Friday, April 2, 2010

நளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து ?




என்ன இது ? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ? பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், இவ்வாறுதான் கருணாநிதி தலைமையிலான அரசு, நளினி முன் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் விடுதலை செய்யுங்கள் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு, மிகுந்த தாமதத்துக்குப் பிறகு, சிறை விதிகளின் படி ஒரு ஆலோசனைக் குழுமத்தை அமைத்தது. அந்த ஆலோசனைக் குழுமத்தில் அனைவரும், கருணாநிதியின் அடிவருடிகளாக இருந்தாலும், மனசாட்சி உள்ள சில அதிகாரிகள் நியாயமான அறிக்கையைத் தரவே செய்திருக்கிறார்கள்.

ஆலோசனைக் குழுமத்தின் ஒரு உறுப்பினரான ப்ரோபேஷன் ஆபீசர், விடுதலை ஆன பின் நளினி, தனது, தாயார், தம்பி, மற்றும் தம்பி மனைவி ஆகியோரோடு தங்குவார், அவர் அவ்வாறு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதையே, நளினியை முன் விடுதலை செய்ய பரிந்துரை செய்வதற்கான காரணமாக குறிப்பிட்டிருக்கிறார் அந்த அதிகாரி. இந்த ஆலோசனைக் குழுமத்தின் மற்றொரு உறுப்பினரான உளவியல் ஆலோசகர், எவ்வித தீர்மானமான முடிவையும் வழங்கவில்லை என்று அரசாணை குறிப்பிடுகிறது. உளவியல் ஆலோசகர், நளினி சரியான மனநிலையில் உள்ளாரா இல்லையா என்று மட்டும் தானே அறிக்கை தர இயலும் ? தீர்மானமான முடிவை அவர் எப்படி வழங்க முடியும் ?


ப்ரோபேஷன் ஆபிசர் தனது அறிக்கையை ஜுலை 2009ல் அளித்திருக்கிறார். இந்த அறிக்யை பெற்ற பின்னர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்தால் இத்தாலிக் கோமகளின் மனது கோணும் என்ற ஐயத்தில் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து ஒரு அறிக்கையை பெறுகிறார்.

அந்த அறிக்கையில், கருணாநிதி கூறியபடி அறிக்கை தந்த அந்த ஆய்வாளர், நளினி விடுதலை பெற்ற பின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமேரிக்க தூதரகம் மற்றும், மிக மிக முக்கிய பிரமுகர்களும், மிக முக்கிய பிரமுகர்களும் வசிக்கும் பகுதி, ஆதலால், நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் வசிக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர் யார் ? அமேரிக்க தூதரகத்தின் பின்புறம் தனது பல வீடுகளில் ஒரு வீட்டை வைத்துள்ள கருணாநிதியைத் தவிர வேறு யார் ? கண்டிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டைப் பற்றி கருணாநிதி கவலைப் பட்டிருக்க மாட்டார்.




நளினியை விடுதலை செய்ய மறுக்கும் இந்த அரசாணையின் மற்ற அம்சங்களைப் பார்ப்போம்.
முதல் காரணம், நளினி புரிந்த குற்றம் மிகப் பயங்கரமானது. ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளிகளோடு பழகியது மட்டுமல்லாமல், அக்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்தை நளினி செய்திருக்கிறார். ராஜீவ் படுகொலைப் பற்றி நளினிக்கு முன்பே தெரியும்.

நளினியில் கணவர், இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கிறார்.
ஒரு கொலை பயங்கரமான கொலை வழக்காக இருந்தால், அக்கொலை வழக்கில் தண்டனை பெற்றவர், எந்தக் காலத்திலும் விடுதலை செய்யப் படவே கூடாது என்று எந்தச் சட்டம் சொல்கிறது. திமுக அரசை எதிர்த்து, மதுரை மாமன்றத்தில் அரசியல் செய்தார் என்பதற்காக, மதுரை கவுன்சிலர் லீலாவதியை அவரது தெருவிலேயே வெட்டிக் கொன்றார்களே .. …

அது பயங்கரமான குற்றம் இல்லையா ?

அந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை பெற்று, இன்று, மதுரையில் அஞ்சாநெஞ்சனின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே ?


உச்சநீதிமன்ற நீதிபதி, கே.டி.தாமஸ் தனது தீர்ப்பில், ராஜீவ் படுகொலை, நளினிக்கு, மே 21 அன்று ஸ்ரீ பெரும்புதூருக்கு கிளம்பும் போதுதான் தெரியும். முருகன் மீது ஏற்பட்ட காதலால், நளினி, இக்குற்றத்தில், தன்னையறியாமல் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார், அவர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இக்குற்றத்தில் பங்கெடுத்தார் என்று சொல்ல இயலாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுருக்கிறாரே … .. ! இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி முட்டாளா ?


அடுத்த காரணம், நளினி, சிறையில் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொண்டார் என்பதால் அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று பொருளல்ல. இப்போது கூட அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதி காலில் விழுந்து மன்றாட வேண்டுமா ? நளினியை சிறையில் சந்தித்த பிறகு, டெல்லியில் ஒரு பேட்டியின் போது, ராஜீவ் மகள் பிரியங்கா என்ன கூறினார் தெரியுமா ?


“நளினியை மன்னிக்க வேண்டும் என்றுதான் அவரை சிறையில் சந்திக்கச் சென்றேன். ஆனால், அவரை சந்தித்த பிறகுதான், அவரை மன்னிக்க நான் யார் என்று உணர்ந்தேன். நான் அனுபவித்த கஷ்டங்களை விட நளினி பல மடங்கு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார். “ என்று கூறினார்.

பாதிக்கப் பட்ட ராஜீவின் மகளே, நளினியை மன்னிக்கையில், நளினி, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது. இந்தக் காரணம், கருணாநிதியின் கயமை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?


2008ல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த, பல்வேறு கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற, 1408 கைதிகளை கருணாநிதி விடுவித்தாரே .. … .. அந்த 1408 பேரும், குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதியின் காலில் விழுந்து மன்றாடினார்களா ? வருத்தம் தெரிவித்தார்களா ? என்ன அயோக்கியத்தனமான வாதம் இது ?

அடுத்த காரணம், நளினி விடுதலைக்குப் பின், அவரை தங்கவைத்து பாதுகாக்க, அவரின் தாயார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நளினியில் தாயாரும், தம்பியும், இவ்வழக்கில் கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டவர்கள். அதனால், நளினியை விடுதலை செய்ய இயலாது.




அஞ்சா நெஞ்சன் அழகிரி கூடத்தான், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டார். அதனால், கருணாநிதி அவர் வீட்டில் தங்க மாட்டாரா ? கருணாநிதி கூடத்தான், ஊரான் சொத்தை அடித்து உலையில் போட்ட ஊழல் வழக்குக்காக பல முறை கைது செய்யப் பட்டுள்ளார். இப்போது அவர் என்ன காட்டிலா தங்கியுள்ளார் ?




மேலும், உச்சநீதிமன்றம், நளினியின் தாயையும், தம்பியையும் விடுதலை செய்த பிறகு, இந்தக் கேள்வியை எழுப்ப இவர்கள் யார் ?

ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்ற அபத்தமான காரணத்தை ஏற்கனவே பார்த்து விட்டோம். அடுத்த காரணம், நளினி தனது 20.01.2010 நாளிட்ட மனுவில், தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயார் என்பதால் விடுதலை செய்யப் பட வேண்டும் என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண் குழந்தை என்பதால் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா ?

கருணாநிதியைப் போல, மூன்று மனைவிகள், முப்பது பிள்ளைகள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா ? சிறையில் பிறந்து, தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த அந்த அப்பாவி பெண் குழந்தையின் நலனுக்காக என்னை விடுதலை செய்யுங்கள் என்ற நளினியின் அவலக் குரல், அரக்கர்களுக்கு எங்கே புரியப் போகிறது ?

அடுத்த காரணம், மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும் பரிசீலித்து, 18 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் ஒரு தேசத்திற்கு எதிரான குற்றத்தை புரிந்ததற்காக நளினியை முன் விடுதலை செய்ய இயலாது, என்று காரணம் கூறுகிறது அந்த அரசாணை.


ஜுலை 2009ல் நளினி தன் தாயாரோடு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று அறிக்கையளித்த ப்ரோபேஷன் அதிகாரி, ஜனவரி 2010ல் ராயப்பேட்டை ஆய்வாளரின் அறிக்கையை பரிசீலித்தவுடன் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, ‘ஆமாம், நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடும்‘ என்று ஒத்து ஊதுகிறார்.

ராஜீவ் உயிர் மட்டும் தான் உயிரா ? கருணாநிதியால் ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்யப் பட்ட 1408 கைதிகளால் இழந்த உயிர்கள் எல்லாம் மயிரா ? லீலாவதி கொலை வழக்கில் கருணாநிதியால் விடுதலை செய்யப் பட்ட, நல்லமருது, அஞ்சா நெஞ்சன் இருக்கும் தைரியத்தில், இன்னும் தனது ரவுடித்தனத்தை மதுரை மாநகரில் அரங்கேற்றி வருகிறாரே, இதனால் சட்டம் ஒழுங்கு கெடவில்லையா ?

நல்லமருது, 2008ம் ஆண்டில் விடுதலை செய்யப் பட்டபோது, மதுரை மாநகரில் ஒட்டப் பட்ட போஸ்டர்கள் என்ன தெரியுமா ?

"மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா! ’ "

2001ல் கட்சியை விட்டு நீக்கப் பட்ட ஒரே காரணத்துக்காக, 8 அரசு பேருந்துகளை அழகிரியின் அடியாட்கள் எரித்தனரே.. ?

குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட வேண்டியவரல்லவா அழகிரி ?

2001ல் சிறையில் அடைத்திருந்தால், 2007ல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாயிருக் காதே ? தா.கிருஷ்ணன் உயிரை விட்டிருக்க மாட்டாரே ?

19 ஆண்டுகளாக, தன் வாழ்வின் முக்கியமான இளமைப் பகுதியை சிறையில் கழித்த நளினியை விடுதலை செய்தால், இத்தாலிக் கோமகளின் மனம் கோணும் என்று, கருணாநிதி நளினியை அவமானப் படுத்துவது போல, இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டிருப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?

ராஜீவ் தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வருகையில் இறந்தார். அவரோடு, இறந்தவர் அனைவரும் போலீஸ் காரர்களும், பொது மக்களும் தானே ? தமிழ்நாடு மாநில காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறதே ?




இதற்கு என்ன பதில். “ஆப்டவனுக்கு அஷ்டமத்துல சனி. ஓடுனவனுக்கு ஒன்பொதுல குரு“ என்ற பழமொழிக்கு ஏற்ப, மாட்டிக் கொண்டதால் நளினி தலையில் இக்குற்றத்தின் பெரும் பகுதி கட்டப் பட்டது என்பதுதானே உண்மை.

ராஜீவ் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதால்தானே Multi Disciplinary Monitoring Agency (MDMA) என்ற அமைப்பை ஏற்படுத்தி, 1998 முதல் இன்னும் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கிறேன் என்ற பேரில், இது வரை சிபிஐ அதிகாரிகள் 12 முறை வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் போயிருக்கிறார்கள் என்பது தெரியுமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த MDMA இது வரை 1998 முதல் 2009 வரை, ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க 12 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டிருக்கிறது என்பது தெரியுமா ?

ஆனால், இது வரை உருப்படியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க நளினி என்ன பாவம் செய்தார் ?

புதிதாக திருமணம் ஆன பெண், திருமணம் ஆன முதல் வாரத்தில், தான் எது செய்தால் கணவருக்குப் பிடிக்கும், எது செய்தால் பிடிக்காது என்று அறியாமல் திணறுவது போல, நளினி விஷயத்தில் என்ன செய்தால் சோனியாவுக்குப் பிடிக்கும், என்ன செய்தால் பிடிக்காது, ஏதாவது செய்து அவர் மனம் கோணுமோ என்ற கற்பனையிலேயே நளினியை சிறையில் வாட விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இத்தனை பேர் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட கருணாநிதிக்கு என்ன தண்டனை என்பதை காலம்தான் முடிவு செய்யும்.


சவுக்கு

4 comments:

  1. நிறைய யோசிக்க வைக்கும் கேள்விகள் ..
    திருட்டு பயலுவ பதில் சொல்வாங்களான்னுதான் தெரியல

    ReplyDelete
  2. கருணாநிதி இத்தாலிய அடிவருடியாகி, நிறைய வருசங்கள் ஆகிவிட்டது..
    ( மனசாட்சி இறந்து பல வருடங்களாகிவிட்டன. )

    ReplyDelete
  3. த.நா.கோபாலன்April 3, 2010 at 7:41 AM

    சோனியாவுக்குப் பிடிக்கும், என்ன செய்தால் பிடிக்காது, ஏதாவது செய்து அவர் மனம் கோணுமோ என்ற கற்பனையிலேயே நளினியை சிறையில் வாட விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

    நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் இதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைக்கும் எனத்தோன்றவில்லை. முரண்பாடற்ற, சமரசமற்ற மனிதநேய அணுகுமுறையினை மக்களிடம் வலியுறுத்தும் சக்திகள் ஒன்றுபட்டால்தான் இதெல்லாம் சாத்தியம்.

    ReplyDelete
  4. கேட்டதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள். இவரை தான் தமிழினத் தலைவன்னு சொல்லிட்டு ஒரு கும்பல் ஆடுது. சகுனிகளின் ஆட்டம் எவ்வளவு நாளைக்குனு பார்ப்போம்.

    ReplyDelete