Sunday, May 10, 2009

தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !


தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி !


எமெர்ஜென்சியில் பல நெருக்கடிகளை சந்தித்ததாக மார்தட்டிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையின் துணையோடு செயல்படுத்தி வரும் அராஜகங்களும் அநியாயங்களும் வரன்முறையற்று வளர்ந்து கொண்டே வருகிறன்றன. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், மாநில ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும், தன் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், வரண்முறையற்று ஊழலில் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனநாயக மாண்புகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் கருணாநிதியின் பதைபதைப்பை நன்கு வெளிப்படுத்துகிறது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக முத்துக்குமார் எழுச்சி இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி என்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கொளத்தூர் மணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகையில் காங்கிரசார் கல் வீசி எரிந்து கூட்டத்தில் கலகம் செய்திருக்கின்றனர். கலகம் செய்வதை கைது செய்வதற்கு பதிலாக போலீசார் வேட்பாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். உள்துறை அமைச்சர் பழநியப்பன் சிதம்பரம் தோல்வி பயத்தில் மிகக் கடுமையான தவறுகளை செய்து வருகிறார். இவ்வாறு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இரண்டாவது சம்பவம் பழ.நெடுமாறன் தலைமையில் சோனியாவின் தமிழக வருகையை ஒட்டி நடந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். முறையாக அனுமதி பெற்று பழ.நெடுமாறன் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, சுந்தர்ராஜன், ஓவியர்கள் ட்ராட்ஸ்கி மருது, வீர.சந்தானம், வழக்குரைஞர்கள் கருப்பன், புகழேந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட 120 பேர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை கைது செய்த காவல் துறை, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தது. வழக்கம் போல் மாலையில் விடுதலை செய்யப் படுவார்கள் என்ற எண்ணியிருந்த வேளையில் இரவு 9 மணி வரை அவர்கள் விடுவிக்கப் படாதது சந்தேகத்தை ஏற்படுத்த மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தலைமையில் வழக்கறிஞர்கள் குழு அங்கே சென்றது. 120 பேரை கைது செய்த காவல்துறை கைது செய்யப் பட்டவுடன் கைதானவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை காற்றில் பறக்க விட்டு அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க துடித்தது. கைது செய்யப் பட்டவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப் படவேண்டும் என்ற சட்டத்தை புறந்தள்ளி நீதிபதியை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தது காவல்துறை. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையரின் புகாரின் பேரில்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சாதாரண நடைமுறையும் மீறப்பட்டு ஆணையாளரின் புகார் இல்லாமலேயே வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவை அனைத்தும் நீதிபதி முன் இரவு 11 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை எடுத்துரைக்கப் பட்டது. அனைத்து வாதங்களையும் பொறுமையாக கேட்ட நீதிபதி (?) இடையில் சில தொலைபேசி அழைப்புகளை செய்து விட்டு இவர்கள் அனைவரையும் 15 நாட்களுக்கு புழல் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்று ஆணையிட்டார்.

காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய திருஞானம் என்ற துணை ஆணையரின் தலைமையில் இவ்வளவு அநியாயங்களும் நடந்தேறியது. நீதிபதிகளும், காவல் துறையினரும் பதவியேற்கையில் தாங்கள் அரசியலமைப்பின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று எடுத்த உறுதி மொழியை ஆட்சியாளர்களின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் இவர்கள் கருணாநிதியின் கைக்கூலிகளாகவும், அடிமைகளாகவும் செயல்படுவது ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்தாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முத்துவேல் கருணாநிதிக்கு விசுவாசமாய் செயல்படும் இந்த காவல் அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இதைவிட விசுவாசமாய் ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் காட்சியும் நடந்திருக்கிறது, இனியும் நடக்கத்தான் போகிறது.

சட்ட விரோதமான உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தால் இந்த காவல் துறை அதிகாரிகளை தூக்கிலா போடப்போகிறார்கள் ? அதிகபட்சம் பணியிட மாறுதல் வரும். எங்கே பணியிட மாறுதல் வந்தாலும், அந்த இடத்தில் துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு பணிபுரிய ஒரு அலுவலகமும், வண்டியும், ட்ரைவரும் கண்டிப்பாக வழங்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்பொழுது இருக்கும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் நியாய தர்மங்களை காற்றில் பறக்கவிட்டு அரசியல் சட்டத்திற்கும் இயற்கை நியதிக்கும் முரணாக சட்டவிரோதமான உத்தரவுகளை நிறைவேற்றி ஆட்சியாளர்களின் அடிவருடியாகும் இந்த காவல் துறை அதிகாரிகளை காலம் மன்னிக்காது.


" நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.. .. ..


-ஒப்பாரி-

No comments:

Post a Comment