Thursday, April 30, 2009

தம்பியின் உண்ணா விரதமும் அண்ணாவின் கவிதையும்


தமிழக அரசியல் வாரப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கவிதை
எழுதியவர் நக்கீரன்.
படம் ஒப்பாரி

சுத்தமானது என் சமாதி
சத்தியமாய்ச் சொல்கிறேன் !

ஆண்டுக்கு இரண்டு முறை தான்
தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள்
பிறந்த நாளில் ஒரு முறை
மரித்த நாளில் மறு முறை

அது என்ன ஏப்ரல் 27ல்
என் சமாதியில் இத்தனை கூட்டம் !!
கடும் கூச்சல் !!
ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை
ஏன் எழுப்பினார்கள் என்பது
புரியாமல் தவித்தேன்.

சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை
ஆனால், அதிகாலையில் தம்பி வந்ததுமே
தூக்கம் கலைந்திற்று ! துக்கம் கவ்விற்று !!
வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா ?

அதிகாலை என் இருப்பிடத்தைத்
தேடி வந்த காரணத்தை கருணாநிதி கொன்னதும்
தான் தெரிந்துகொண்டேன்.
இலங்கைத் தமிழர்களுக்காக
என் சமாதியில் உண்ணாவிரதமாம் !

அருமை தம்பி கருணாநிதி
பச்சை தண்ணீரை கூட அருந்தாமல்
அவர்தம் மனைவியரோடு
உண்ணாவிரதம் இருந்தது என்னை
உருக வைத்தது.

ஆருயிர் இளவலைக் காணவந்த
கட்டிளங்காளைக் கூட்டமோ
சமாதிக்கு வெளியே விற்கும் சமுசாவையும்
ஐஸ்கிரீமையும் தின்றதுதான்
மனதை நெருடியது.

என் தம்பியோ உயிரை ஓர் கையிலும்
ஆட்சியை ஓர் கையிலும்
பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும்
சக்கர நாற்காலியில்
நகர்ந்து வருவது.. .. ஐயகோ
என்னே கொடுமை !

இத்தனை கொடுமைகளுக்கிடையே
இலங்கைத் தமிழர் பிரச்சினையுமா தம்பி !
அந்தப் பிரச்னைக்குத் தான் எப்போதோ
சமாதி கட்டிவிட்டோமே தம்பி !
காலமெல்லாம் ஆட்சியை தக்க வைப்பதெப்படி ?
மத்தியிலும் மாநிலத்திலும்
நம் கழத்தின்... ... மன்னித்துவிடு தம்பி !
நம் குடும்பத்தின் குரலே
ஒலிக்க வைப்பதெப்படி ?

இனியவை நாற்பதும்
கைப்பற்றுவதெப்படி ? அதிலேயும்
மதுரை மகனுக்குத் தனி கவனம் !
தப்பித் தவறி மீண்டும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
அழகிரிக்கு என்ன துறை ?
கனிக்கும் தயாவுக்கும் என்னென்ன ?
இப்படி எண்ணம் ஓட
எப்படி வரும் மனம்
இலங்கைத் தமிழரின் நலம் காண ?

நம் தம்பிமார்களின் மண்டையை
உடைத்து குருதியை குடித்த
காங்கிரஸை எதிர்த்துதான்
ஆட்சியையே பிடித்தோம் !
அதே காங்கிரஸ்காரனை
ஆட்சிக்கட்டிலில் ஏற்ற
தாங்கிப் பிடிப்பது இன்று
என் அருமை தம்பியல்லவா ?
அந்த அளவுக்கு உயர்ந்திருக்கும்
உனது மனிதாபிமானம்.
யாருக்கும் புரியவில்லையே தம்பி !

இருப்பது ஓர் உயிர் -
போனால் போகட்டும் என்று
மேடைதோறும் முழக்கமிடுவாய் !
இந்த வசனத்தைத் தான் நான் உன்னிடம்
அதிகமாகக் கேட்டதுண்டு !
அதே வசனத்தை
என் சமாதியில் மீண்டும் ஒரு முறை
கேட்டபோது, உனக்கு அருகே இருந்த
ஏர்கூலர் காற்றில் என் சட்டை
ஆடுவதுபோல் பரவசப்பட்டேன் !

தினம் தினம் ஆயிரக்கணக்கில்
தமிழர் பிணத்தின் ரத்தங்களை
உறிஞ்சிய ராஜபக்ஷேவைக் கண்டித்து
நீ நடத்திய உண்ணாவிரதத்தில் கண்ட
காட்சிகள் என் கண் முன்னே விரிகிறது தம்பி !

1967ல் நாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தோமே !
அந்த தரித்திரம்தான் இலங்கைத் தமிழர்களுக்கு
இன்னலாக வந்து விட்டது தம்பி !
என்ன தம்பி ! எழுந்து விட்டாய் !
நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடு !
காங்கிரஸ்காரனே தமிழ்நாட்டை ஆண்டிருந்தால்
இந்தச் சிலுவையை நீ சுமந்திருப்பாயா ?

நமது முதுகில் சவாரி செய்து
கொண்டிருக்கும் காங்கிரஸ்காரன் தலையில்
அல்லவா ஆணி இறங்கியிருக்கும் -
அதற்காகத்தான் சொன்னேன்
நான் ஆட்சியைப் பிடித்தது தரித்திரமென்று !

ஆயிரம் பிரச்னைக்கு நடுவில்
இலங்கைத் தமிழர் நலன் கருதி
என் சமாதிக்கு வந்தோயே தம்பி !
நீ வந்ததால்தான், ஆண்டுக்கு இரண்டுமுறை
சுத்தமாகும் என் சமாதி,
மூன்றாவது முறையாகச் சுத்தமானது!

நன்றி தம்பி! நன்றி !!
நான் போட்ட கணையாழியை
பத்திரமாக வைத்திருந்தாய் !
நாம் வகுத்த கொள்கை ? அதுதான்
என் சமாதியிலேயே எப்போதோ
அடக்கம் செய்யப்பட்டுவிட்டதே தம்பி !

-நன்றி: தமிழக அரசியல்

1 comment: