Monday, July 27, 2009

சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்




கடந்த டிசம்பர் மாதம், வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண்மணி சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப் பட்டு, நளினி அந்தச் செய்தியை தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தாக்கப் பட்ட சாரதாவுக்கு ரூ.50,000 இழப்பீடும், தாக்குதல் சம்பவம் நடக்கையில் மெத்தனமாக இருந்த சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.


இத்தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும் நளினிக்கு மன ரீதியாக கடுமையான உளைச்சல் தரப்படுவதாக அவரை திங்களன்று சந்தித்து வந்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார்.


தீர்ப்பு பற்றிய செய்திகள் வந்த நாள் முதல், நளினிக்கு கடும் நெருக்கடிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. நளினி அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியது சிறை நிர்வாகம். ஏறக்குறைய நளினி தனிமைச் சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார். நளினி அறையில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அறையில் இருந்த உப்பு ஊறுகாய் முதல், பிஸ்கட், பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. சிறை வார்டர்கள், நளினியை அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நளினி தெரிவித்துள்ளார். சிறை உணவைப் போன்ற கொடுமையான உணவு எங்கேயும் கிடையாது. அத்தகைய உணவை உட்கொள்ள சிறையாளிகள் எப்போதும் ஊறுகாயை நம்பித்தான் இருப்பார்கள். அந்த ஊறுகாயைக் கூட சிறை நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது, சிறை நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. நளினியுடன் உரையாடும் மற்ற கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவர் என்று அச்சுறுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சிறைத் துறையின் உயர் அதிகாரிகள் துணையோடுதான் நடக்கிறது என்று நளினி கூறுகிறார்.


இந்த அராஜகத்தைக் கண்டித்து, கடந்த வெள்ளி காலை முதல் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வழக்கறிஞர் புகழேந்தியிடம், சிறைக் கண்காணிப்பாளர், நளினியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால், நளினி தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்.


இச்செய்தி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, நளினி உண்ணாவிரதம் இருக்கவேயில்லை, புகழேந்தி வதந்தியைப் பரப்புகிறார் என்று கூறியுள்ளனர். சாரதா தாக்கப் பட்ட நேர்விலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, சாரதா மனநிலை பாதிக்கப் பட்டவர் என்ற அபாண்டமான பொய்யை வேலூர் சிறை நிர்வாகம் கூறியபோது, உயர்நீதிமன்றம் அதை திட்டவட்டமாக மறுத்ததை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.


நளினியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில், சிறை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தாலும், நளினி உறுதியுடன் இருப்பதாக புகழேந்தி கூறுகிறார். நளினி அவரிடம், “அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பினால் இப்படித்தான் நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். சாரதா விஷயத்தில் நாம் தலையிட்டது சரிதான் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க எனக்கு எவ்வித அச்சமும் இல்லை“ என்று கூறியுள்ளார்.


சிறையில் நடந்த ஒரு கொடூர தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததால் நளினிக்கு இத்தகைய கொடுமையைச் செய்யும் சிறை நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதிமன்றத்தால் சூடு பட்டும் வேலூர் சிறை நிர்வாகம் தன் போக்கை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாத்திரங்கள் பிணம் தின்னும் காட்சியே இது.


ஒப்பாரி

2 comments:

  1. மனிதாபிமானமற்ற இவர்கள் (வேலுர் சிறை துறையினர்) செயல் கண்டிக்க தக்கது. தெரிந்து இது ஒன்று. நமக்கு தெரியாமல் இன்னும் எங்கெங்கு என்ன என்ன நடக்கிறதோ.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் நண்பரே. நளினியை புகழேந்தி வழக்கறிஞர் சந்தித்ததனால் இக்கொடுமை பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. இது போன்ற பல கொடுமைகள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    ReplyDelete