Monday, April 12, 2010

ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத் துறை


லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை மறைந்திருந்து, பாய்ந்து சென்று கையும் களவுமாக கைது செய்தது என்று செய்திகளில் படித்திருப்பீர்கள். ஆனால், இப்படி கையும் களவுமாக கைது செய்யப் படுபவர்களில், கீழ்மட்ட அரசு ஊழியர்கள்தான் அதிக அளவில் மாட்டிக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு, கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், காவலர்கள், தலைமைக் காவலர்கள், இளநிலை உதவியாளர்கள், மின்சார வாரிய பில் கலெக்டர்கள் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் மீதுதான் அதிக அளவில் வழக்குகள் போடப்பட்டு வருகிறது.


ஆனால், உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதில், லஞ்ச ஒழிப்புத் துறை பாரபட்சமான நடந்து கொள்கிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கீழ்மட்ட அரசு ஊழியர்களின் மீது வழக்கு தொடர்கையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கே அதிகாரம் உள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்கையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான மூன்று நபர் கொண்ட குழு மட்டுமே எவ்வித விசாரணைக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று விதி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஒரு புகாரின் மீது, ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியின் மீது விசாரணை தொடங்க லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதி கேட்கும் பட்சத்தில், தலைமைச் செயலாளர் தலைமையிலான மூன்று நபர் குழு அனுமதி அளிக்கும் முன்னரே சம்மந்தப்பட்ட நபர், தலைமைச் செயலகத்திலேயே இந்த அனுமதி கிடைக்காமல் செய்து விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான மூன்று நபர் குழு லஞ்சஒழிப்புத் துறை விசாரணைக்கு அனுமதி அளிக்கும் வழக்கம், வினீத் நாராயண் என்ற வழக்கில் வழங்கப் பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கில் கூட துறை ரீதியாக கூட, ஒரு அதிகாரிக்கு கூட தண்டனை வழங்கப் படவில்லை என்பதே, இந்த உயர் அதிகாரிகள் எப்படி செல்வாக்காக உள்ளனர் என்பதை காட்டுகிறது. உதாரணத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது தொடர்ந்த வழக்குகள் சில

DE 147/2008/POL/HQ
சி.கே.காந்திராஜன் ஐபிஎஸ்

DE 136/2006/TPT/HQ
பி.சண்முகம் ஐஏஎஸ்

PE 81/2001/MISC/HQ
உஜகார் சிங், ஐஏஎஸ்

DE 269/2004/POL/HQ
எஸ்.ராஜேந்திரன், ஐபிஎஸ்

PE 62/2003/PUB/HQ
பி.சிவசங்கரன், ஐஏஎஸ்

DE 160/2006/POL/HQ
பி.சிவனாண்டி, ஐபிஎஸ்

PE 41/2002/POL/HQ
கே.என்.சத்தியமூர்த்தி, ஐபிஎஸ்

DE 137/2001/POL/VL
அறிவுசெல்வம் ஐபிஎஸ்

DE 126/2002/POL/HQ
வீ.ஏ.ரவிக்குமார் ஐபிஎஸ்

DE 90/2002/POL/HQ
கே.சண்முகவேல் ஐபிஎஸ்

RC 63/2003/POL/HQ
முத்துக்கருப்பன் ஐபிஎஸ்

DE 145/2008/POL/HQ
ஐ.ராஜா ஐபிஎஸ்

DE 45/88/POL/HQ
ஜி.திலகவதி, ஐபிஎஸ்

DE 102/2004/POL/HQ
ஜி.திலகவதி, ஐபிஎஸ்

DE 52/2001/PUB/HQ
எஸ் மாலதி ஐஏஎஸ்
சி.பி.சிங், ஐஏஎஸ்
சாந்தா ஷீலா நாயர், ஐஏஎஸ்
ஜோதி ஜகராஜன் ஐஏஎஸ்

DE 24/2007/SUGAR/HQ
ஆர்.எஸ்.கண்ணா ஐஏஎஸ்

DE 118/2001/PUB/HQ
பி.ஆர்.பிந்துமாதவன், ஐஏஎஸ்

RC 63/2001/SUGAR/HQ
செல்வம் ஐஏஎஸ்

RC 64/2001/SUGAR/HQ
பாண்டியன் ஐஏஎஸ்

RC 65/2001/SUGAR/HQ
சுகுமாறன் ஐஏஎஸ்

PE 87/2006/HD/HQ
சுதீப் ஜெயின் ஐஏஎஸ்

RC 34/96/POL/HQ
ஆறுமுகம் ஐபிஎஸ்

DE 158/2006/POL/HQ
ஆறுமுகம் ஐபிஎஸ்

மேற்கூறிய 23 வழக்குகளும் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கான வழக்குகள் லஞ்ச ஒழிப்புத் துறையால் உயர் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்டிருந்தாலும், இந்த அதிகாரிகள், அதிகார மட்டத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்காலும், அரசியல் செல்வாக்காலும், மேற்கூறிய அனைத்து வழக்குகளையும் எவ்வித நடவடிக்கையும் இன்றி முடித்து விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போல உயர் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சுணக்கம் இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை முடுக்கி விடுவதில், அரசும் அதிகாரிகளும் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதாரணத்திற்கு, ஏ.கே.விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காவல்துறை மோதலில் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்ததை அடுத்து, ஒரே நாளில் விஸ்வநாதனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மூன்று நபர் குழு முடிவெடுத்து, ஆணையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்தர் பால் சிங் ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகையிலேயே, குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு உரிய மதிப்பெண் பெறாத தங்கள் பிள்ளைகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் சீட் பெற்றதாக பேராசிரியர் கல்யாணி தொடர்ந்த புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, தற்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, லஞ்ச ஒழிப்புத துறை இயக்குநர் உபாத்யாய்க்கு தொலைபேசியில் இந்த விசாரணையைத் தொடர வேண்டாம் என்று உத்தரவிட்டது உரையாடலாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதுபோல, ராதாகிருஷ்ணன் மீது விசாரணையை நடத்தாமலும், விஸ்வநாதன் மீது, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டதும், லஞ்ச ஒழிப்புத் துறையின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு ஒரு உதாரணம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் 2005-06ம் ஆண்டில், மொத்தம் 750 வழக்குகளைத் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை, அவற்றுள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெறும் 6 வழக்குகளையே தொடர்ந்துள்ளது இதே போல 2006-07ம் ஆண்டில், தொடரப்பட்ட மொத்தம் 488 வழக்குகளில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெறும் 19 வழக்குகள். அதே போல 2007-08ம் ஆண்டில் மொத்தம் 588 வழக்குகள். இவற்றுள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெறும் 15 வழக்குகள் மட்டுமே என்று, லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையத் தளமே தெரிவிக்கிறது.

கீழ்நிலை ஊழியர்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா ? உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது இல்லையா ? பிறகு கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சமான நடவடிக்கை என்று பொதுமக்கள் எழுப்பும் கேள்விக்கு, லஞ்ச ஒழிப்புத் துறைதான் பதில் சொல்ல வேண்டும்.

சவுக்கு


நன்றி நம்தினமதி நாளேடு

2 comments:

  1. எல்லா துறையிலும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தான் மாட்டிக்கொள்வார்கள். அரசியலிலும் அது தான் நிலை. மேல் மட்டத் தவறுகள் தான், கீழ்மட்டத்தையும் தவறு செய்ய தூண்டுகிறது. ஆனால் பரிசுத்தத்தை பற்றி வாய் கிழிய பேசுவார்கள். எப்போதும் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் யோக்கியன்களே. இது தானே இந்திய ஜனநாயகத்தின் லட்சணம்.

    ReplyDelete
  2. வியப்பு ஒன்றும் இல்லை.. :(
    நம் நாடு வளர்ந்து வரும் நாடாகவே இருப்பது... இது போன்ற காரணங்களினால் கூடத்தான் ...
    வேதனையாய் இருக்கிறது ...

    ReplyDelete