Saturday, April 24, 2010

உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்




“ஆளெல்லாம் ஸ்டைலா சினிமா ஆக்டர் மாதிரி இருக்காரு.... ஆனா புத்தி சரியில்லையே.... “


அன்பார்ந்த திரு.ஜாபர்சேட் அவர்களே,

வழக்கமாக அரசியல்வாதிகளுக்குத்தான் பகிரங்கக் கடிதம் எழுதுவார்கள், என்ன இது அதிகாரிக்கு, அதுவும் காவல்துறை அதிகாரிக்கு பகிரங்கக் கடிதமா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் வாதிகளுக்கும் கடிதம் எழுதுவதை விட, உங்களுக்கு கடிதம் எழுதி, ஒரு வேளை, அந்த கடிதத்தில் உள்ளதை நீங்கள் பரிசீலித்தீர்கள் என்றால், தமிழ்நாட்டின் அநேக பிரச்சினைகள் தீரும் என உறுதியாக நம்புகிறேன். ஏனேனில், நீங்கள் அரசியல்வாதிகளுக் கெல்லாம் அரசியல்வாதி. உங்களை மாக்கியவல்லியோடும், சாணக்கியரோடும் ஒப்பிட்டால் தப்பே இல்லை. அந்த அளவுக்கு, அரசியலில் நீங்கள் கை தேர்ந்தவர் என்பதாலேயே, உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும் போதும் சரி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, நீங்கள் ஒரு மிகுந்த அறிவார்ந்த மாணவராகவே இருந்ததாக உங்களுடன் படித்த நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். உங்களோடு, ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தவர்களிடமும், உங்களோடு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர்களிடமும் பேசியபோது, உங்களால் தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சினைகள் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். படிக்கும் காலத்தில் அப்படி நல்லவராக இருந்தீர்கள் என்று சொல்கிறார்கள்.

படிக்கும் காலத்தில் நல்லவர்களாக இருந்தவர்களெல்லாம், தமிழக காவல்துறைக்கு வந்ததும் சீரழிந்தது தானே வரலாறு. ஆனால், நீங்கள் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றுதான் உங்கள் நண்பர்கள் இன்றும் சொல்கிறார்கள்.

1996ம் ஆண்டு முதல்வரின் பாதுகாப்பை கவனிக்கும் டிஐஜியாக நீங்கள் இருந்தீர்கள். அன்று உங்களால், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக முதல்வரின் இல்லத்துக்குச் சென்ற பாண்டியன் இன்று உங்களின் அதி தீவிர விசுவாசியாகவும், முதல்வர் இல்லத்தில் என்ன நடக்கிறது, முதல்வரை யார் சந்திக்கிறார்கள், முதல்வரின் குடும்பத்தில் என்ன நடக்கிறது, முதல்வரின் உதவியாளர் சண்முகநாதனை முதல்வர் எப்படியெல்லாம் திட்டுகிறார், முதல்வரை சந்திக்கும் அதிகாரிகளிடம் முதல்வர் என்ன பேசுகிறார், என்று, முதல்வர் இல்லத்திலேயே உளவு பார்க்கும் வேலையை பாண்டியனை வைத்து செய்து வருகிறீர்கள். உங்களால் வளர்த்து விடப்பட்ட பாண்டியன், இன்று பல லட்சக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு, போஸ்டிங் வாங்கித் தரும் ப்ரோக்கராகவும் இருந்து, கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் என்பது நீங்கள் அறியாததா ?


1996ல் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நீங்கள், கருணாநிதியோடு ஏற்பட்ட நெருக்கத்திற்கு விசுவாசமாக இருந்தீர்களா ?

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் பட வேண்டும் என்று திட்டமிடப்பட்ட போது, அந்தப் பொறுப்பு, கருணாநிதியின் பாதுகாப்பை கவனித்தவர் என்ற முறையில் உங்களிடம் அல்லவா ஒப்படைக்கப் பட்டது. கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களையும் அறிந்தவராதலால் நீங்கள் அல்லவா, டிசிக்கள் தலைமையிலான எட்டு குழுக்களை அமைத்து, கோபாலபுரம், சிஐடி காலனி, ஸ்டாலின் வீடு, முரசொலி மாறன் வீடு, அறிவாலயம், என்ற பல்வேறு இடங்களுக்கு அனுப்பினீர்கள். அத்தனை குழுக்களும், எங்கு செல்கின்றன, என்ன முன்னேற்றம் என்ற விபரங்களை மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து உடனுக்குடன் தொலைபேசி மூலம் வாங்கி, அன்று சர்வ வல்லமை பொருந்திய அதிகாரியாக இருந்து முத்துக்கருப்பனுக்கு தகவல் சொன்னது நீங்கள் அல்லவா ? கருணாநிதி கைதில் சம்பந்தப்பட்ட, காவல்துறை அதிகாரிகள் ஜார்ஜ் மற்றும் கிரிஸ்டோபர் நெல்சன் போன்றோர், இன்று தண்ணீர் இல்லாத காடுகளில் பணியாற்றுகையில், அவர்களை விட முக்கியப் பங்கு வகித்த நீங்கள், இன்று தமிழ்நாட்டின் சர்வவல்லமை படைத்த, ஆக்கவும், அழிக்கவும் வல்ல கடவுளுக்கு நிகராக இருக்கையில், உங்களை மாக்கியவல்லியோடும், சாணக்கியரோடும் ஒப்பிடுவதில் என்ன தவறு ?

திமுக ஆட்சிக்கு வந்ததும் உளவுத்துறை ஐஜியாக நீங்கள் நியமிக்கப் பட்டதும், உங்களுக்கு உயர் அதிகாரியாக வந்தவர்களையெல்லாம் ஏதாவதொரு புகாரைச் சொல்லி மாறுதலில் அனுப்பி விட்டு, சக்கரவர்த்தி போல, தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் தங்கள் திறமையைக் கண்டு வியப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த அனூப் ஜெய்ஸ்வால் என்ற அதிகாரியை உளவுத்துறையில் இருந்து மாற்றி விட்டு, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் என்று அவர் மீது அபாண்ட பழி சுமத்தியது உங்களின் சாணக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?



2008ல் காலியான ராஜ்யசபா எம்பி பதவிக்கு, உளவுத்துறை எஸ்பியாகவும், யூனிபார்மோடு கருணாநிதி காலில் விழுந்து தன் விசுவாசத்தை காட்டியவருமான சந்திரசேகரின் மனைவி தமிழச்சிக்கு எம்.பி பதவி கிடைக்க இருந்த சூழலில், அவர் எம்.பியாக ஆனால் உங்கள் அதிகாரம் குறையும் என்று, ஏராளமான புகார்கள் இருந்தும் வசந்தி ஸ்டான்லியை எம்.பியாக ஆக்கியது உங்கள் சாணக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?


தமிழ்நாடு அரசிடம் இருந்து அண்ணாநகரில் வீட்டு மனை பெற்று, அதில் ஆடம்பர பங்களாவை கட்டி முடித்து, பல லட்சங்களுக் விற்று விட்டு, மீண்டும் சட்ட விரோதமாக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து திருவான்மியூரில் வீட்டு மனை முதல்வரின் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றது தங்களின் அசாத்திய திறமை அல்லவா ?


மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய சங்கர் ஜிவால் என்ற அதிகாரி, போதை மருந்து கடத்துபவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கவும், டி3டி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியை பெற்றதும். சங்கர் ஜிவால் தமிழக உளவுத்துறைக்கு டிஐஜியாக வந்ததும், அந்த டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தை, தமிழகத்தின் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கவும், மின்னஞ்சல்களை இடைமறித்துப் படிக்கவும் பயன்படுத்தி, அவர்களுக்கு “ஒட்டுக்கேட்பு கட்டணமாக“ தமிழக மக்களின் வரிப்பணத்தில் வழங்கப் பட்டுள்ள ரகசிய நிதியை அளித்து, யாருமே கேள்வி கேட்காமல் செய்தது தங்களின் பிரத்யேகத் திறமை அல்லாமல் வேறு என்ன ?
2008ம் ஆண்டில், உளவுத்துறையின் இந்த சட்டவிரோத ஒட்டுக் கேட்பு பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பாக, இது தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறாமல் சாதுர்யமாக சமாளித்து இன்று வரை ரகசிய நிதி செலவிடப்படும் விதம் பற்றி தகவல் வெளியாகாமல் பாதுகாத்து வரும் கலை வேறு யாருக்கு உண்டு ?


இவ்வாறு சட்டவிரோதமாக அனைவரின் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பதால், 2008ம் ஆண்டில் மருத்துவர் ராமதாசுக்கு போன் செய்தால், பல்வேறு புதிய புதிய எண்களில் அவர் பேசினார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல. எத்தனை புதிய எண்கள் மாற்றினாலும், அத்தனை எண்களையும் ஒட்டுக் கேட்கும் வல்லமை தங்களுக்கு உண்டு என்பது மருத்துவர் அய்யாவுக்கு தெரியாது போலும்.


மருத்துவர் அய்யாவின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு அவருடைய மிக முக்கியமான அந்தரங்கங்களை நீங்கள் அறிந்து கொண்ட கோபத்தில்தான், உங்களை பெயரிட்டு, நீங்கள்தான் ஒட்டுக் கேட்பு செய்கிறீர்கள் என்று நேரடியாக குற்றம் சாட்டினார். அவரின் அறிக்கையை பத்திரிக்கைகளிள் பின்னுக் தள்ளுவதற்காகவே, திருச்சியில் “பாம் பாலாஜி“ என்ற ஒரு சாதாரண குற்றவாளியை பெரிய ரவுடி போல சித்தரித்து என்கவுண்டரில் சுட்டுத் தள்ள ஏற்பாடு செய்தீர்கள்.



ஏப்ரல் 2008ல், டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழ் திரிபாதி, உபாத்யாய் இடையிலான உரையாடலை வெளியிட்டு, உளவுத்துறைதான் இந்த ஒட்டுக் கேட்பை வெளியிட்டது என்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவுடன், அந்த செய்தியை வெளியிட்ட, நிருபர் வி.பி.ரகுவையும், அந்த நாளிதழையும் மிரட்டி, இன்று வரை அந்த நாளிதழ் அரசுக்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் எந்தவொரு செய்தியும் வெளியிடாமல் தடுத்து வைத்திருக்கும் திறமை, தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும், எந்த அதிகாரிக்கும் இல்லை.

இது மட்டுமல்லாமல், தந்திரமாக, இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத பத்திரிக்கையாளர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆணையம் அறிக்கை கொடுத்ததும், இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை யாளர்களை மிரட்ட தாங்கள் பயன்படுத்திக் கொண்டதும், பத்திரிக்கையாளர்கள் பணிந்தார்கள் என்று தெரிந்ததும், ஏதோ பெருந்தன்மையாக அரசே வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தியதும் உங்கள் கைங்கர்யம் அல்லாமல் வேறு என்ன ?
நீங்களும், ஒரு பாதிரியும், குற்றம் குற்றமே என்னும் பத்திரிக்கையின் முக்கியப் புள்ளியும் சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த சதிகள் ஒன்றா இரண்டா ?


ஒரு பக்கம் போலிப் பாதிரி பிரபாகரனை விட ஈழத் தமிழர்களுக்காக பாடுபட்டவன் நான்தான் என்று கட்டுரை எழுதுவதும், இன்னொரு பக்கம் அந்தப் பத்திரிக்கை அட்டையில் பிரபாகரன் படத்தைப் போட்டு கொள்ளை லாபம் சம்பாதிப்பதும், அதற்கு நேர் எதிராக நீங்கள், தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது வழக்கு மேல் வழக்காகப் போட்டு, செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் அவர்களை அடைத்து வைத்து வதைப்பதும், உங்கள் மூவர் கூட்டணி எவ்வளவு தந்திரமானது என்பதை விளக்குகிறது.

சமீபத்தில், புகழேந்தி என்ற வழக்கறிஞர், டி3டி டெக்னாலஜிஸ் போலவே, அவுட்சார் டெக்னாலஜிஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம், சட்டவிரோத ஒட்டுக் கேட்பு நடைபெறுகிறது என்றும், அந்த ஒட்டுக் கேட்பை செய்வது நீங்கள்தான் என்றும், உடனடியாக அந்த நிறுவனத்தின் மேலும், உங்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அவர் மீது வழக்கு தொடரப்போகிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினீர்கள். உங்கள் சார்பில், ஒரு வக்கீல் நோட்டீஸ் தம்புச் செட்டித் தெருவின் ஒரு அலுவலகத்தில் தயார் செய்யப் பட்டது. ஆனால், இது வரை புகழேந்தியின் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. நீங்கள் புகழேந்தி மீது எந்த ஒரு வழக்கும் போடவில்லை.

உங்களை இப்படி அதிகார பீடத்தின் உச்சியில் அமரவைத்துள்ள கருணாநிதிக்காவது தாங்கள் விசுவாசமாக இருக்கிறீர்களா ? அதுவும் இல்லை. உங்களின் விசுவாசியான திருச்சி எஸ்பி கலியமூர்த்தி மூலமாக, போயஸ் கார்டனுக்கும் தாங்கள் தகவல் சொல்கிறீர்கள் என்பது கலியமூர்த்தியோடு பணியாற்றுபவர்களும் போயஸ் கார்டன் வட்டாரங்களும் சொல்லும் தகவல்.

கருணாநிதிக்கும் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. உங்கள் சமூகத்துக்காவது விசுவாசமாக இருக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை. நீங்கள் உளவுத்துறை ஐஜியாக ஆன பின்புதான் இஸ்லாமியர்கள் மீது, ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன என்று இஸ்லாமிய தோழர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் எவ்வளவோ ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கையில், உங்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு புகார்கள் ஜாபர் சேட் அவர்களே ? நெருப்பில்லாமல் புகையாது என்ற உண்மை என்று நீங்கள் அறியாததா ?

உங்களோடு பணியாற்றுபவர்களே உங்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள் ஜாபர் சேட் அவர்களே. டி3டி டெக்னாலஜிஸ் பற்றியும், அவுட்சார் டெக்னாலஜிஸ் பற்றியும் வெளி உலகிற்கு சொன்னது உங்களோடு இருப்பவர்கள்தான் என்பதை தாங்கள் அறிவீர்களா ?

உங்களைப் பற்றியும், உங்கள் தொடர்புகள் பற்றியும் இன்னும் எங்களுக்கு தகவல்கள் சொல்லிக் கொண்டிருப்பது உங்கள் உடன் இருப்பவர்கள் என்பது தங்களுக்கு தெரியுமா ?
கருணாநிதியிடம் வேலைப் பார்த்துக் கொண்டு, கருணாநிதியையே நீங்கள் உளவு பார்க்கையில், உங்களிடம் வேலை பார்த்துக் கொண்டு, உங்களை உளவு பார்க்க ஒருவன் இல்லாமலா போய் விடுவான் ? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு ஜாபர் சேட் அவர்களே.


நீங்கள் கருணாநிதிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். இஸ்லாமியர்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டாம். 14.12.1986 அன்று ஐபிஎஸ் அதிகாரியாக பதவி ஏற்கையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டீர்களே… … இந்திய அரசியல் அமைப்பின் பால், உண்மையாகவும், உள்ளார்ந்த பற்றுடனும் என்று. அந்த அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், நீங்கள் வாங்கும் சம்பளத்திற்காக, உழைத்து உழைத்து தன் வியர்வையால் வரியாகக் கட்டுகிறானே, சாமான்யன்…. … அவனுக்கும் விசுவாசமாக இருங்கள் என்பதுதான் உனது வேண்டுகோள்.


நன்றி நம்தினமதி நாளேடு
சவுக்கு

5 comments:

  1. romba tavarana oru pathivu
    entha atigarium entha muthalvarukkum viswasamaga irukka tevai illai. arasangathuku mattume viswasamaga irukka vendum

    ReplyDelete
  2. சரியான சவுக்கடி நான் பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்

    நன்றி

    தமிழன்

    ReplyDelete
  3. savukku oru saattaiyadi thanthullathu!

    ReplyDelete
  4. தவறான பதிவு என்று பின்னூட்டம் இட்டது, ஜாபர்சேட்டா அல்லது அவர் சார்பான அல்லக்கையா என்பது தெரியவில்லை. வெறுமனே, தவறான பதிவு என்று சொல்வதற்கு பதிலாக, என்ன தவறு, எப்படி மறுக்கிறீர்கள் என்று விரிவாக பெயரோடு பின்னூட்டம் இட்டால், உரிய விளக்கம் அளிக்கப் படும்.

    ReplyDelete