பதவி பறிபோனது. மக்கள் அதை மறந்ததும், மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் நாம் கண்டதே.
தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கையில் டாடா ஸ்கை டிடி.எச் வசதிகள் தொடங்க அனுமதி தராமல் இழுத்தடித்தைதையும், பிறகு மன்மோகன் சிங் தலையிட்டு அனுமதி கொடுத்ததையும் நாம் கண்டோம். இதுபோல், திமுகவினருக்கு இது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், நீதித்துறை தன்னுடைய மாண்பையும் அதிகாரத்தையும் அரசியல்வாதிகள் காலடியில் அடகு வைத்துள்ள நிலைதான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் புகுந்து அங்கிருந்த நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியது கருணாநிதியின் காவல்துறை. அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது இந்த வெட்கங்கெட்ட சென்னை உயர்நீதிமன்றம். இன்று வரை அச்சம்பவம் தொடர்பாக ஒரு காவலர் கூட இடை நீக்கம் செய்யப் படவில்லை என்றால், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் அதிகாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த சம்பவம் நடந்த அன்று இரவே, தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், கமிஷனரையும், டிஜிபியையும், இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால், முன்ஜாமீன் வழங்கச் சொல்லி மிரட்டல் விடும் தைரியம் மத்திய அமைச்சருக்கு வந்திருக்குமா ?
இவ்வளவு நடந்தும் கூட, அந்த மத்திய அமைச்சரின் பெயரை அந்த நீதிபதி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது தான் வெட்கக் கேடு. வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாத நீதிபதி, மிரட்டினார் என்று மட்டும் ஏன் சொல்ல வேண்டும் ?


எதிர்க்கட்சித் தலைவர் செல்வி.ஜெயலலிதா, வெளிப்டையாக, நீதிபதியை மிரட்டியது அமைச்சர் ஆ.ராசா தான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் பினாமி, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் என்று அறிக்கை விட்ட பின்பு கூட, மன்மோகன் சிங் அமைதி காக்கிறார் என்றால், நீதித்துறையை மிரட்டும் ஆ.ராசாவின் செயலுக்கு மன்மோகன் சிங்கும் உடந்தை என்றே பொருள்.

நீதிபதிகளும், வானத்திலிருந்து உதித்த ஒழுக்க சீலர்கள் அல்ல. “வாழும் உரிமை“ கூட ஒரு மனிதனுக்கு இல்லை என்று நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, தீர்ப்பளித்தவர்கள்தானே இந்த நீதிமான்கள் ! இவர்களிடம், நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.


அரசியல்வாதிகளிடம் சலுகைகளை எதிர்ப்பார்த்து, இந்த நீதியரசர்கள் (!!!???) கையேந்தி நிற்கும் வரை, நீதித்துறையில் அரசியல் தலையீடு இருந்தே தீரும்.


அது வரை நீதி என்பது ஒரு மாயைதான் !
/ஒப்பாரி/


2 comments:

  1. தலைமை நீதிபதியே அமைச்சருக்கு தொடர்பில்லை என்று சொல்லி விட்டார். இதற்கு மேல் என்ன சொல்ல/செய்ய.

    ReplyDelete
  2. ரகுபதி இவ்வாறு தன்னிடம் அமைச்சர் பேசவில்லை என்று எழுதிய கடிதம், தன்னிடம் வந்து சேர்வதற்கு முன்பே, தலைமை நீதிபதி இவ்வாறு அவசர அவசரமாக பேட்டியளித்ததற்கு பின்னால் என்ன நடந்தது என்பது அந்த "ராசா" விற்கே வெளிச்சம்.

    ReplyDelete