Tuesday, March 2, 2010

அவர் பெயர் ஞானப்பிரகாசம்


இந்த ஞானப்பிரகாசம் போன்ற நபர்களை நம்மில் பல பேர் சட்டை செய்திருக்க மாட்டோம், இந்த ஞானப்பிரகாசம் கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரில்லை. தமிழாய்ந்த அறிஞர் இல்லை. பல கோடிகளுக்கு அதிபதியும் இல்லை. யார் இந்த ஞானப்பிரகாசம் ?

அது தொண்ணூறுகளின் தொடக்கம். அப்போது வேலைக்குச் சேர்ந்த புதிது. இளம் வயது. அப்போது நண்பருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால் மாலை ஆனவுடன், மனைவிக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையெல்லாம் இல்லாத இன்பமான காலம் அது. மவுண்ட் ரோடிலேயே அலுவலகம் அமைந்து விட்டதால், மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஊரைச் சுற்றுவதுதான் வேலை.

ஜெமினி மேம்பாலம் அருகே அலுவலகம் இருந்தது. சத்யம் தியேட்டர் இப்பொழுது போல் மேல்தட்டு பணக்காரக் களையை கொண்டிருக்கவில்லை. டிக்கெட்டின் அதிகபட்ச விலை 30 ரூபாய். சத்யம், சாந்தம், சுபம் என்ற மூன்றே தியேட்டர்கள் தான். சத்யம் மற்றும் சாந்தம் தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.

தமிழ்ப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்ற விதியினால், சுபம் தியேட்டரில் மட்டும் தமிழ்ப்படம் ஓடும். “சினிமான்னா அது இங்கிலீஷ் படம்தான்“ என்ற கருத்து கொண்டிருந்த காலம். மாலை அலுவலகம் முடிந்ததும், சத்யம் தியேட்டரில் என்ன ஆங்கிலப்படம் திரையிடப்பட்டாலும் தவறாமல் பார்க்கும் வழக்கம். வசனங்கள் சுத்தமாக புரியாது. இருந்தாலும், உத்தேசமாக ஒரு திரைக்கதையை மனதினுள் கற்பனை செய்து கொண்டு, இதுதான் கதை என்று கற்பனை செய்து கொண்டு என்ன படம் போட்டாலும் பார்க்கும் காலம்.

தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களுக்கு படம் மாற்றா விட்டால், அடுத்து, அலங்கார், தேவி, மெலடி என்று தியேட்டர், தியேட்டராக சுற்றுவதுதான் தலையாய பணி. எல்லாப் படத்தையும் பார்த்து முடித்து விட்டால், ஜெமினி மேம்பாலத்தில் தொடங்கி, க்ரீம்ஸ் ரோடு பஸ் நிறுத்தத்தின் அருகில் இருக்கும் கடையில் வேர்க்கடலை வாங்கிக் கொண்டு கொரித்தபடி சாந்தி தியேட்டர் வரை, நடந்து சென்று, மீண்டும் ஜெமினி திரும்புவதுதான் பொழுது போக்கு.


இப்படி ஒரு சாயங்கால வேளையில்தான் ஞானப்பிரகாசத்தை சந்தித்தேன். ஞானப்பிரகாசம் ஸ்பென்சர் பிளாசா அருகில் கடை வைத்திருப்பவர். ஸ்பென்சர் ப்ளாசா அருகில் என்றதும், ஸ்பென்சர் ப்ளாசாவிற்குள் என்று நினைத்து விடாதீர். ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், நடை பாதையில் பெல்ட் விற்கும் கடை வைத்திருக்கிறார். என் நினைவு சரியாக இருந்தால், 1992 பிப்ரவரியில்தான் அவரைச் சந்தித்தேன்.ஞானப்பிரகாசம்


நானும் என் நண்பரும் வழக்கம் போல, வேர்க்கடலை கொரித்தபடி, நடந்து வந்து கொண்டிருந்தபோது, அன்று பெல்ட் வாங்க வேண்டும் என்றார் நண்பர். நாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு, சினிமா பார்த்தது போக, பெரிய கடைகளிலெல்லாம் சென்று பெல்ட் வாங்க முடியாது. மேலும், பெரிய கடைகளில் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணம் வேறு. அதனால், ஒவ்வொரு ப்ளாட்பார கடையாக பார்த்துக் கொண்டே வந்தோம்.


ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், ஞானப்பிரகாசத்தின் கடைக்கு வந்தபொழுது, நல்ல தரமான லெதர் பெல்ட் இருந்ததைப் பார்த்தோம். அப்போது ஒரு பெல்ட், 60 ரூபாய் சொன்னார். முடியவே முடியாது என்று பேரம் பேசி, 50 ரூபாய்க்கு வாங்கினோம். அதற்குப் பிறகு, அவருடனான எங்கள் நட்பு, எங்களுக்குத் தெரிந்த, பெல்ட் வேண்டும் என்று கூறும் அனைத்து நண்பர்களையும், அவரின் வாடிக்கையாளர்களாக்குவதில் சென்று முடிந்தது.

ஞானப்பிரகாசத்தின் பெல்ட்டுகள், தரமானவையாக இருப்பதால், குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது வரும். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் கடைக்குச் சென்றாலும், தினமும், நூற்றுக்கணக்கான பேர்களைச் சந்திக்கும் அந்த நபர், நிறைந்த திருமுகத்தோடு, “சார் எப்படி இருக்கீங்க ? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா ? “ என்று அன்பொழுகக் கேட்பார். பகட்டாகப் பேசி, பகட்டாகப் பழகி, போலி முகமூடிகளைப் போட்டு வாழப் பழகிய மனதுக்கு, அவரின் வெள்ளந்தியான அன்பு, வியப்பையும், உணர்ச்சி ஊற்றையும் ஒரு சேர ஏற்படுத்தும்.


அதன் பிறகு, ஓரளவு விபரம் தெரிந்தபின், அவர் கடைக்குச் செல்லும்போதெல்லாம், பெல்ட் வாங்குகையில் அவர் சொல்வதுதான் விலை. மனதினுள், இந்த ஆள் கொஞ்சம் கூட விலை சொல்லக் கூடாதா என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், அவர், “என்னா சார் ? உங்களுக்கு என்னா வெல சொல்றது ? குடுக்கறத குடு சார்“ என்று இயல்பாகக் கூறுவார்.


இப்படி ஒரு நாள், அவர் கடைக்கு பெல்ட் வாங்கச் செல்லுகையில், திடீரென்று ஒரு மதிப்பெண் சான்றிதழின் நகலை எடுத்து நீட்டினார். அது ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ். அந்த மதிப்பெண்ணைப் பார்த்தால், 1200க்கு 1019 இருந்தது. “யாருங்க இது ? “ என்று கேட்டதற்கு, “ என் தம்பி பையன் சார். இவன நான்தான் சார் வளக்குறேன். நல்லா படிப்பான் சார். இவனுக்கு நல்ல காலேஜுல சீட் வாங்கனும் சார்“ என்றார். என் மனதில் தோன்றியபடி, இந்த மார்க்குக்கு, எந்த காலேஜுலையும் சீட் கிடைக்கும் கவலைப் படாதீங்க என்று கூறினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து அவரைச் சந்தித்தபோது, லயோலா கல்லூரியில் தன் தம்பி மகன் ரொனால்ட் ஆன்ட்ரூஸுக்கு பிகாம் சீட் கிடைத்தது என்பதை கண்களில் பெருமை வழியச் சொன்ன போது, அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ந்தேன். பணம் உதவி ஏதாவது வேணுமா என்று கேட்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை, என்னுடைய சகாவாக இவரைக் கருத வேண்டும் என்ற எண்ணத்தால் அடக்கி விட்டு, ஸ்காலர்ஷிப்புக்கு ட்ரை பண்ணுங்க என்று கூறினேன்.

அவர் “சார், அங்க ஒரு ஃபாதர் இருக்குறார் சார். இவன் படிப்ப நான் பாத்துக்கறேன்னு சொன்னார் சார்“ என்று கூறியபோது, என்னையறியாமல், என் மனது நிம்மதி அடைந்ததை உணர்ந்தேன்.


இரண்டு ஆண்டுகளுக்க முன், பல வேலைகள் இருந்தாலும், கட்டாயம் இதைச் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில், என் திருமணத்திற்கு, அழைப்பிதழ் வைத்தேன். “கண்டிப்பா வரேன் சார். உன் கல்யாணத்துக்கு வராம அத்த விட எனக்கு இன்னா வேலை சார்“ என்றார் ஞானப்பிரகாசம். திருமண வேலைகளில், ஞானப்பிரகாசம் என் நினைவு அடுக்களில் இருந்து தொலைந்து போனார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பணக்காரர்களும், உயர் அதிகாரிகளும் வந்து போன போதும், ஞானப்பிரகாசம் நினைவுக்கு வரவில்லை.

வரவேற்பு முடியும் தருவாயில், அவரிடம் இருப்பதிலேயே, சிறந்து உடை என்று அவர் கருதிய கசங்கிய உடையை அணிந்தபடி, தயங்கித் தயங்கி மேடையேறினார் ஞானப்பிரகாசம். என் அருகே வந்து, ஒரு பார்சலை அளித்தார். திருமண வரவேற்புக்கு எவர் வந்திருந்தபோதும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவரை நெகிழ்ச்சியோடு பார்த்து, “வாங்க, போட்டோ எடுக்கலாம் “ என்று கூறினேன். வெட்கத்தோடு “வேண்டாம் சார்“ என்றார். “வந்து நில்லுங்க“ என்று கண்டிப்பாகக் கூறி, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

திருமண மேடையில் இருந்து இறங்கிச் சென்று, அவரை சாப்பிட அமர வைக்க வேண்டும் என்ற ஆவல், யதார்த்தத்தின் கட்டாயத்தால் இயலாமல் போனது.


திருமண பரபரப்புகள் முடிந்ததும், பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கத் துவங்கிய போது, முதலில் பிரித்தது ஞானப்பிரகாசத்தின் பார்சலைத் தான். அந்த பார்சலுள், ஒரு லெதர் பெல்ட், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால், ஒரு பெண்களுக்கான பர்ஸ், எனக்கு ஒரு பர்ஸ் இருந்தது. என் மனது நெகிழ்ந்தது. ஒரு வியாபாரி, அவன் கஸ்டமர் என்பதைத் தாண்டி, எங்களுக்கள் ஒரு ஆழ்ந்த நட்பு இருந்ததை நான் எப்போதோ உணரத் தொடங்கினாலும், அந்நட்பு மேலும் இறுக்கமானதை உணர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, திருமணம் கசந்து போனாலும், ஞானப்பிரகாசத்தின் அன்பளிப்பு இனிமையாகவே இருக்கிறது.


அந்த ஞானப்பிரகாசத்தின் வரலாற்றில் தென்றல் தீண்டவேயில்லை. அவர் வாழ்க்கை தொடங்கியது முதல், வறுமை, வறுமை, வறுமை. ஆனாலும், உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற பிடிவாதம், தன் தொழிலின் மீது உள்ள பக்தி, அனைவரின் மீதும் காட்டும் வெள்ளந்தியான அன்பு, இவைதான் மனிதத்தின் சிகரம்.


சென்னை, சிந்தாதிரிப்பேட்டைதான் ஞானப்பிரகாசத்தின் பூர்வீகம். ஒரு அக்கா, ஒரு தம்பி. கூட்டுக் குடும்பம். இவர் தந்தை, பாம்புத் தோலில், பர்ஸ், பெல்ட்டுகள் செய்து விற்பனை செய்துவர். வனவிலங்குச் சட்டம் கடுமையானவுடன், இந்த லெதர் தொழிலில் இறங்கினர். எஸ்எஸ்எல்சி தேர்வில், பெயிலானவுடன், தன் குடும்பத் தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்த ஞானப்பிரகாசம், இதே மவுண்ட் ரோடில், தனது 17வது வயதில், இப்போது இருக்கும் இதே ஸ்பென்சர் ப்ளாசா அருகில் கடையைத் தொடங்கினார்.


ஞானப்பிரகாசத்தின் அக்காவுக்கு, 3 மகள்கள் 1 மகன். முதல் மகளுக்கு திருமணமாகவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “அது பாக்க கொஞ்சம் குண்டா இருக்கும் சார். பொண்ணு பாக்க வரவங்க எல்லாம், ரெண்டாவது பொண்ணு இல்ல மூணாவது பொண்ணக் கேட்டாங்களா, அதுனால மீதி ரெண்டு பொண்ணுக்கும் நான்தான் சார் கல்யாணம் பண்ணி வெச்சேன். “ என்று எந்தவித வருத்தமும் இல்லாமல் சொன்னார்.“


“நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா ? “ என்று கேட்டதற்கு, “நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? என் தம்பிக்கு மோசமான பழக்கம் உண்டு சார். கஞ்சா அடிப்பான். பவுடர் அடிப்பான். நான்தான் சார் அவனுக்கு, தாஜ் ஹோட்டல் பக்கத்துல கடை வெச்சுக் குடுத்தேன். மதியம் 12 மணிக்கெல்லாம் வர்ற காச எடுத்துட்டு போய் கஞ்சா அடிக்கப் போயிடுவான் சார். அவன் இந்த மாதிரி இருக்கப்போ, நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம், தம்பி பசங்கள யார் சார் பாக்கறது ? அவங்கள படிக்க வெக்க வேண்டாமா சார் ? இப்போ பாரு சார். தம்பி பையன படிக்க வைச்சேன். அவன் டிசிஎஸ்ல வேலப் பாக்குறான் சார். தம்பி பொண்ணு ஏபிடி பார்சல் சர்வீசுல வேலப் பாக்குது. நான் கல்யாணம் பண்ணிருந்தா, இப்படி படிக்க வெச்சுருக்க முடியுமா சார் ?“ என்று எவ்வித கழிவிரக்கமும் இல்லாமல் சொன்னார்.


தன் வாழ்கையையே குடும்பத்திற்காக அர்பணித்து, தன்னை அழித்து பிறரை வாழச் செய்து வருகிறோம் என்ற எவ்வித பெருமித உணர்ச்சியையோ, என் வாழ்க்கை வீணாகப் போய் விட்டது என்ற எவ்வித சுயபச்சாதாபமோ ஞானப்பிரகாசத்திடம் துளியும் இல்லை. “வியாபாரம் எப்பிடிங்க இருக்கு ? “ என்றதற்கு “புதுசா செக்ரேட்ரியட் கட்றாங்களாம் சார். அதுனால கடை வெக்கக் கூடாதுன்னு ஒரே கெடுபிடி சார். டிசம்பர் மாசம் பூரா கடையே வெக்கல சார். அப்பப்போ போலீஸ் வந்து தொந்தரவு பண்ணுவாங்க சார். அதுனால ஒண்ணும் இல்ல சார். நமக்கு கிடைக்கறத யாராலும் தடுக்க முடியாது சார். ஆண்டவன் சும்மாவா உட்ருவான் ? “ என்று மிக இயல்பாகச் சொன்னார் ஞானப்பிரகாசம்.


இரண்டு பெல்ட் வாங்கி விட்டு, அவர் மீதம் தர வேண்டிய 50 ரூபாயை, வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைப்பார் என்று, “அடுத்த வாரம் வரேன், இன்னும் ரெண்டு பெல்ட் வேண்டும், அதுக்கு அட்வான்சா வெச்சுக்குங்க“ என்று கூறி விட்டு புறப்பட்டேன்.


பளீரென்ற புன்னகையுடன், “போய்ட்டு வா சார். அடிக்கடி வந்து போ சார். உன் தோஸ்த கேட்டதா சொல்லு சார்“ என்றார்.ஞானப்பிரகாசம்


நடைபாதையில் கடை வைத்துக் கொண்டு இன்றோ, நாளையோ என்று புதிய தலைமைச் செயலகத்தில் தனது விதியை அடகு வைத்துக் கொண்டு நம்பிக்கையோடு காத்திருக்கும் ஞானப்பிரகாசத்தோடு, பிடிவாதமாக, குடியே முழுகினாலும், புதிய தலைமைச் செயலகம் கட்டி, அதைத் திறந்தே தீருவேன் என்று, காடு அழைக்கும் காலத்தில், பிடிவாதம் பிடிக்கும் நபரை ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை.
சவுக்கு

4 comments:

 1. நாம் தியாகி, தியாகி என்று தலையில் தூக்கி வைத்து ஆடிய, தியாகிகள் எவ்வளவு பேர்..?
  நான் , தியாகி, தியாகி என்று சொல்லிக்கொண்டே , படுக்கையறையில் ஆடிய, தியாகிகள் எவ்வளவு பேர்..?

  இவர்களின் ஆட்டத்தினால் ,உண்மையான தியாகிகள் , நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை சார்.

  பதிவுக்கு நன்றி.. அந்த உண்மைத் தியாகிக்கு, என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. வாழ்க ஞானப்பிரகாசமும் அவர் மீது அன்பு கொண்டுள்ள நீங்களும் உங்கள் மனித நேயமும்.

  ராதாகிரிட்டிண் சாலையில் உள்ள உட்லண்ட்சில் ஒரு காலணி வல்லுனர்,அவரது பெல்ட் ,காலணிகள் கவணிப்பு, சென்னை வரும்போதெல்லாம் வாடிக்கை.

  ReplyDelete
 3. சார்.. நெகிழ்ச்சியான சம்பவங்களின் இயல்பான தொகுப்பு.
  நல்ல மனிதர்களின் நட்பு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
  அடுத்த முறை அவரை சந்திக்கும் போது நான் கேட்டதா சொல்லுங்க..

  ReplyDelete
 4. negulchiya irundhunga... ivara kandippa paathuruppen spencer pogum podhu... aana adutha vaati pogum podhu kanna thirandhu paakuren...

  pakirvukku nadri... :)

  ReplyDelete