Saturday, October 11, 2014

கருப்பர் நகரம்

மெட்றாஸ்.   இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி, பரவலான ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற படம் இது.  நடிகர் சிவக்குமாரின் மகன், கார்த்தி நடித்துள்ள படம்.  

சமூக வலைத்தளங்கள் பிரபலமானது முதற்கொண்டே, திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், சமூக வலைத்தளங்களின் மூலமாக தங்கள் திரைப்படங்களை பிரபலமாக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கின்றனர்.   ஏனென்றால், சன் டிவியின் தர வரிசை, ஆனந்த விகடனின் மதிப்பெண்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை, மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான், முகநூல் மற்றும் ட்விட்டரில் வரும் சில வரி விமர்சனங்களையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். இதனால், திரைப்படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களை வைத்திருப்பவர்களை அணுகி, தங்கள் திரைப்படத்தைப் பற்றி பாராட்டி எழுதுமாறு, கேட்டுக் கொள்கின்றனர்.  அதன் அடிப்படையில் சில சமூக வலைத்தள பிரபலங்களும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

மெட்றாஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெளியானது.   அந்த திரைப்படம் வெளியான அன்று காலை, இந்தியா டுடேவில் பணியாற்றும் செய்தியாளரும், கவிஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், திரைப்பட விமர்சகர், தலித் போராளி மற்றும் கைதேர்ந்த லாபியிஸ்ட் என்று பல்வேறு பரிமாணங்களை கொண்ட கவின் மலர் தனது முகநூல் பக்கத்தில் "அண்மையில் எந்தப் படத்துக்காகவும் இத்தனை காத்திருந்ததில்லை . பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ வெற்றிபெற வாழ்த்துகள்" என்று பதிவு செய்திருந்தார். 
அடுத்ததாக, "தமிழ் சினிமா வரலாற்றில் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சொல்வதென்றால், முதன்முதலாக ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் தலித்துகளே எழுதியுள்ள படம் ‘மெட்ராஸ்’ தான். இயக்குநர் ரஞ்சித்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. கானா பாலா, கு.உமா தேவி, கபிலன் என அனைவருமே தலித்துகள். அனைவருக்கும் வாழ்த்துகள்" என்றும் பதிவு செய்திருந்தார். 


நாடி, நரம்பு, ரத்தம், சதையெல்லாம் சாதி வெறியேறியிருக்கும் ஒருவரால்தான், பாடலாசிரியரின் சாதியைக் கேட்டு பாட்டை ரசிக்க முடியும்.  அப்படி ஒரு வெறி பிடித்தவர்தான் இந்த கவின்மலர்.   

பார்ப்பன சாதி வெறி, தேவர் சாதி வெறி, வன்னியர் சாதி வெறி, கவுண்டர் சாதி வெறி எப்படி கண்டிக்கத்தக்கதோ, அதே போல கண்டிக்கத்தக்கதுதான் தலித் சாதி வெறி.  மனிதர்களை மனிதர்களாக பார்க்கத் தெரியாமல், சாதி வெறி கண்ணாடி அணிந்து பார்ப்பவர்கள், ஆதிக்க சாதியில் மட்டுமல்ல, அடிமை சாதியிலும் இருக்கிறார்கள் என்பதற்கு, சிறந்த உதாரணம், கவின்மலர்.  

லாபியிஸ்ட் கவின்மலர்
இந்த கவின்மலருக்கு, முகநூலில் 40 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஊடகம், நீதித்துறை, போன்ற எல்லா பிரிவுகளிலும் உள்ள சீரழிவு, சமூக ஊடகங்களையும் பீடித்துள்ளது என்பதற்கு, கவின்மலர் போன்ற நபர்கள் சான்று. தங்களின் பிரபலத்தை காசாக்கும் கலையை நன்றாக கற்றறிந்துள்ளார்கள். இப்படி இந்தப் படத்தை வெளிப்படையாக, அப்பட்டமாக பாராட்டி விட்டு, அவர் பணியாற்றும் இந்தியா டுடே பத்திரிக்கையில், இப்படத்தின் விமர்சனத்தையும் கவின் மலரே எழுதுகிறார். இணைப்பு  இந்த மாதிரி நபர்களை, இந்தியா டுடே ஊடகம் எப்படி வேலைக்கு வைத்திருக்கிறது என்பதுதான் புரியாத புதிர். 

இந்த மெட்றாஸ் திரைப்படம் "ஒரு கருத்தாழமிக்க கலைப்படைப்பு" என்று கூறி, 11 அக்டோபர், சனிக்கிழமை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது, லாபியிஸ்ட் கவின்மலரின் அமைப்பான, மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் சங்கம்.   லாட்டரி அடித்துக் கொண்டிருந்த அமைப்பு இப்படியொரு விழாவை நடத்த எங்கிருந்து நிதி வந்தது ?  இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பணத்திலா என்றெல்லாம் அதிகப்பிரசங்கித் தனமாக கேள்வி கேட்கக் கூடாது. சரி..... மெட்றாஸ் ஒரு கருத்தாழமிக்க கலைப்படைப்பா ?  பார்ப்போம். 
வள்ளியூர் பாலு என்பவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் நடன வகுப்புகளை நடத்தி வருகிறார்.  திரைப்படத் துறையோடு நெருங்கிய உறவு கொண்டவர். இவரிடம் வளரும் இயக்குநர்கள் பலர் கதை சொல்ல வருவார்கள்.  அப்படி கதை சொல்ல வந்தவர்தான் நட்ராஜ் கோபி. 

வடசென்னை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு, ஒரு கதை இருக்கிறது என்று கூறுகிறார்.   வடசென்னையைச் சேர்ந்த ஒருவன் சிறந்த கால்ப்பந்தாட்ட வீரனாக இருக்கிறான்.  வறுமையின் காரணமாக அவன் திறமை மறுக்கப்பட்டு, எப்படி சீரழிக்கப்படுகிறான் என்பதுதான் ஒன் லைன். படத்தின் தலைப்பு குதிரை என்று வைத்திருக்கிறார் நட்ராஜ். 

வள்ளியூர் பாலுவுக்கு கதை பிடித்துப் போனதும், விவாதம் தொடங்குகிறது. புதுமுகங்களை வைத்து இயக்கலாம் என்று நட்ராஜ் சொன்னதும், வேண்டாம் நட்சத்திரங்களையே வைத்து எடுக்கலாம் என்று, பாலு சொல்கிறார்.  வடசென்னை மக்களின் வாழ்வு கதை என்பதால், படத்தின் தலைப்பை கருப்பர் நகரம் என்று மாற்றுகிறார்கள். 

வள்ளியூர் பாலு

படத்தின் கதாநாயகனாக அகிலும், கதாநாயகியாக அருந்ததியும் என்று முடிவு செய்யப்படுகிறது.   முக்கிய வேடத்தில் ஆனந்த் பாபு நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளராக தேவா நியமிக்கப்படுகிறார்.  பாடல் பதிவுகள் அனைத்தும் முடிந்து நவம்பர் 2010ல் விஜிபி கோல்டன் பீச்சில் முதல் நாள் ஷுட்டிங் தொடங்குகிறது. கருப்பர் நகரம் என்ற தலைப்பை சிம்பாலிக்காக காட்டுவதற்காக, ஆப்பிரிக்கர்களை வைத்து அந்தப் பாடல் படமாக்கப்படுகிறது. அதன் பின், பட்டினப்பாக்கம், மைலாப்பூர் லஸ் குடியிருப்பு ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது.  

அடுத்த கட்ட படபிடிப்பு ஓட்டேரியில் நடைபெற்று வருகிறது.  அந்த நேரத்தில் தினமலர் நாளேடு ஒரு செய்தி வெளியிடுகிறது.  கருப்பர் நகரம் படபிடிப்பு ஓட்டேரி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு கடும் இடையூறு என்று அரைப் பக்கத்துக்கு செய்தி வெளியிடுகிறது.  இந்த செய்தியைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் நெருக்கடியால் படபிடிப்பு தடைபடுகிறது. 
இதையடுத்து, படபிடிப்பு தாமதமானதும், அகில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் நகர்புரம் மற்றும் நந்தி ஆகிய படங்களில் பிசியாகி விடுகிறார்.  அடுத்த கட்டப் படபிடிப்பை தொடங்கலாம் என்று முடிவெடுத்தபோது, அகிலின் கால்ஷீட் கிடைக்கவில்லை.   மீண்டும் மீண்டும் அழைத்தும் அகில் வரவில்லை.  ஒரு கட்டத்தில் எரிச்சலான தயாரிப்பாளர் பாலு, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் அகிலிடம் நடித்துத் தந்தே ஆகவேண்டும் என்றும், தேதிகளை சரி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.   

இந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் இயக்குநர் ரஞ்சித் அட்டக்கத்தி படத்தை தொடங்குகிறார்.   அந்த அட்டக்கத்தி படம், திருவள்ளுர் மாவட்டத்தில் தலித்துகள் பகுதியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.  கருப்பர் நகரத்தின் படபிடிப்பு மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக, அட்டக் கத்தி படம் ரிலீஸ் ஆகிறது.  

மெட்றாஸ் இயக்குநர் ரஞ்சித்
அட்டக்கத்தி படத்தைப் பார்த்த, கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் கோபி, கருப்பு நகரம் படத்தின் காட்சிகளில் இருந்து ஐந்து காட்சிகள் அப்படியே அட்டக்கத்தி படத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் பாலுவிடம் தெரிவிக்கிறார்.  அதிர்ச்சி அடைந்த பாலு, எப்படி என்று விசாரிக்கவும், ரஞ்சித், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக, தன்னுடைய கதை விவாதங்களில் பங்கெடுத்ததாகவும், கருப்பு நகரம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ரஞ்சித்துக்கு அத்துப்படி என்றும் கூறுகிறார்.  

சரி.  ரஞ்சித் காப்பியடித்த அந்த ஐந்து காட்சிகளையும் மாற்றியமைத்து விட்டு, ஷுட்டிங் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது.  இந்நிலையில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் மெட்றாஸ் ஷுட்டிங் நடக்கிறது.  இந்த சத்தியமூர்த்தி நகர் மாநகராட்சி விளையாட்டுத் திடலில்தான் கதாநாயகன் கால்பந்து விளையாடுவதாக கருப்பர் நகரத்தில் காட்சி அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடந்தது.  அந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்டு, கருப்பர் நகரம் படத்தில் நடித்த சார்லஸ் என்பவர், மெட்றாஸ் படத்தின் படபிடிப்பை பார்க்க நேர்கிறது. அவர் நேரடியாக இயக்குநர் ரஞ்சித்திடம் சண்டைக்குப் போகிறார்.  இப்படி இன்னொருவர் படத்தை காப்பியடித்து எடுப்பதற்கு போயி பிச்சையெடுக்கலாமே என்ற தொனியில் கடுமையாக பேசுகிறார். 

இந்த சண்டையைத் தொடர்ந்து, மெட்றாஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித், கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் நட்ராஜ் கோபியை அழைக்கிறார்.  நட்ராஜிடம், ரஞ்சித், தன்னுடைய படம் வேறு படம் என்றும், நாம் இருவரும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நாம் சண்டையிடுவது, ஆதிக்க சாதியினருக்குத்தான் நலமாகப் போய் முடியும் என்று கூறுகிறார்.  இதையடுத்து, நட்ராஜ், இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடுகிறார். 

இயக்குநர் நட்ராஜ் கோபி, இத்தனை விஷயங்கள் நடந்தும், இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் பாலுவுக்கு தெரிவிக்கவே இல்லை.   இது இப்படியே இருக்கும் சமயத்தில்தான், மெட்றாஸ் படத்தின் ட்ரைலர் மற்றும், கார்த்தியின் பேட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.  படத்தின் ட்ரைலரைப் பார்த்த தயாரிப்பாளர் பாலு அதிர்ந்து போகிறார்.   நம் படத்தின் காட்சியமைப்புகள் அப்படியே இருக்கிறதே என்று, உடனடியாக தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தெரிவிக்கிறார்.   இந்த புகார் தெரிவிக்கப்பட்ட நாள் 19 ஜுலை 2014.  இந்தப் புகார் தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அளிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் கவுன்சிலின் செயலர் யார் தெரியுமா ?  மெட்றாஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான்.   ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கையில், எப்படி இந்தப் புகாரின் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் ?   .

இந்நிலையில் மெட்றாஸ் படத்தின் வெளியீடு தேதி 26 செப்டம்பர் என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.  இந்த வழக்கு நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. மெட்றாஸ் படத்தின் கதை, கருப்பர் நகரம் படத்தின் அப்பட்டமான காப்பி. அந்தப்படத்தை வெளியிட்டால், எனது படத்துக்கு நான் செய்த முதலீடு அப்படியே பாழாய்ப் போகும்.  ஆகையால், இப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள் என்று வழக்கு தொடுக்கிறார் பாலு. 

தமிழ்வாணன், மெட்றாஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குநர் ரஞ்சித்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுகிறார். 22 செப்டம்பர் 2014 அன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உத்தரவிடுகிறார் நீதிபதி தமிழ்வாணன். இதையடுத்து, தயாரிப்பாளர் பாலுவுக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.  

"நான் வன்னி அரசு பேசறேன்.   கொஞ்சம் ஹோட்டல் லீ மெரிடீயனுக்கு வாங்க.  உங்க படம் பத்தி பேசணும்" என்று கூறப்படுகிறது.  தயாரிப்பாளர் பாலு, உடனே கிளம்பி, லீ மெரிடியனுக்கு செல்கிறார்.  அங்கே, வன்ன அரசு,  தொல் திருமாவளவனின் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் ஆகியோருடன் மற்றொருவர் அமர்ந்திருக்கிறார்.  


மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்
பாலுவிடம் அந்த மற்றொருவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  நான்தான் ரஞ்சித். மெட்றாஸ் படத்தின் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அப்போதுதான் தயாரிப்பாளர் பாலு, முதன் முதலாக, இயக்குநர் ரஞ்சித்தை சந்திக்கிறார். இரு தரப்பும் தங்கள் பக்க நியாயத்தை எடுத்து வைக்கின்றனர்.  

இறுதியாக தயாரிப்பாளர் பாலு, நான் இது வரை எடுத்த படத்தையும், மெட்றாஸ் படத்தையும், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழு பார்க்கட்டும். அந்த ப்ரிவியூவுக்கு ஆகும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   சம்மதமா என்று கேட்கிறார். ஆனால், மெட்றாஸ் இயக்குநர் ரஞ்சித், இதற்கு மறுக்கிறார்.   

இறுதியாக, ரஞ்சித், நேரடியாகவே, கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளர் பாலுவிடம், கெஞ்சுகிறார்.   இந்த ஒரு முறை பிரச்சினை பண்ணாமல் விட்டு விடுங்கள்.   உங்களுக்கான நான் பிறகு ஏதாவது செய்கிறேன் என்கிறார்.  வன்னி அரசுவோ, அவர் பங்குக்கு, ஒடுக்கபட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவர் வளருகிறார்.  அவரை வளர விடுங்கள் என்று கூறுகிறார். தயாரிப்பாளரோ, நான் செலவு செய்த, இரண்டரை கோடிக்கு பதில் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.   இறுதியில் எந்த முடிவும் எட்டப்படாமல் அந்த சந்திப்பு நிறைவடைகிறது. 

அதன் பிறகு, வன்னி அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மூன்றாவது நாள், வன்னி அரசிடமிருந்து திடீரென்று போன். உடனடியாக கிளம்பி தி நகரில் உள்ள பெதில்டா ஹோட்டலுக்கு வர வேண்டும் என்றும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரை சந்திக்க விரும்புவதாகவும் அவசரமாக வருமாறும் கூறுகிறார்.  பாலுவும் உடனடியாக கிளம்புகிறார்.   பாலு பாதி வழியில் வருகையில், வன்னி அரசு மீண்டும் அழைக்கிறார்.  நீங்கள் இங்கே வந்து, ஞானவேல்ராஜாவிடம் எதுவும் பேசக்கூடாது.   அமைதியாக இருக்க வேண்டும்.  வந்து அவரிடம் கை கொடுத்து விட்டு சென்று விட வேண்டும் என்று கூறுகிறார்.   மேலும் நீங்கள் தனியாகத்தான் வர வேண்டும், வேறு யாரும் வரக்கூடாது என்றும் கூறுகிறார்.  பாலு, என் பணத்துக்கு பதில் சொல்லுங்கள்.  நான் ஏன் ஞானவேல் ராஜாவிடம் கை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அந்த சந்திப்பு நடைபெறாமலேயே நின்று விடுகிறது. 

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா
என்ன நடந்திருக்கிறது என்றால், ஞானவேல் ராஜாவிடம் பொறுக்கித் தின்ற வன்னி அரசு, "அண்ணே பாலு நம்ப பயண்ணே.... நான் சொன்னா அதைமீறி ஒரு பேச்சு பேச மாட்டாண்ணே... நீங்க வேணும்னா பாருங்க. இப்போ உடனே வரச்சொல்றேன்..... உங்க கிட்ட ஒரு வார்த்தை பேசாம கையை குலுக்கிட்டு போவான் பாருங்களேன்" என்று பில்டப் கொடுத்துள்ளார்.  அந்த அடிப்படையில்தான், பாலுவை ஞானவேல் ராஜாவை பார்க்க வரச்சொன்னது. 

வன்னி அரசு

இதன் பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் ரிலீசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தமிழ்வாணன் சரி.. இந்த வழக்குக்கு ஏதாவது ஒரு தீர்வைச் சொல்லுங்கள் என்று கூறுகிறார். தயாரிப்பாளர் பாலு தரப்பு, இது வரை, கருப்பர் நகரம் படத்துக்கு செலவு செய்துள்ள மூன்று கோடியை, நீதிமன்றத்தில் கட்டுமாறு கேட்கிறார். ஞானவேல் ராஜா தரப்பு மறுக்கவும், சரி.... படம் ரிலீஸ் ஆகட்டும்.  ரிலீஸ் ஆனதும், படத்தின் வசூல் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டு, மெட்றாஸ் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்று உத்தரவிடுகிறார்.  

நீதிபதி தமிழ்வாணன் அழைத்தார் என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தின் பெண் ஊழியர்கள் அவர் அறைக்கு செல்லவே அஞ்சுவார்கள்.   அதுவும் மாலை வேளை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்று செல்லவே மாட்டார்கள்.   தமிழ்வாணன் பொறுப்பாக இருக்கும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மாவட்ட நீதிபதி, தமிழ்வாணனை பார்க்க வருகிறார்.  மரியாதைக்காக, தமிழ்வாணனுக்கு ஆப்பிள் பழங்களை வாங்கி வருகிறார்.  அந்த ஆப்பிள் பழங்களை வாங்கும்போது தமிழ்வாணன், அந்த நீதிபதியின் கையைப் பிடித்து, உன் கைகளே ஆப்பிள் போல இருக்கிறதே என்று ஈஈஈஈஈ என்று இளிக்கிறார்.  அந்த பெண் நீதிபதி நெளிந்ததும், தமிழ்வாணன் பயப்படாதீர்கள்.  அமருங்கள் என்றுகூறி, அப்படியே அந்தப் பெண்ணின் முதுகை தடவிக் கொடுக்கிறார்.  அலறி அடித்தபடி அந்த பெண் நீதிபதி வெளியேறி, தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கிறார்.   தலைமை நீதிபதி புகாரை விசாரிக்கிறார் என்று தெரிந்ததும், தமிழ்வாணன், ஒரு தலித்துக்கு எதிராக ஆதிக்க சாதியினர் சதிச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்று புதிய பீதியைக் கிளப்பினார்.  பின்னாளில், அந்தப் பெண் நீதிபதி, தன் புகாரை வாபஸ் பெற்றார் என்பது வேதனையான உண்மை.   பெண் நீதிபதியை இப்படி நடத்திய தமிழ்வாணன், ஆண் நீதிபதிகளை பேசும் பேச்சு இருக்கிறதே.....   துளி கூட மரியாதை இல்லாமல், அவனே இவனே என்ற ரீதியில் பேசுவார்.   என்ன செய்வது... இவரும் தகத்தகாய தலித்தாயிற்றே....  இவரை என்ன செய்ய முடியும் ?


கோட் போட்டிருப்பவர்தான் தகத்தகாய தலித் தமிழ்வாணன்

இது தொடர்பாக மெட்றாஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித்திடம் பேசினோம். உங்கள் மெட்றாஸ் படத்தின் கதை, காப்பியடித்தது என்று கூறப்படுகிறதே என்றதும், யார் சொன்னது அப்படி என்றார்.  தயாரிப்பாளரிடம் பேசினோம் என்றதும், யார் அந்த தயாரிப்பாளர் என்றார்.  பாலு மற்றும் இயக்குநர் கோபியிடம் பேசினோம் என்றதும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ளட்டும் என்றார்.  உங்கள் கருத்தாக இதை பதிவு செய்து கொள்ளலாமா என்றதும், என்ன சண்டை போடுவது போல பேசுகிறீர்கள் என்றார்.  சார்.... சண்டை கிடையாது.  அவர்கள் தரப்பில் பேசி விட்டோம். உங்கள் தரப்பு நியாயம் என்ன என்பதைக் கூறுங்கள் என்றதும், அவர்களுடையது வேறு கதை.  எங்களுடையது வேறு கதை.  அது ஃபுட்பால் பற்றிய கதை.  எங்களுடையது லைப் பற்றிய கதை என்றார். நீதிமன்றத்தில் எங்களுடைய ஒன் லைனும் அவர்களுடைய ஒன் லைனும் அளிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார். 

சரி. நீங்கள் லீ மெரிடீயன் ஹோட்டலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசு முன்னிலையில் தயாரிப்பாளர் பாலுவோடு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்று கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைந்தார்.  இதை யார் உங்களுக்கு சொன்னது என்றார்.  சார்... நாங்கள் இது தொடர்பான அனைவருடனும் பேசியிருக்கிறோம் என்று சொன்னேன். சந்திப்பு குறித்து பேசுங்கள் என்று கூறியதும், தயாரிப்பாளர் பாலுதான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றும், அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கட்டிங் எதிர்ப்பார்த்து அந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்றும், தர முடியாது என்று பிடிவாதமாக மறுத்த காரணத்தால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்றும் கூறினார். மெட்றாஸ் படத்தின் கதாநாயகன் கார்த்தி ஏன் கால்பந்து விளையாடும் வீரனாக காட்டப்படுகிறார், ஒரு சண்டைக்காட்சியில் கூட கால்பந்து விளையாடுவதைப் போலவே சண்டையிடுகிறார், கால்பந்து மைதானத்திலேயே பல காட்சிகள் அமைக்கப்பட்டது ஏன் என்பது போன்ற விபரங்களை ரஞ்சித் கூறவில்லை. 

இறுதியாக, சம்பந்தமே இல்லாமல் நீங்கள் இந்த விஷயத்தை எதற்காக நோண்டுகிறீர்கள்.   இதைப் பற்றி எழுதி உங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்றார்.  சார் அவர் உங்கள் மீது ஒரு புகார் தெரிவிக்கிறார்.  நீங்கள் அதை மறுக்கிறீர்கள்.  இதை பதிவு செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றதும், எழுதிட்டுப் போங்க என்று இணைப்பை துண்டித்தார். 

இப்படத்தின் இயக்குநர் கோபியை தொடர்பு கொள்ள முனைந்தபோது, அவர் கத்தி படத்தின் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சங்கரசுப்புவோடு விவாதத்தில் உள்ளதாக தெரிவித்தார்.  அதன் பிறகு பல முறை தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும், அவர் இணைப்புக்கு வரவில்லை. கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இணைப்பு.  இந்த வழக்கு தொடர்பாக, டீல் முடிந்து விட்டதாகவும், ஒரு கணிசமான தொகை கைமாறியதை அடுத்து, வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தெரிகிறது.  சங்கரசுப்பு  வழக்கறிஞராக இருந்தால், அது டீலில்தான் முடியும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசின் தலையீடு மற்றும் மெட்றாஸ் படத்தை தூக்கிப் பிடித்து, அதை உலக காவிய ரேஞ்சுக்கு விளம்பரப்படுத்தும் கவின்மலர் மற்றும் நீதிபதி தமிழ்வாணன் ஆகியோரின் செயல்பாடுகள். 

தலித் போராளி என்றும், தலித்துக்களுக்காக உயிரையே கொடுப்பேன் என்றும் கூறிக்கொண்டு, சொகுசுக் காரில் பவனி வரும் வன்னி அரசு, ஞானவேல்ராஜா என்ற கவுண்டரிடம் பணம் வாங்கிக் கொண்டு, தயாரிப்பாளர் பாலு மற்றும், இயக்குநர் கோபி ஆகிய தலித்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.  ஒரு தலித் வளரட்டும் என்று ரஞ்சித்துக்கு ஆதரவாக செயல்பட்டால், மூன்று கோடியை செலவு செய்து விட்டு தெருவில் நிற்கும் பாலுவும் தலித்தானே... ?  இந்த தலித் தயாரிப்பாளரின் நலனை விட, கொழுத்த பணம் படைத்த ஞானவேல் ராஜா கவுண்டரின் நலன்தானே வன்னி அரசுக்கு பெரிதாகத் தெரிகிறது ?

தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி, மற்றவர் உழைப்பை சுரண்டி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உலக காவியம் எனும் அளவுக்கு புகழ்ந்து, அந்த திரைப்படத்துக்கு ஆதரவாக தான் பணியாற்றும் இந்தியா டுடே பத்திரிக்கையில் திரை விமர்சனம் எழுதி, அந்தப் படத்தின் இயக்குநர் ரஞ்சத்துக்கு பாராட்டு விழாவும் எடுக்கும் கவின் மலர் போன்றவர்களே, தலித்துகளின் நலனுக்கு விரோதமானவர்கள்.   இதே கவின்மலர்தான், காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள், ஒரு பெண்ணை குழுவாக வன்புணர்ச்சி செய்தபோது, இந்தியா டுடேவில் எழுதிய கட்டுரையில், விடுதலைச் சிறுத்தை பிரமுகர்களை கடுமையாக கண்டிக்காமல், மயிலிறகால் வருடிக் கொடுத்தார். 

திருமாவளவன் மீது, கவிதா என்ற பெண், காதலித்து ஏமாற்றி விட்டார் என்று புகார் தெரிவித்தபோது, இதே கவின்மலர் ஏற்பாட்டில்தான், வன்னி அரசு அந்தப் பெண்ணோடு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.   

நீதிபதி தமிழ்வாணன் இந்த விவகாரத்தில் பணம் வாங்கிக் கொண்டுதான் தீர்ப்பளித்தார் என்று குற்றம் சுமத்த நம்மிடம் ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், ஒரு திரைப்படத்தின் கதை காப்பியடித்தது என்று புகார் எழுகையில், நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யச் சொல்லாமல், கல்லாவில் எவ்வளவு சேர்ந்தது என்பதை, நான்கு வாரங்கள் கழித்து தெரிவியுங்கள் என்பது எந்த வகையான தீர்ப்பு என்பது தமிழ்வாணனுக்கே வெளிச்சம். 

தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் தலித்துகள் இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிகளை விட, தலித்துகளின் பெயரைச் சொல்லி, அவர்களை சுரண்டி வாழும், இந்தப் புல்லுருவிகளே, தலித்துகளுக்கு மிகப்பெரிய எதிரிகள். 

கருப்பர் நகரம் படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் தரப்படுகின்றன.   இதையும், மெட்றாஸ் படத்தையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். 
கருப்பர் நகரம் இயக்குநர் நட்ராஜ் கோபி

கருப்பர் நகரம் படத்தின் சுவர் காட்சி

1 comment:

  1. Erakanavey "Viduthali Siruththaikal" katchiya "KATTAPANCHAYATHU KATCHI"nu thaan solluran.. ithu verya...vilangidum

    ReplyDelete