Wednesday, June 3, 2009

தள்ளாத வயதிலும் தணியாத அதிகார போதை

இன்று கருணாநிதிக்கு 86வது பிறந்த நாள்.

சிறந்த தமிழறிஞர், சிறந்த நிர்வாகி, சிறந்த ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி, சிறந்த எழுத்தாளர், என்றெல்லாம் கருணாநிதியை புகழ வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது. இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் தகுதி இல்லாதவர் அல்ல கருணாநிதி.

ஆனால், இந்த அனைத்துத் தகுதிகளையும் விட, இன்று குடும்பத் தலைவர் என்று மட்டுமே கருணாநிதி வரலாற்றில் குறிப்பிடப் படுவார்.

ஈழத் தமிழர்களின் மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் அவர்கள் முதுகில் குத்தி குடும்ப நலனுக்காக அவர்களை கைகழுவி விட்ட முழுத்துரோகி என்றுதான் இவரை வரலாறு பதிவு செய்யும்.

கடந்த வாரம் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், பல ஆண்டுகள் முன்பே இந்த பொறுப்புக்கு வரும் அளவுக்கு தகுதி உள்ளவர் தான். எமெர்ஜென்சியில் சிறையிலிருந்தவர். கருணாநிதி நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு பெற்றவர். இவ்வளவு ஏன், 57 வயது ஆன பின்பும் கூட, இன்றும் இளைஞர் அணித் தலைவராக இருந்து தன் பொறுப்புகளை செவ்வனே நடத்தி வருபவர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுதும் சரி, சென்னை மாநகர மேயராக இருந்த பொழுதும் சரி, சென்னை நகரம் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொழுதும், உள்ளாட்சி நிர்வாகம் செய்வதிலும், கருணாநிதியை விட அதிகம் நிதானத்தோடு பல சமயங்களில் நடந்து கொண்டுள்ளார்.

இவ்வாறெல்லாம் பல நியாயங்கள் இருந்தாலும், இத்தனை ஆண்டுகள் கழித்து, அதுவும் கடும் நெருக்கடிக்குப் பிறகு கருணாநிதி இந்த முடிவை எடுத்திருப்பது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அதுவும், காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கேட்கும் நிலையில், துணை முதல்வர் பதவியை அவர்கள் கோரக்கூடும் என்றும், ஸ்டாலின் கடும் அதிருப்தியில், கருணாநிதியிடம் கோபப்பட்டதாகவும், மூத்த மகன் அழகிரி கேபினெட் அமைச்சராக ஆன பின்னர், ஸ்டாலினுக்கு அதிகாரம் உயர்த்தி அளிக்கப் படாவிட்டால், குடும்பத்தினுள்ளே அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது என்பதால், அதற்குப் பிறகே கருணாநிதி அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முடிவுக்கு வந்ததாகவும் பத்திரிக்கையில் வரும் செய்திகள், கருணாநிதி மனமார இந்த முடிவுகளை எடுக்கவில்லை, ஏதோ நெருக்கடியிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்று வந்த பொழுது கருணாநிதி விட்ட அறிக்கைகளையும், திருச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதையும் நினைவுபடுத்திப் பாருங்கள்.
"நான் பிழைப்பேனா என்பதே எனக்குத் தெரியாது,

மறு பிறவி எடுத்து வந்திருக்கிறேன் ;

நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை

தயவு செய்து வாக்களியுங்கள்,

உயிருக்கே ஆபத்து என்ற இரு கண்டங்களில் இருந்து
எழுந்து வந்திருக்கிறேன்.

இப்படிக் கழிவிரக்கம் கொண்டு, தள்ளாத வயதில், மூட்டை போல சுமந்து செல்லப் படுகிறார் என்ற எதிர்க்கட்சியினரின் வசைகளையும் பொறுத்துக் கொண்டு, கருணாநிதியை பிடிவாதமாக அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ளச் சொல்லி யாராவது வற்புறுத்துகிறார்களா என்ன ?

ஸ்டாலின் துணை முதல்வராக ஆன பின்னும், கருணாநிதி தன் கையில் வைத்திருக்கும் இலாக்காக்களைப் பாருங்கள்

1) ஐஏஎஸ்
2) ஐபிஎஸ்
3) ஐஎப்எஸ்
4) லஞ்ச ஒழிப்பு
5) உள் துறை
6) காவல் துறை
7) மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை
8) மொலாசஸ்
9) தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், லஞ்ச ஒழிப்பு, உள் துறை, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மற்றும் மொலாசஸ் ஆகிய துறைகள், மிகுந்த வேலைப் பளு மற்றும் அதிகாரம் நிறைந்த துறைகள். என்னால் முடியவில்லை, உடல் ஒத்துழைக்கவில்லை, என்றெல்லாம் புலம்பும் கருணாநிதி மேற்கூறிய துறைகளை ஏன் மகன் உட்பட வேறு யாருக்கும் அளிக்க மறுக்கிறார் தெரியுமா ?

அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டால், அதிகாரிகள் அனைவரும் ஸ்டாலினைப் பார்த்து வேலையை முடித்துவிட்டுப் போய் விடுவார்கள், நம் பிறந்த நாளுக்கு நீண்டு நெடிந்து வீட்டு வாசலில் நிற்கும் அதிகாரிகள் கூட்டம், ஸ்டாலின் வீட்டுக்குப் போய் விடும் என்ற எண்ணமே காரணம்.

அனைத்து அதிகாரங்களையும் மகன் ஸ்டாலினுக்கும், மகள் கனிமொழிக்கும், தன் அமைச்சரவை சகாக்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, தான் மிகவும் நேசிப்பதாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அடிக்கடி பிரலாபிக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் அல்லவா ?

செய்ய மாட்டார் கருணாநிதி. தன் இறு்தி மூச்சு வரைக்கும் அதிகாரத்தை கைவிட மாட்டார்.

இருப்பினும், தமிழாய்ந்த அறிஞரான கருணாநிதி, அவர் படித்த தமிழ் நூல்களில் உள்ள நல்ல கருத்துளை இனியாவது கருத்தில் கொண்டு, அதிகார போதையை விட்டு ஒழிப்பார் என்ற நப்பாசையுடன், அவர் பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.

ஒப்பாரி

1 comment: